சநதல பலஜ அமசசர பதவ வவகரம: மணடம மடட மதம மதலவர ஆளநர - அடததத எனன?

தமிழக அமைச்சரவையில் செந்தில் பாலாஜி தொடர வேண்டும் எனத் தமிழக அரசு ஆளுநருக்குப் பரிந்துரைத்த நிலையில், அவர் அதை ஏற்க மறுத்து விளக்கக் கடித்ததை அனுப்பினார். பின்னர், தமிழக அரசு சார்பாக விளக்கம் கொடுக்கப்பட்டது. அதை ஏற்று அமைச்சரைவை மாற்றத்துக்கு ஒப்புதல் அளித்திருக்கிறார்.

ஆனால், செந்தில் பாலாஜி மீது குற்றவியல் வழக்கு பதியப்பட்டிருப்பதால், அவர் அமைச்சராகத் தொடர்வதற்கு மறுப்பு தெரிவித்து ஆளுநர் மாளிகையிலிருந்து அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் அன்று இரவே தமிழக அரசு அமைச்சரவை மாற்றத்துக்கும், செந்தில் பாலாஜி அமைச்சராகத் தொடர்வதற்கும் அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டிருக்கிறது.

செந்தில் பாலாஜி

ஆளுநர் மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், செந்தில் பாலாஜியை அமைச்சராகத் தொடர தமிழக அரசு ஆணை பிறப்பித்திருப்பது மீண்டும் அதிகார ’தீ’யை மூட்டியிருக்கிறது. அமைச்சராக யார் தொடரலாம், தொடரக் கூடாது என்பதை உறுதிசெய்ய வேண்டியது யார்... இந்த அதிகார மோதலில் தமிழக அரசு - ஆளுநரின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன... என்னும் அடுக்கடுக்கான கேள்விகள் எழுந்திருக்கின்றன.

ஆளுநர் சட்டப்படிதான் நடக்கிறார்!

ஒருபக்கம் திமுக - ஆளுநர் என்னும் அடிப்படையில் இந்த விவகாரம் சென்றுகொண்டிருக்கும் நிலையில் அ.தி.மு.க., தன் பங்குக்கு ஆளுநர் சட்டப்படிதான் இந்த உத்தரவை வழங்கியிருப்பதாக அவருக்கு ஆதரவாகக் கருத்துகளைச் சொல்லிவருகிறது. இது குறித்து அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன், ``போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி பணம் வாங்கிய வழக்கு நான்கு ஆண்டுகளாக இங்கு நடந்துவருகிறது. இந்த வழக்கு ஏன் அதிமுக ஆட்சியின்போது விசாரிக்கப்படவில்லை எனக் கேட்கிறார்கள். திமுக ஆட்சியில்தான் உச்ச நீதிமன்றம், ’இதை இரண்டு மாதங்களில் முடிக்க வேண்டும்’ எனத் தீர்ப்பளித்ததை நினைவூட்டுகிறேன். அதன் அடிப்படையில்தான் அவர்மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்திருக்கிறது. இதுவரை தமிழகத்தில் அமைச்சராக இருந்தவர் ஒருவர் கைதுசெய்யப்பட்ட எந்த வரலாறும் இல்லை. அப்படிக் குற்றச்சாட்டு எழுந்த பின்பும் அவர் அமைச்சராகத் தொடர்வது ஜனநாயகத்துக்கு விரோதமானது.

வைகைச் செல்வன்

குற்றவியல் வழக்கில் தடுப்புக் காவலில் இருக்கும் அமைச்சர் பதவியில் தொடரக் கூடாது எனச் சொல்வதற்கு ஆளுநருக்கு உரிமை இருக்கிறது. ஆளுநர் சட்டப்படிதான் இந்த நிராகரிப்பைச் செய்திருக்கிறார். ‘அமைச்சராக இருந்தால்தான் பாதுகாப்பு’ எனக் கருதி அவரை அமைச்சராகத் தொடர விருப்பம் தெரிவித்திருக்கின்றனர். ஆனால், அது ஜனநாயகத்துக்கு அழகல்ல என்பதால், அவரை அமைச்சராகத் தொடர ஆளுநர் மறுப்பு தெரிவித்திருக்கிறார்” என்றார்.

