தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தமிழ்நாடு அரசுக்கும் இடையே மோதல் போக்கு தொடர்கிறது. ஆளுநர், அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பேசும் கருத்துகள், அரசியல் அரங்கில் பேசுபொருளாகின்றன, பல நேரங்களில் சர்ச்சைகளையும் கிளப்புகின்றன. அண்மையில் ஆளுநர் ரவி வடலூரில் பேசியிருந்ததும், பல்வேறு தரப்பினரைக் கொதிப்படையச் செய்திருந்தது.
இத்தகைய சூழலில், இன்று சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கவிருக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சரும் பல்கலைக்கழக இணைவேந்தருமான பொன்முடி, பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், பல்கலைக்கழகப் பதிவாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொள்கின்றனர். மதியம் 12:30 மணிக்கு இந்த பட்டமளிப்பு விழாவானது தொடங்குகிறது. அதை முன்னிட்டு பெரியார் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருக்கின்றன.
விழாவில் கலந்துகொள்ளவிருக்கும் ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் சிலர் கறுப்புக்கொடி காட்டவிருப்பதாக போலீஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், போலீஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டு, தீவிரக் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.
இதற்கிடையில் நேற்று முன்தினம், `ஆளுநர் ரவி வருகையையொட்டி, கருப்பு நிற ஆடைகளை அணிந்து வருவதைத் தவிர்க்க வேண்டும்' என பெரியார் பல்கலைக்கழகம் சுற்றறிக்கை ஒன்றினை அனுப்பியிருந்தது.
இந்தச் சுற்றறிக்கைக்கு மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் அரசியல் கட்சியினரிடைய கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் சுற்றறிக்கையைத் திரும்பப் பெற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
from India News https://ift.tt/CuUA1E2
0 Comments