ரா.அர்ஜூனமூர்த்தி, மாநிலப் பொறுப்பாளர், பா.ஜ.க
``திரையுலகம் என்பது பொதுமக்கள் நேரடியாகவும் அதிகமாகவும் அணுகக்கூடிய ஒரு துறை, அவ்வளவுதான். எல்லாத் துறைகளில் பயணிப்பவர்களுக்கும் உண்டான அனைத்து உரிமைகளும் அவர்களுக்கும் நிச்சயம் உண்டு. திரைத்துறையினருக்கும் சமுதாய நோக்கம் இருக்கலாம். வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் மிகச் சிறப்பான முறையில் அவர்கள் வசமிருந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி, தமிழ்நாட்டின் முதல்வர்களானார்கள். திரைத்துறையினரின் அரசியல் வருகையை இதுபோல கடுமையாக விமர்சிப்பது ஏற்புடையதல்ல. உதயநிதி ஸ்டாலின்கூட அங்கிருந்து வந்தவர்தானே... அவருக்கு இருக்கும் அதே உரிமை எல்லோருக்கும் இருக்கிறதுதானே... கருத்து சொல்கிறேன் என்ற பெயரில் ஒருவரின் ஜனநாயக உரிமையை யாரும் கேள்விக்குள்ளாக்குவது சரியானதல்ல. மக்களுக்கு நல்லது நினைக்கும் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். நடிகர் விஜய் அரசியலில் ஈடுபட விரும்பினால், அவர் களத்துக்கு வந்து மக்களைச் சந்திக்கட்டும். அவரை ஏற்பதா, புறக்கணிப்பதா என்பதை மக்கள் முடிவுசெய்யட்டும். ஜனநாயகத்தில் வாக்குரிமை இருக்கும் ஒவ்வொருவருக்கும் அரசியலில் ஈடுபடவும் உரிமை உண்டு. அதை யாரும் மறுக்க முடியாது!’’
ஆளுர் ஷா நவாஸ், சட்டமன்ற உறுப்பினர் வி.சி.க
``எந்தவொரு தனிப்பட்ட நடிகரின்மீதான வெறுப்பினாலோ அல்லது நடிகர்கள் அரசியலுக்கு வரக் கூடாது என்கிற தொனியிலோ இந்தக் கருத்து சொல்லப்படவில்லை. அதேநேரம், அரசியல் கட்சித் தலைவர்கள் களத்தில் நின்று போராடி, மக்களைச் சந்தித்து, வழக்குகளில் சிக்கி, நாட்டின் அனைத்துப் பிரச்னைகளிலும் கவனம் செலுத்தி, 30, 40 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் அனுபவத்துடன் பயணப்படுகிறார்கள். அவ்வாறான சூழலில் ‘நான் அரசியலுக்கு வருகிறேன்’ என அறிவிக்கவே செய்யாத ஒருவரைத் தொடர்ந்து பேசுபொருளாக முன்வைப்பது துயரமானது. கடந்த பல ஆண்டுகளாக திரு.ரஜினிகாந்த் அவர்களை மையப்படுத்தி ஊடகங்கள் தீவிரமான விவாதங்களை நடத்தின. ஆனால், அவர் அரசியலில் ஈடுபடப்போவதில்லை என்று அறிவித்தபோது முட்டாளாக்கப்பட்டது யார்... எவ்வளவு நேர விரயம்... அதனால்தான் திரைப் புகழை மட்டுமே வைத்து ஒருவரைப் பேசுபொருளாக்குவது அபத்தம். அதை வைத்தே மற்ற அரசியல் விவகாரங்களை மடைமாற்றுவது தவிர்க்கப்பட வேண்டியது. எங்கள் கட்சித் தலைவரின் இந்தக் கருத்தை விஜய் ரசிகர்களே ஏற்றுக்கொண்டிருக்கின்றனர். அந்த அளவுக்கு அதில் நியாயமும் உண்மையும் இருக்கின்றன!’’
from India News https://ift.tt/EzdWS0o
0 Comments