புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்கத்தில் எம்.பி தொகுதி மேம்பாட்டு நிதியில் இரண்டு கழிப்பறைகள் கட்டப்பட்டு வருகிறது. திருச்சி எம்.பி திருநாவுக்கரசர் அதைப் பார்வையிட்டு ஆய்வுசெய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,``பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சிகளின் கூட்டத்தைத் தொடர்ந்து, சிம்லாவில் கூட்டம் நடைபெறவிருக்கிறது. அதற்குள் கருத்து வேறுபாடுகளை ஆராய்ந்து அடுத்த கூட்டத்தில் அவை தீர்க்கப்படும். காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை வரும் நாடாளுமன்றத் தேர்தலில், ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர். கூட்டணியில் 18 கட்சிகள் தேசியக் கட்சிகளாக இருந்தாலும், மாநிலங்களில் குறிப்பிட்ட சீட்கள்தான் இருக்கின்றன.
உத்தரப்பிரதேசத்தைத் தவிர்த்து நான்கு மாநிலங்களில் 40 சீட் இருக்கும், மற்ற மாநிலங்களில் மிகக்குறைவாகதான் இருக்கும். அந்தக் கட்சிகளின் சார்பில் பிரதமர் வரமுடியாது. எண்ணிக்கை அடிப்படையில் எல்லா மாநிலத்திலும் இருக்கும் பெரிய கட்சி காங்கிரஸ். காங்கிரஸ் பெரும்பான்மையான இடங்களில் வெற்றிபெற வாய்ப்பிருக்கிறது. ராகுல் காந்தி பிரதமராக வர வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். இதை தேர்தலுக்கு முன்னதாக சில கட்சிகள் ஏற்றுக்கொள்ளும். சில தேர்தலுக்குப் பின்பு ஆதரிக்கும். ஆனால், காங்கிரஸை மையப்படுத்திதான் தேர்தல் இருக்கும்.
ஜனநாயக நாட்டில், விமர்சனங்கள் அடிப்படை உரிமையாகும். கூட்டணியில் இருப்பதால், கூட்டணி தர்மத்தைக் காப்பது என்பது வேறு. அதற்காக எதுவுமே பேசவே கூடாது என்று சொல்ல முடியாது. திருமாவளவன் தனக்கு உடன்பாடு ஏற்படாத சில விஷயங்களில் கருத்து சொல்கிறார். திருமாவளவன் கருத்து சொல்வதாலயே தி.மு.க கூட்டணியிலிருந்து வெளியே செல்வார் என்றும், அல்லது அ.தி.மு.க-வை ஆதரிப்பார் என்றும் சொல்ல முடியாது. அவர் தி.மு.க கூட்டணியைவிட்டுப் பிரிந்து செல்ல மாட்டார். காங்கிரஸில் தமிழகத்தின் மாநிலத் தலைவர் பதவிக்கு யாரை நியமித்தாலும் ஏற்றுக்கொள்வார்கள்.
காங்கிரஸ், பா.ஜ.க போன்ற தேசியக் கட்சிகளுக்கு மாநிலத் தலைவர் பதவி நிரந்தரப் பதவி இல்லை. தலைமை என்னை நியமித்தாலும் ஏற்றுக்கொண்டு பணியாற்றுவேன். வேறு யாரை நியமித்தாலும், அவர்களுடன் சேர்ந்து பணியாற்றுவேன். தமிழ்மொழி தவிர்க்க முடியாத உலக முதன்மொழிகளில் ஒன்று. தமிழ்மொழி குறித்து பேசுவதும், சில நாடுகளில் இருக்கை அமைப்பதாலும், மனமாற்றம் வந்து பா.ஜ.க-வை மக்கள் ஆதரிப்பார்கள் என்று நினைத்தால் அது ஏமாற்றத்தில்தான் முடியும். பா.ஜ.க ஆளும் மாநிலம், அதற்குத் துணையாக இருக்கும் மாநிலங்களில் அமலாக்கத்துறை சோதனை நடந்திருக்கிறதா, அமைச்சர்கள்மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறதா என்றால் இல்லை.
மாறாக சில மாநிலங்களை மட்டும் குறிப்பிட்டு சோதனை நடக்கிறது. அரசு இயந்திரம் தவறாக நடத்தப்படுகிறது. இதற்கு பல மாநில, மத்திய அமைச்சர்கள் இலாகா இல்லாத அமைச்சர்களாக இருந்திருக்கின்றனர். அதேபோல், செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராகத் தொடர்வதில் சர்ச்சை ஏதும் இல்லை. தமிழகத்தில் விலைவாசி உயர்வு பிரச்னை வரும்போது காங்கிரஸ் மாவட்டத் தலைவர் அதைக் கண்டித்து அறிக்கை விடுகிறார். கூட்டணி தர்மத்துக்கு உட்பட்டு அதே நேரத்தில் மக்களின் நலன் பாதிக்காதவாறு ஆளும் அரசுக்கு எதிராக அவ்வப்போது குரல் கொடுத்துதான் வருகிறோம்" என்றார்.
from India News https://ift.tt/IUxN4bi
0 Comments