`ஆளுநருக்கு மரியாதையைக் காப்பாற்றத் தெரியலை!’

இதில் திமுக கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக திமுக செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், ``அமைச்சரவையில் புதிதாக ஒருவரைச் சேர்க்க வேண்டுமென்றால் அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்ய ஆளுநர் தேவை. மாற்றத்தை உறுதிசெய்ய அவருக்கு அதிகாரம் இல்லை. குறிப்பாக, அந்த அமைச்சர் பொறுப்பேற்கும்போதும்கூட `அமைச்சராக நான்...’ என்றுதான் காப்புப் பிரமாணம் செய்கிறார். துறைரீதியாகச் சொல்லி அவர்கள் பதவி ஏற்பதில்லை. எந்தத் துறையை, யாருக்குக் கொடுக்க வேண்டும் என்பதை ஆளுநர் தீர்மானிக்க முடியாது.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

ஒருவேளை முதலமைச்சர் வேண்டுமானால் ஆளுநருக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பலாம். அதுவும்கூடத் தேவையில்லை. அதை தலைமைச் செயலாளர் அனுப்பினால்கூடப் போதும். இது மரியாதை நிமித்தமாக ஆளுநருக்குச் சொல்லப்படும் தகவல். ஆனால் கொடுக்கும் மரியாதையைக் காப்பாற்றிக்கொள்ள அவருக்குத் தெரியவில்லை. முன்பு, ஆளுநருக்குச் சட்டம்தான் தெரியாது என்று நினைத்தோம். ஆனால், அவருக்கு மரியாதையைக் காப்பாற்றிக்கொள்ளவும் தெரியவில்லை என்பது உறுதியாகியிருக்கிறது.

`ஆளுநர் டெல்லியில் இருக்கட்டும்...செலவு மிச்சம்!’

அவர், `தமிழகம் என்றுதான் பேசுவேன், அண்ணா, பெரியாரைப் பேச மாட்டோம்’ என்றார். அதன் பிறகு தமிழக அரசு கொடுத்த பதிலடியால், தேநீர் விருந்து அழைப்பிதழில் ’தமிழ்நாடு’ என அச்சிட்டார். அவர் சட்டவிரோதமாகச் செய்யும் நடவடிக்கைக்கு எதிராக தமிழக அரசு சட்டப்படி, ’நீங்கள் ஒன்றுமில்லை’ என உணர்த்துகிறோம். தமிழக மக்களும், `ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருக்கிறார். அதன் பிறகு தமிழக அரசு என்ன செய்யும்?’ என நினைத்தனர். இந்த நிலையில், அரசாணையை வெளியிட்டிருக்கிறோம். ஆகவே, இதிலிருந்து அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை என்பதை மக்கள் அறிந்துகொள்வார்கள். இவரின் இந்தச் செய்கை அவர் மதிப்பை மேலும் குறைத்துக்கொண்டே செல்லும்.

ஆளுநர் ஆர்.என்.ரவி

இனிமேலும் இவர் மோதல் போக்கை மாற்றிக்கொள்ளாமல் இருந்தால், அவரைக் கண்டுகொள்ளாமல் இருப்பதே சரியானது என்னும் முடிவுக்கு திமுக வரும். ஆட்சி அமைப்புக்கும், சட்டசபையைத் தொடங்கிவைக்கவும் அவர் தேவைப்படுகிறார். மற்றப்படி ஆளுநர்கள் மாநிலத்தில் எதற்காக இருக்க வேண்டும்... இதற்காகத்தான் அண்ணா சொன்னார், “பதவிப் பிரமாணம் செய்த பிறகு அவர்களை டெல்லியில் வைத்துக்கொள்ளுங்கள்” என்று. மாநில அரசுகளுக்குச் செலவுகள் மிச்சமாகுமல்லவா! ’புடிச்சு வெச்ச பிள்ளையார்போல்’ மாநிலத்தில் அவர்கள் இருக்க வேண்டிய அவசியமில்லை. ஒருவேளை, மாநிலத்தில் அசாதாரணமான சூழல் இருந்தால் டெல்லியிலிருந்து மாநிலத்துக்கு அனுப்பிவையுங்கள். இப்படியான முடிவுக்கு திமுக தலைமை நிச்சயம் தள்ளப்படும்“ என்றார்.

