தஞ்சாவூரில் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமையில் அ.தி.மு.க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, தி.மு.க அரசை கண்டித்து நடைபெற உள்ள ஆர்ப்பாட்டம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட ஆர்.காமராஜ், ``தொகுதிக்கு 3,500 புதிய உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும். அந்த இலக்கை நீங்கள் செய்து முடிக்க வேண்டும். நேரம் இல்லை, இனி அடுத்தடுத்து வேலைகள் இருப்பதாக அண்ணன் (எடப்பாடி பழனிசாமி) சொல்லியிருக்கிறார்.
இன்றைக்கு தமிழகத்தில் உள்ள சூழல் உங்களுக்கு தெரியும், கடந்த மூன்று நாள்களாக அ.தி.மு.க ஆட்சி எப்போது வரும் என ஒரே பேச்சாக இருக்கிறது. தி.மு.க ஆட்சிக்கு வந்தால் அவர்கள் கூடவே எதவாது ஒரு பிரச்னை சேர்ந்து வந்துவிடும். 2ஜி வந்தது போல், தற்போது ரூ.30,000 கோடி ஆடியோ விவகாரம் வந்திருக்கிறது. இதை எந்தக் காலத்திலும் மறக்க முடியாது.
அதைச் சொன்னது சாதாரண நபர் கிடையாது புத்திசாலி மந்திரி என பாராட்டப்பட்ட பி.டி.ஆர் தான். அவர் குரல் இல்லை என்றால் ஏன் அவரின் இலாகாவை மாற்ற வேண்டும். ஆர்.எஸ்.பாரதி இ.பி.எஸ் மீது வழக்கு தொடுப்போம் என்கிறார். ஜெயலலிதா மீது பொய் வழக்கு போட்டனர். அப்போது எதிர்க்கட்சித்தலைவராக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன், இது அரசு தொடுத்த வழக்கு இதனை அரசே வாபஸ் பெற்றுக் கொள்ளமால் அதை நான் முன்மொழிகிறேன் என்றார்.
ஆனால் தைரியமிக்கவரான ஜெயலலிதா, `மடியிலே கனமில்லை, வழியிலே பயமில்லை' இதை நான் வாபஸ் பெறவில்லை சட்டரீதியாக எதிர்க்கொள்கிறேன் என்றார். ஜெயலலிதா மீது போடப்பட்ட வழக்கு திட்டமிட்ட சூழ்ச்சி. தி.மு.க விரித்த வஞ்சக வலை அதை அவர்கள் தொடர்ந்து செய்தனர். இதனால் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஜெயலலிதா பாதிக்கப்பட்டார். இதை அ.தி.மு.கவினரால் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது.
ஜெயலலிதாவுக்கு தி.மு.கவினரால் இழைக்கப்பட்ட அநீதியை, சதியை, மிகப்பெரிய துரோகத்தை நாம் ஏற்றுக்கொள்ளவே முடியாது. இன்றைக்கு அது தி.மு.க பக்கம் திரும்பியிருக்கிறது. முதல்வரே சிறை செல்வதற்கு வாய்ப்பிருப்பதாக அண்ணாமலை சொல்கிறார். அமலாக்கதுறையால் கைதுசெய்யப்பட்டுள்ள செந்தில் பாலஜி தி.மு.க-வில் அமைச்சராக இருக்கிறார் என்பதால் கைதுசெய்யப்பட்டிருக்கிறார் என்றால் இல்லை.
உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகே அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்திருக்கிறது. அன்றைக்கு வாக்கிங் போயிட்டு வந்ததாகச் சொன்னார் ஆனால் அவர் ஜாக்கிங் போயிட்டு வந்தது போல் இருந்தார். வீட்டுகுள் போகும் போது சந்தோஷமாக சென்ற செந்தில் பாலாஜி உள்ளே ஏதோ ஆவணங்கள் சிக்கியதால் நெஞ்சில் கை வைத்து கொண்டு படுத்து விட்டார். பணம் வாங்கியது உண்மை ஆனால் திருப்பி கொடுத்து விட்டேன் என செந்தில் பாலாஜி சொல்வதை எப்படி சட்டம் ஏற்றுக்கொள்ளும்.
