அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் குறித்து பேசியதற்கு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்மீது விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார். முன்னதாக பிரதமர் மோடி, கடந்த வாரம் நான்கு நாள்கள் அமெரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார்.
அப்போது அமெரிக்காவின் தற்போதைய அதிபர் ஜோ பைடனுடன், பிரதமர் மோடி செய்தியாளர்களைச் சந்திப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, ``பிரதமர் மோடியை நான் நேரில் சந்தித்திருந்தால், `இந்தியாவில் வாழும் முஸ்லிம்களின் உரிமைகள் பாதுகாக்கப்படாவிட்டால் நாடு பிளவுபடக்கூடும்' என்ற வாதத்தை முன்வைத்திருப்பேன்'' என்று ஊடக நிகழ்ச்சியொன்றில் ஒபாமா கூறியிருந்தார்.
இந்த நிலையில், டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் இது பற்றிப் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ``அமெரிக்காவில் இந்தியாவுக்காகப் பிரதமர் மோடி பிரசாரம் செய்துகொண்டிருந்தபோது, அமெரிக்க முன்னாள் அதிபர் முஸ்லிம்கள் குறித்து பேசியதைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன். இன்னொரு நாடு இதில் சம்பந்தப்பட்டிருப்பதால், இதை நிதானத்துடன் சொல்கிறேன். என்னவென்றால், எங்களுக்கு அமெரிக்காவுடன் நட்பு வேண்டும். அங்கேயும் இந்தியாவிலுள்ள மத சுதந்திரம் குறித்த கருத்துகளைப் பெறுகிறோம்.
அமெரிக்காவின் முன்னாள் அதிபரின் (ஒபாமா) ஆட்சியின் கீழ் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக இருக்கும் ஆறு நாடுகளில் 26,000-க்கும் மேற்பட்ட குண்டுகள் வீசப்பட்டன. அப்படியிருக்க அவரின் குற்றச்சாட்டுகளை மக்கள் எப்படி நம்புவார்கள்... மேலும், ஒரு பிரதமராக மோடிக்கு 13 விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் ஆறு விருதுகள் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கும் நாடுகளால் வழங்கப்பட்டது" என்று கூறினார்.
from India News https://ift.tt/f1awRFY
0 Comments