``அரசுப் பேருந்துகளில் வரைமுறைகளை மீறி விளம்பரங்கள் செய்யப்படுகிறது!" - எம்.ஆர்.விஜயபாஸ்கர் காட்டம்

அ.தி.மு.க சார்பில் மதுரையில் வரும் 20 -ம் தேதி மாநாடு நடைபெற இருக்கிறது. இதற்காக, அனைத்து மாவட்டத்தில் இருந்தும் அ.தி.மு.க-வினரை அழைத்துச்செல்ல, ஏற்பாடு நடைபெற்று வருகிறது. அந்த வகையில், அந்த மாநாட்டுக்கு கரூர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் ஆயத்தப் பணிகளை செய்து வருகின்றனர். முதல்கட்டமாக, கரூரில் அது தொடர்பான ஸ்டிக்கர்களை 100 ஆட்டோக்களில் ஒட்டும் நிகழ்ச்சியை, முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சரும், அ.தி.மு.க கரூர் மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

அதன்பிறகு, செய்தியாளர்களை சந்தித்த அவர், ``கரூர் மாவட்டத்தில் அ.தி.மு.க-வினர் சார்பில் மதுரை மாநாடு குறித்து சுவர் விளம்பரங்களை செய்து வருகிறோம். ஆனால், 'அதற்கு அனுமதி இல்லை' என்று காவல்துறையினர் தடுத்து வருகின்றனர். ஏன் தடுக்கிறீர்கள் என்று காரணம் கேட்டால், கரூர் எஸ்.பி அனுமதியளிக்க வேண்டாம் என்று சொல்லியுள்ளதாக கூறி, காவல்துறையினர் நாங்கள் சுவர் விளம்பரங்கள் செய்வதை தடுத்து வருகின்றனர். ஆனால், தமிழகத்தில் வேறு எந்த மாவட்டத்திலும் இதுபோன்று சுவர் விளம்பரங்கள் எழுதுவதற்கு தடை இல்லை.

’பல்லவன் இல்லம் அடகு வைக்கப்பட்டது யார் ஆட்சியில்?’ - தி.மு.கவுக்கு எம்.ஆர். விஜயபாஸ்கர் கேள்வி

ஆனால், கரூரில் உள்ள நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சுவர் விளம்பரம் எழுதக்கூடாது என தெரிவிக்கின்றனர். ஆனால், கரூரில் தி.மு.க-வினர் மேற்கொண்டு வரும் சுவர் விளம்பரங்கள் குறித்து கேட்டால், அது குறித்து அவர்களை எதுவும் செய்ய முடியாது என கூறுகின்றனர். கரூர் மாவட்டத்தில் தி.மு.க-வினர் சுவர் விளம்பரம் எழுத விடாமல் அராஜகத்தில் போலீஸ் துணையுடன் ஈடுப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அ.தி.மு.க சார்பில் சுவர் விளம்பரம் எழுதப்பட்டு வருகிறது. ஆனால், தி.மு.க-வினர்களின் அராஜகத்தால், கரூர் மாவட்டம் மட்டும் தனித்தீவு போல உள்ளது. அ.தி.மு.க-வின் சுவர் விளம்பரங்களை தடுப்பதினால், மதுரையில் கலந்து கொள்ளும் மக்கள் கூட்டத்தை தடுக்க முடியாது. மதுரை மாநாட்டில் கரூர் மாவட்டத்தில் இருந்து சுமார் 20,000 பேர் பங்கேற்பார்கள்.

அரசுப் பேருந்துகளில் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு என்று வரைமுறை இருக்கிறது. ஆனால், அவற்றை எல்லாம் மீறி பேருந்து முழுவதும் ஸ்டிக்கர் ஒட்டுகிறார்கள். சின்ன இடத்தில் அரசு போக்குவரத்து கழகம் என வெளியில் தெரிகிறது. போக்குவரத்து கழகத்தில் வரைமுறைகளை மீறி விளம்பரங்கள் மேற்கொள்ளப்படுகிறது. பேருந்து முழுவதும் விளம்பரம் செய்வதால், அதனை சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்தை ஈர்த்து விபத்துக்களை தான் ஏற்படுத்தும். காசு கொடுத்தால் எங்கு வேண்டும் என்றாலும் ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்வார்கள்.

ஸ்டிக்கர் ஒட்டும் எம்.ஆர்.விஐயபாஸ்கர்

பீர் கம்பெனி விளம்பர டி சர்ட் போட்டு கிரிக்கெட் பார்க்க வரும் அமைச்சர் உதயநிதி, அரசுப் பேருந்தில் பீர் விளம்பரம் போடாமல் இருப்பார்களா, அந்த நிறுவனமே அவர்களுடையது தான். போக்குவரத்துக் கழகத்தில் கூட அவர்கள் பணம் செலுத்தி விளம்பரம் செய்வார்கள். கொரோனா ஊரடங்கு முடிந்து முந்தைய அ.தி.மு.க அரசு மதுக்கடைகளை திறந்த போது, கறுப்பு சட்டை அணிந்து தி.மு.க-வினர் போராட்டம் நடத்தினர். ஆனால், இப்பொழுது தமிழக முழுவதும் சட்டவிரோதமாக 24 மணி நேரமும் மது விற்பனை நடக்கிறது. இந்தியா முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் சேவை என்று விளம்பர போர்டுகள் இருக்கும். அதுபோல, தமிழகத்தில் 24 மணி நேரமும் மதுபானம் கிடைக்கிறது. இந்த விடியா அரசு மக்களுக்கு கொடுக்கும் பரிசு இதுதான்" என்றார்.



from India News https://ift.tt/ZrPnDwA

Post a Comment

0 Comments