தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே எரசக்கநாயக்கனூர் கிராமத்தில் பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள், கால்நடை பராமரிப்புத்துறை, தேனி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் ஆகியவை இணைந்து தனியார் மண்டபத்தில் கால்நடை மருத்துவ முகாம் நடத்தினர்.
இந்த முகாமை கம்பம் தி.மு.க எம்.எல்.ஏ ராமகிருஷ்ணன் தொடங்கிவைத்தார். அப்போது, `கால்நடை மருத்துவ முகாம் பெயரளவுக்கு மட்டுமே நடத்தப்படுகிறது. இந்தப் பகுதிக்கு எம்.எல்.ஏ மேம்பாட்டு நிதியிலிருந்து எந்த நிதியும் இதுவரை நீங்கள் ஒதுக்கீடு செய்யவில்லை. அடிப்படை வசதிகளுக்காக எவ்வித நிதி ஒதுக்கீடு செய்யாத நீங்கள் எந்த முகத்தோடு எங்கள் ஊருக்கு வருகை தந்தீர்கள். எங்கள் ஊருக்குள் நீங்கள் வர வேண்டாம்... பலமுறை தங்களிடம் மனு கொடுத்தும் தங்கள் வீட்டிற்கு வந்து மனு கொடுத்தும் கண்டுகொள்ளாத எம்.எல்.ஏ நீங்கள், எங்கள் ஊருக்கு வர வேண்டாம்' எனக் கூறி முற்றுகையிட்டனர். எம்.எல்.ஏ-வுடன் வந்தவர்கள் பொதுமக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மலை மாடுகள் மேய்ச்சலில் ஈடுபடுவோர் தங்களுக்கு வனத்துறையினர் நெருக்கடி கொடுப்பதாகவும், இதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் முறையிட்டனர். அதையடுத்து எம்.எல்.ஏ., ராமகிருஷ்ணன் அங்கிருந்து புறப்பட முற்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் கூச்சலிட்டனர். அப்போது எம்.எல்.ஏ., உடன் வந்த நபர், பொதுமக்களை கோபமாக கடுமையான வார்த்தைகளால் திட்டிய காரணத்தால், அந்தப் பகுதி இளைஞர்கள் அவரோடு தள்ளுமுள்ளு செய்தனர்.
இதையடுத்து ஆத்திரமடைந்த மக்கள், எம்.எல்.ஏ-வை வெளியே செல்லவிடாமல் தடுத்து மண்டபத்தைப் பூட்டிக் கொண்டனர். தகவலறிந்த போலீஸார், பூட்டப்பட்ட மண்டபத்துக்கு 20 நிமிடங்களுக்குப் பிறகு சென்று, எம்.எல்.ஏ-வை மீட்டுச் சென்றனர். எம்.எல்.ஏ-வை பொதுமக்கள் சிறைப்பிடித்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
from India News https://ift.tt/8M3eQ6U
0 Comments