மகாராஷ்டிராவில் பா.ஜ.க மற்றும் சிவசேனா(ஷிண்டே) கூட்டணி ஆட்சியில் இருக்கிறது. ஆனால் கடந்த ஒரு மாதமாக இரு கட்சிகளுக்கும் இடையே பல்வேறு பிரச்னைகளில் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. அமைச்சரவையை விரிவாக்கம் செய்வதில் இருவருக்கும் இடையே ஒருமித்த கருத்து எட்டப்படாமல் இருக்கிறது. இரண்டு நாள்களுக்கு முன்பு ஷிண்டேயின் சிவசேனா வெளியிட்டு இருந்த விளம்பரம் பா.ஜ.க.வை எரிச்சலுக்கு உள்ளாக்கி இருக்கிறது. அந்த விளம்பரத்தில் கணக்கெடுப்பில் துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸை விட ஷிண்டேயிக்கு அதிக ஆதரவு இருப்பதாகவும், மகாராஷ்டிராவுக்கு ஷிண்டே, இந்தியாவுக்கு மோடி என்று விளம்பரம் செய்திருந்தனர். இதற்கு பா.ஜ.க. தலைவர்கள் பலரும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தனர். முதல்வர் ஷிண்டேயுடன் நடக்க இருந்த நிகழ்ச்சியை தேவேந்திர பட்னாவிஸ் ரத்து செய்தார்.

பிரச்னை பெரிதானவுடன் இப்பிரச்னைக்கு ஏக்நாத் ஷிண்டே முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அதாவது ஏற்கனவே வெளியிட்ட விளம்பரத்தில் திருத்தம் செய்து மீண்டும் வெளியிட்டுள்ளார். புதிய விளம்பரத்தில் ஷிண்டே-பட்னாவிஸ் தலைமைக்கு 49 சதவீத மக்கள் ஆதரவு இருப்பதாக மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்பு போல் இருவருக்கும் எத்தனை சதவீத ஆதரவு இருக்கிறது என்று தனித்தனியாக குறிப்பிடவில்லை. அதேசமயம் இதில் சிவசேனா அமைச்சர்கள் புகைப்படம் மட்டும் இடம் பெற்றுள்ளது.
புதிய விளம்பரம் குறித்து மாநில பா.ஜ.க.தலைவர் சந்திரசேகர் பவன்குலே அளித்த பேட்டியில், ``ஷிண்டேயும், தேவேந்திர பட்னாவிஸும் பெரிய மனம் படைத்தவர்கள். பா.ஜ.க. - சிவசேனா இடையே பிரச்னையை ஏற்படுத்த யார் இந்த விளம்பரத்தை கொடுத்தார்கள் என்பது முக்கியம் அல்ல. எதிர்காலத்தில் இது போன்று நடக்ககூடாது என்பதுதான் முக்கியம்” என்று தெரிவித்தார்.
பா.ஜ.க எம்.பி. அனில் போண்டே இது குறித்து கூறுகையில், ``தவளை எப்படி இந்த அளவுக்கு பெருத்தது என்பது முக்கியமல்ல. ஆனால் தவளை யானையாகாது. ஷிண்டே முதல்வர். அவரை பா.ஜ.க. உட்பட அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளோம். ஷிண்டேயிக்கு யாரோ தவறான ஆலோசனை கொடுத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். தானே பகுதி தான் மகாராஷ்டிரா என்று ஷிண்டே நினைத்துக் கொண்டிருக்கிறார். தானே மட்டுமே ஒட்டுமொத்த மகாராஷ்டிரா கிடையாது. முன்பு மும்பைதான் மகாராஷ்டிரா என்று உத்தவ் தாக்கரே நினைத்துக்கொண்டிருந்தார். இப்போது தானே மட்டும்தான் மகாராஷ்டிரா என்று ஷிண்டே நினைத்துக்கொண்டிருக்கிறார்” என்று ஷிண்டேயை கடுமையாக விமர்சித்தார்.
இது குறித்து சிவசேனா(உத்தவ்) எம்.பி.சஞ்சய் ராவத் கூறுகையில், ``ஷிண்டேயின் மனதில் என்ன இருக்கிறது என்பது தெளிவாகி இருக்கிறது. அவர்கள் மனதில் பால் தாக்கரேயோ அல்லது தேவேந்திர பட்னாவிஸோ கிடையாது. கடும் விமர்சனம் எழுந்த பிறகு விளம்பரத்தில் திருத்தம் செய்துள்ளனர். இதன் மூலம் இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பது தெளிவாகிறது. நாளையே இந்த அரசுக்கு பல வருத்தங்கள், வயிற்று வலி, மாரடைப்பு கூட வரலாம்” என்றார்.
புதிய விளம்பரம் குறித்து கருத்து தெரிவித்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சுலே, ``டெல்லி தலையிட்டதால் தான் விளம்பரத்தில் திருத்தம் செய்திருப்பது தெளிவாக தெரிகிறது. டெல்லியில் விளம்பரம் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. விளம்பரத்தில் குறிப்பிடப்பட்ட கணக்கெடுப்பை யார் நடத்தியது என்று தெரிய வேண்டி இருக்கிறது. அவர்களது கணக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக 42 சதவீதம் பேர் மட்டுமே கருத்து தெரிவித்துள்ளனர் ” என்று தெரிவித்துள்ளனர்.
`` இந்த விளம்பரத்தை நாங்கள் வெளியிடவில்லை என்றும், எங்களின் நல விரும்பி இந்த விளம்பரத்தை வெளியிட்டு இருக்கவேண்டும்” என்று சிவசேனா அமைச்சர் சம்புராஜ் தெரிவித்தார்.
from India News https://ift.tt/NGPu1HA
0 Comments