எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையால் எந்தப் பலனும் கிடைக்கப் போவதில்லை என ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சியின் (Democratic Progressive Azad Party) தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, ``எதிர்கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்க பீகார் முதல்வர் நிதிஷ் குமார் எனக்கு எந்த அழைப்பும் விடுக்கவில்லை. தேர்தலுக்கு முன்பாக எதிர்கட்சிகளின் கூட்டணியால் எந்தப் பலனும் இல்லை. கூட்டணிக் கட்சிகளுக்குள் வழங்கிக்கொள்வதற்கும் எதுவும் இல்லை.
உதாரணமாக, மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு (மார்க்சிஸ்ட்) எம்.எல்.ஏ-க்கள் கிடையாது. மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸுடன் இரு கட்சிகளும் கூட்டணி வைத்தால் அதனால் யாருக்கு என்ன பலன்? அதேபோல், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எம்.எல்.ஏ. கிடையாது. இந்த மாநிலங்களில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு காங்கிரஸால் என்ன லாபம்....
இதேபோல், ஆந்திராவில் காங்கிரஸுக்கு ஒரு சட்டமன்ற உறுப்பினர் கூட இல்லை. முதல்வர் ஒய்.எஸ் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆளும் ஒய்எஸ்ஆர்சிபிக்கு வேறு எங்கும் எம்.எல்.ஏ-க்கள் இல்லை. காங்கிரஸுடன் ஜெகன் மோகன் ரெட்டி கூட்டணி வைத்தால் யாருக்கு என்ன லாபம்? இவ்வாறுதான் ஒவ்வொரு மாநிலத்தின் நிலையும் இருக்கிறது. எதிர்க்கட்சிகள் ஒற்றுமை என்பது ஒன்றாக புகைப்படம் எடுத்துக்கொள்ள ஒரு வாய்ப்பு. அதுதவிர வேறு ஒன்றுமில்லை.
ஆனாலும், அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் பாஜக-வை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்றுதான் விரும்புகிறேன். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, ஒவ்வொரு எதிர்க்கட்சிக்கும் தங்கள் சொந்த மாநிலங்களைத் தவிர மற்ற மாநிலங்களில் எந்தப் பங்களிப்பும் இல்லை. இரண்டு மூன்று கட்சிகள் இணைந்து மாநிலங்களில் கூட்டணியில் அரசு அமைத்திருந்தால் அது பயனுள்ளதாக இருந்திருக்கும்.
தேர்தலுக்கு முந்தைய கூட்டணியில் எதிர்க்கட்சிகள் 300 இடங்களில் வெற்றி பெற்றால், கூட்டணி இல்லாவிட்டாலும், அதே அளவு இடங்களை ஆளும் கட்சி கைப்பற்றும் நிலை உள்ளது. தேர்தலுக்கு முந்தைய கூட்டணி அல்லது தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி என்பதில் எந்த வித்தியாசமும் இருக்காது. தேர்தலுக்கு முந்தைய கூட்டணியிலும், தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணியிலும் அதே எண்ணிக்கையிலான இடங்களையே ஆட்சியாளர்கள் பெறுவார்கள். தேர்தலுக்குப் பிந்தைய சூழ்நிலையின் கூட்டணியில் தான் அதிக வாய்ப்புகளைப் பார்க்கிறேன்.
காங்கிரஸுக்கு எங்கெல்லாம் வலுவான மாநிலத் தலைமை இருக்கிறதோ, அங்கெல்லாம் கட்சி மீண்டும் முன்னேறி வருகிறது. முன்பு மத்திய தலைமைதான் மாநிலங்களை வழிநடத்தி வந்தது. ஆனால் இப்போது மாநில தலைமை மத்திய தலைமையை இயக்குகிறது. மத்திய நிர்வாகம் தலைமைத்துவத்தை இழந்துவிட்டது, ஆனால் மாநிலத் தலைவர்கள் தங்கள் ஆட்சியை பாதுகாக்கிறார்கள். எனவே, மத்திய தலைமையால் மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறுகிறது என்று யாராவது சொன்னால் அது முற்றிலும் பொய்" எனத் தெரிவித்திருக்கிறார்
from India News https://ift.tt/KJ6TmIk
0 Comments