முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போது, அ.தி.மு.க-வின் அதிகாரப்பூர்வமான நாளேடாக நமது எம்.ஜி.ஆரும், சேனலாக ஜெயா டி.வி-யும் செயல்பட்டு வந்தன. அவர் மறைவுக்கு பிறகு, ஏற்பட்ட குழப்பம் காரணமாக, நமது எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயா டிவி டி.டி.வி.தினகரன் தரப்பினர் கவனித்து வருகின்றனர்.
இதனால், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இணைந்து 'நமது அம்மா' என்ற நாளேட்டை தொடங்கினர். அதில்தான், அதிமுக-வின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு, கட்சி நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை வெளிவந்தன. அதேபோல, 'நியூஸ் ஜெ' என்ற டி.வி சேனலும் தொடங்கப்பட்டது.
இந்நிலையில் தான் ஒற்றைத் தலைமை விவகாரத்தால், பன்னீர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர், நமது அம்மா நாளேட்டின் நிறுவனர் என்ற லிஸ்டில் இருந்து பன்னீர் நீக்கப்பட்டு, தற்போது எடப்பாடி பெயர் மட்டும்தான் நீடிக்கிறது.
இதற்கிடையே, அ.தி.மு.க-வின் தனி அணியாக செயல்படும் பன்னீர், தனது தரப்புக்கு பலம் சேர்க்கும்விதமாக நிர்வாகிகளை நியமித்து வருகிறார். இந்நிலையில், தனது தரப்புக்காக 'தொண்டன்' என்ற நாளேட்டை பன்னீர் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதேபோல, தொண்டன் பெயரில் சேட்டிலைட் டி.வி-யும் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பன்னீர் அணியின் தரப்பில் விசாரித்தபோது, " ஒரு இயக்கமாக செயல்படும் தலைவரின் கொள்கைகளை, அறிவிப்புகளை, இயக்கம் தொடர்பான செய்திகளை வெளியிட நாளேடு மிக முக்கியமானது. டி.டி.வி தினகரனுடன் இணைப்பு ஏற்பட்டாலும், நமது எம்.ஜி.ஆரிலும், ஜெயா டி.வி-யிலும் ஓ.பி.எஸ் குறித்து செய்திகள் வெளியிடப்படுவதில்லை. எனவேதான், தனது கொள்கையின்படி, 'தொண்டன்' என்ற நாளேடு தொடங்க இருக்கிறார் பன்னீர்.
அதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் வெற்றிக் கரமாக முடிக்கப்பட்டுவிட்டது. இன்னும் ஓரிரு வாரத்துக்குள், புது பொலிவுடன் 'தொண்டன்' வெளிவரும். அதற்கு ஆசிரியராக, நமது அம்மா ஆசிரியராக இருந்தவரும், எங்கள் தரப்பின் கொள்கை பரப்பு செயலாளராக இருக்கும் மருது அழகுராஜ் நியமிக்கப்படவுள்ளார். அதன்படி, இந்த தொண்டன் துரோகிகளான எடப்பாடி தரப்பு மற்றும் திமுக அரசின் அராஜகங்களை, அதிமுக தொண்டர்களுக்கு மட்டுமல்லாது, தமிழ்நாட்டு மக்களுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டும். அதேபோல, டி.வி சேனல் தொடங்கவும் ஆரம்பக்கட்ட பணிகள் நடக்கிறது. அதுதொடர்பான அறிவிப்பும் விரைவில் வெளியாகும்." என்கிறார்கள்.
from India News https://ift.tt/7dOx6Uv
0 Comments