ஒரு டாஸ்மாக், 40 கைம்பெண்கள்: கடையை அகற்றக்கோரி கையில் தாலிக்கயிற்றுடன் போராட்டம்!

தஞ்சாவூர் அருகே செயல்படும் டாஸ்மாக் கடையினால் ஏராளமான பெண்கள் தங்கள் கணவரை இழந்துள்ளனர். ஓர் ஊராட்சியில் மட்டும் சுமார் 40 கைம்பெண்கள் உள்ளனர். இதற்குக் காரணமான டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என ஏராளமான பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கையில் மஞ்சள் தாலிக்கயிற்றுடன் சமீபத்தில் நூதனப் போராட்டம் நடத்தினர்.

டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி போராடிய பெண்கள்

தஞ்சாவூர், அம்மாபேட்டை அருகே உள்ள புளியக்குடி மேலத்தோப்பு கிராமத்தில் டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. அப்பகுதி மக்கள் வெளியே சென்று வரக்கூடிய பிரதான சாலையில் அந்த டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இதனால் அந்த வழியாகச் செல்லும் பொதுமக்கள், மாணவ, மாணவியர் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளை குடிமகன்கள் போதையில் கிண்டல் செய்வதால் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

மேலும், `டாஸ்மாக் கடையில் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால் விபத்துகள் ஏற்படுவதுடன் உயிரிழப்பு ஏற்படுகிறது. உடனடியாக அந்த டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்’ என இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூர் போராட்டம்

இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு தாலிக்கயிற்றை கையில் பிடித்தபடி போராட்டம் நடத்தினர்.

இது குறித்து இந்திய மாதர் தேசிய சம்மேளத்தின் மாவட்டத் தலைவர் தாமரைச்செல்வியிடம் பேசினோம்... ''மேலத்தோப்பில் உள்ள டாஸ்மாக் கடையினால் தினமும் மக்கள் பலவிதமான இன்னல்களைச் சந்திக்கின்றனர். ஆண்கள் பலர் மதுவுக்கு அடிமையாகின்றனர்.

தொடர்ந்து மது குடிப்பவர்கள் அந்த பாதிப்பில் இறந்து விடுவதால் அப்பகுதியில் பல இளம் பெண்கள் கணவரை இழந்த நிலையில் உள்ளனர். ஓர் ஊராட்சியில் மட்டும் 40 கைம்பெண்கள் இருப்பது வேதனைக்குரியது. அவர்களின் குடும்ப எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கிறது. இதற்கு காரணமான டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் கடையை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை.

தாமரைச்செல்வி

இதனால் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏராளமான பெண்களுடன் கையில் மஞ்சள் தாலி கயிறை பிடித்து கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினோம். பின்னர் மாவட்ட ஆட்சியர் தீபம் ஜேக்கப்பிடம் மனு கொடுத்தோம் அவர் நடவடிக்கை எடுப்பதாகக் கூறியிருக்கிறார்’’ என்றார்.

ஆனால், ’’சென்ற வாரம் போராட்டம் நடைபெற்ற நிலையில் இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை’’ என்று வருத்தத்துடன் கூறுகின்றனர் பெண்கள்.



from India News https://ift.tt/aPyXo8j

Post a Comment

0 Comments