பிரதமர் மோடி நான்கு நாள்கள் அரசு முறைப் பயணமாக அமெரிக்காவுக்குச் சென்றிருக்கிறார். முதல் நாளில் அமெரிக்காவின் மிகப்பெரும் தொழிலதிபர்களைச் சந்தித்துவிட்டு, யோகா தினத்தன்று ஐ.நா-வில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய மோடி, அதன் பின்னர் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அவரின் மனைவி ஜில் பைடனை வெள்ளை மாளிகையில் சந்தித்தார். அதோடு, பைடனுக்கு சந்தனப்பெட்டியையும், ஜில் பைடனுக்கு 7.5 கேரட் வைரக்கல் ஒன்றையும் பரிசாகத் தந்தார் மோடி.
இதுவொருபுறமிருக்க, `மணிப்பூர் பற்றியெரியும்போது நமது பிரதமர் ஐ.நா-வில் யோகா செய்துகொண்டிருக்கிறார்' என எதிர்க்கட்சியினர் மோடியை விமர்சித்துவருகின்றனர். இந்த நிலையில், `ஜனநாயகம் எங்கள் நரம்புகளில் ஓடுகிறது' என மோடி கூறியிருக்கிறார். முன்னதாக அதிபர் பைடனுடன் செய்தியாளர்கள் சந்திப்பில் மோடி கலந்துகொண்டார்.
அப்போது மோடியை நோக்கிப் பத்திரிகையாளர் ஒருவர், ``இந்தியா தன்னை உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என நீண்டகாலமாகப் பெருமைப்பட்டுக் கொள்கிறது. ஆனால் அங்குள்ள மத சிறுபான்மையினருக்கு எதிராகப் பாகுபாடு காட்டுவதாகவும், விமர்சனம் செய்பவர்களை அடக்குவதாகவும் பல மனித உரிமை குழுக்கள் கூறுகின்றன.
வெள்ளை மாளிகையின் கிழக்கு அறையில் நீங்கள் நிற்கும் வேளையில், பல உலகத் தலைவர்கள் ஜனநாயகத்தைப் பாதுகாக்க உறுதி எடுத்திருக்கின்றனர். இப்படியான சூழலில் உங்கள் நாட்டில் முஸ்லிம்கள் மற்றும் பிற சிறுபான்மையினரின் உரிமைகளை மேம்படுத்தவும், பேச்சுரிமையை நிலைநிறுத்தவும் என்ன நடவடிக்கைகளை எடுக்க நீங்களும் உங்கள் அரசாங்கமும் தயாராக இருக்கிறீர்கள்?" எனக் கேள்வியெழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த மோடி, ``பைடன் கூறியதுபோல ஜனநாயகம் எங்கள் டி.என்.ஏ-வில் இருக்கிறது. ஜனநாயகம் எங்கள் நரம்புகளில் ஓடுகிறது. ஜனநாயகத்தின் அடிப்படைக் கொள்கைகளை எங்கள் அரசு கொண்டிருக்கிறது. அதன் அடிப்படையில் எங்கள் அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு, அதன்படி நாடு இயங்கிக்கொண்டிருக்கிறது. ஜனநாயகத்தை வழங்க முடியும் என்பதை நாங்கள் எப்போதும் நிரூபித்திருக்கிறோம். சாதி, சமயம், மதம், பாலினம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் ஜனநாயகம் வழங்க வேண்டும் என்று நான் கூறுகையில், பாகுபாடுகளுக்கு முற்றிலும் இடமில்லை. ஜனநாயகத்தைப் பற்றிப் பேசும்போது அதில், மனித விழுமியங்களோ, மனிதநேயமோ, மனித உரிமைகளோ இல்லையென்றால் அது ஜனநாயகம் இல்லை.
அதனால்தான் ஜனநாயகத்தை ஏற்கும்போதும், அதில் வாழும்போதும் பாரபட்சம் என்ற கேள்விக்கே இடமில்லை. அதுதான் எங்களின் அடிப்படைக் கொள்கை. அரசாங்கத்தால் வழங்கப்படும் சலுகைகளும், அதன் நன்மைகளும் தகுதியுள்ள அனைவருக்கும் கிடைக்கும். அதனால்தான் இந்தியாவின் ஜனநாயக விழுமியங்களில் சாதி, மதம், வயது, அல்லது இருப்பிடத்தின் அடிப்படையில் எந்தவித பாகுபாடும் இல்லை" என்றார்.
இந்தச் செய்தியாளர் சந்திப்பு நடைபெறுவதற்கு முன்பாக அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, ``ஒருவேளை நான் பிரதமர் மோடியிடம் உரையாடியிருந்தால், இந்தியாவில் முஸ்லிம் சிறுபான்மையினரின் உரிமைகளை நீங்கள் பாதுகாக்கவில்லையென்றால், இந்தியா பிளவுபட வாய்ப்பிருக்கிறது என்று அவரிடம் கூறியிருப்பேன்" என ஊடக பேட்டியொன்றில் கூறியிருந்தார்.
from India News https://ift.tt/WN1Cegu
0 Comments