இதை ஒத்துக்கொள்ள முடியாது என உச்ச நீதிமன்றம் சொல்லியிருக்கிறது. அதனடிப்படையில் கைதுசெய்யப்பட்ட செந்தில் பாலாஜியை பார்ப்பதற்கு ஸ்டாலின் ஓடுகிறார். உதயநிதி உள்ளிட்ட அமைச்சர்களும் ஓடுகின்றனர். அன்றைக்கு முழுவதும் அங்கேயே இருக்கின்றனர். இந்தப் பதற்றம் தி.மு.க-வினருக்கு இதுவரை இருந்ததில்லை. ஏன் என்றால் ரூ.30,000 கோடி ஆடியோ விவகாரமும் இதில் அடங்கியிருக்கிறது.
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அமலாக்கத்துறைக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தின்படியே செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். செந்தில் பாலாஜி, உண்மையை சொல்லிவிடுவாரோ என்ற பயத்தில் ஸ்டாலின் அவரை தட்டிக்கொடுத்திருக்கிறார். இதில் பயந்து நடுங்கி கொண்டிருக்கும் ஸ்டாலின் எங்களை அடித்தால் திருப்பி அடிப்பேன் என வீரவசனம் பேசியிருக்கிறார். வீராப்பு பேசி வீழ்ந்தவர்கள் தி.மு.க-வினர். 2 ஜியில் வீராப்பு பேசியவர்கள் எழுந்து நின்றார்களா இல்லை. ரூ.30,000 கோடி விவகாரம் தலையில் சுற்றிய பாம்பாக இருந்து கொண்டிருக்கிறது.
செந்தில் பாலாஜி மீது குற்றம் சாட்டப்பட்டவுடன் அவரை பதவியிலிருந்து நீக்கினார் ஜெயலலிதா. அ.தி.மு.கவில் மீண்டும் அமைச்சராகி விட வேண்டும் என செந்திபாலாஜி முயற்சி செய்தார். அதற்காக இரண்டு பேர் அவரை இழுத்து உள்ள போட்டுக்கலாம் என பேசினர் ஆனால் செந்தில் பாலாஜிக்கு இன்னொரு முறை இடமில்லை என்ற இபிஎஸ் அதில் உறுதியாக இருந்தார். குற்றப்பின்னணி கொண்ட செந்தில் பாலாஜி, சிறைக்கு செல்லாமல் நெஞ்சை பிடித்து கொண்டு மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார். ராசா, கனிமொழியெல்லாம் ஆறு மாதம் சிறையில் இருந்தனர். நாம் ஆளுநரைச் சந்தித்து செந்தில் பாலாஜியை பதவியிலிருந்து எடுக்க வலியுறுத்தியிருக்கிறோம்.
அதை வலியுறுத்தி தான் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. 2 ஜியை ஆர்ப்பாட்டங்கள் வாயிலாக மக்களிடம் கொண்டு சேர்த்தோம். அதுவே 2011-ல் மீண்டும் நாம் ஆட்சிக்கு வருவதற்கு மிகப்பெரிய காரணமாக அமைந்தது. டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு ரூ.10 வாங்கவில்லை என சொல்ல முடியுமா. டாஸ்மாக்கில் சப்ளை செய்யப்படும் மதுப்பாட்டில்களில் பாதிக்கு மேல் சீல் இல்லை, கலால் வரியில்லை, பாரில் விற்கப்படுவதும் போலி சரக்கு தான் இது எந்தகாலத்திலும் நடக்காத ஒன்று. இதை இல்லை என்று சொல்லமுடியுமா.
செந்தில் பாலாஜி மீது எடுப்பட்டிருக்கும் நடவடிக்கையை மக்கள் ஆதரிக்கின்றனர். சாராயத்தால் 23 பேர் இறந்திருக்கின்றனர். நீதி, நியாத்திலிருந்து யாரும் தப்ப முடியாது. அது தான் இன்றைக்கு நடந்து கொண்டிருக்கிறது. ராம்மோகன் ராவ் அலுவலகத்தில் சோதனை நடத்தியபோது முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என்ற ஸ்டாலின் இன்றைக்கு தனக்கு என்ற போது என்னா துடி துடிக்கிறார். செந்தில் பாலாஜி ஒன்றும் தி.மு.க பிராண்ட் கிடையாது. பல கட்சியிலிருந்து தி.மு.க-விற்கு சென்றவருக்காக ஏன் அவர் துடிக்கிறார். அவரை உத்தமபுத்திரன் என காட்டிக் கொள்வதற்காக முயற்சிக்கிறார். தாங்கள் பாதிக்கப்படுவோம் என்பதற்காகவே பயப்படுகிறார்'' என்றார்.
from India News https://ift.tt/xqAeD1G
0 Comments