தமிழ்நாட்டின் பல சார் பதிவாளர் அலுவலகங்களில் பான்கார்டு இணைக்காமலே பத்திரப்பதிவு செய்யப்படுவதாகவும், இதனால் பல முறைக்கேடுகள் நடைபெறுவதாகவும் வருமான வரித்துறைக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. அதனடிப்படையில், சந்தேகத்துக்குரிய சார் பதிவாளர் அலுவலகங்களைக் கண்டறிந்து, அங்கு வருமான வரித்துறையின் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்த முடிவுசெய்தனர்.
அதைத் தொடர்ந்து, முதற்கட்டமாக சென்னைக்கு அருகிலிருக்கும் செங்குன்றம், திருச்சிக்கு அருகிலிருக்கும் உறையூர் சார் பதிவாளர் அலுவலகங்களில் பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் கடந்த 4-ம் தேதி சோதனை மேற்கொண்டு, கோப்புகளை ஆய்வுசெய்தனர். 16 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்தச் சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கிடைத்திருப்பதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.
இது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள், ``உறையூர், செங்குன்றம் ஆகிய இரண்டு இடங்களில் நடந்த சோதனையில், பான்கார்டு இணைக்கப்படாமல் செங்குன்றத்தில் ரூ.2,000 கோடி, உறையூரில் ரூ.1,000 கோடி மதிப்பிலான பத்திரப்பதிவுகள் நடந்திருப்பது முதற்கட்ட ஆய்வில் தெரியவந்திருக்கிறது. மேலும், ஆய்வுகள் தொடர்ந்து நடந்துவருகின்றன" எனத் தெரிவித்திருக்கின்றனர்.
அதைத் தொடர்ந்து, சென்னை, திருநெல்வேலி மண்டலங்களைச் சேர்ந்த மாவட்ட பதிவாளர்கள் 36 பேரை அதிரடியாகப் பணியிட மாற்றம் செய்து பதிவுத்துறை செயலர் ஜோதி நிர்மலாசாமி நேற்று முன்தினம் உத்தரவிட்டார். இந்த நிலையில், நேற்று சென்னை மண்டலத்துக்குட்பட்ட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 78 சார் பதிவாளர்களையும் கூண்டோடு மாற்றி உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.
from India News https://ift.tt/l2t9QGc
0 Comments