`தி.மு.க நீதிமன்றத்துக்குச் செல்லுமா?’

இது குறித்து மூத்த பத்திரிகையாளர் ப்ரியன், “இந்த அமைச்சரவை மாற்றத்துக்கான காரணத்தை முதலமைச்சர்  ஸ்டாலின் சொல்லியிருக்கவேண்டிய தேவையில்லை. அவ்வாறு குறிப்பிட்டு, கொடுக்கப்பட்ட ஆலோசனையே தவறானது. அதைக் குறிப்பிட்டிருப்பதால்தான் அது தவறாகயிருப்பதாக ஆளுநர் கூறி, அதைத் திருப்பி அனுப்பினார். அதேபோல், இந்த விவகாரத்தில் பலரும் ஜெயலலிதா 1994-ம் ஆண்டு, சென்னா ரெட்டி ஆளுநராக இருந்தபோது அமைச்சர்களை அவருக்கு அறிவிக்காமல் மாற்றியதைக் குறிப்பிடுகின்றனர். ஆனால், அப்போது அமைச்சர்கள் யாரும் கைதுசெய்யப்படவில்லை. அது நீதிமன்றத்துக்குச் சென்றபோதும், அமைச்சரவை மாற்றத்தை முதலமைச்சர் மேற்கொண்டதற்கு நீதிமன்றம் எந்தத் தடையும் விதிக்கவில்லை.

ப்ரியன்

ஆனால், தற்போது அமைச்சர்மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்திருக்கிறது. எனவே, இது திமுக-வுக்குச் சிக்கலை ஏற்படுத்தலாம். ஆனால், அமைச்சரவை மாற்றத்தை முதலமைச்சர்தான்  முடிவுசெய்ய வேண்டும். இதில் ஆளுநருக்கு எந்த ’ரோலும்’ இல்லை. தொடர்ந்து, திமுக-வும் இதில் பொறுமையாக முடிவெடுக்க நினைக்கிறது. ஆளுநர் இந்த மோதல் போக்கைத் தொடர்ந்தால், எப்படி ஜெயலலிதா காலத்தில் சென்னா ரெட்டியை அழைக்காமல் சட்டசபை கூடியதோ, அது தமிழகத்திலும் நடக்கும்.

`ஆளுநருக்கு எதிராக வழக்கு!’

அதேபோல்  பெண்டிங் மசோதாக்களை அடிப்படையாகவைத்து திமுக வழக்கும் தொடரலாம். ஆனால், அதில் திமுக-வால் வெல்ல முடியுமா என்பதை அறுதியிட்டுச் சொல்ல முடியாது. குறிப்பாக, தெலங்கானா மாநிலத்தில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவுடன், அவர் மசோதாக்களுக்கு உடனடியாக ஒப்புதலும் அளித்தார். அந்த நிலையும் ஏற்படலாம்.

ஆளுநர் ரவி - முதல்வர் ஸ்டாலின்

தவிர,  சில தினங்களாகவே, சட்ட விதிகளை மீறியதாக மாநில அரசுமீது குற்றச்சாட்டை முன்வைத்து ஆட்சிக் கலைப்புக்கு ஆளுநர் அடிபோடலாம்  என்னும் தகவல் வருகிறது. பாஜக கட்சியினர் தாங்கள் எதை நடத்திக் காட்ட வேண்டும் என கற்பனை செய்தார்களோ, அதை வதந்தியாகக் கிளப்பிவிடுகின்றனர். தேர்தல் வரும் நேரத்தில் பாஜக செய்தால் அது மீண்டும் தமிழகத்தில் பாஜக-வுக்கே அடியாகும். அது இந்திய அளவிலும்  எதிர்க்கட்சிகளை இன்னும் வீரியத்துடன் ஒன்றிணைக்க வைக்கும். ஆகவே அதை பாஜக அரசு செய்யாது” என்றார்.



from India News https://ift.tt/9e1lrWR

Post a Comment

0 Comments