இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவராக இருந்தவர்தான் பிரிஜ் பூஷண் சரண் சிங். கிட்டத்தட்ட 10 ஆண்டுக்காலம் அந்தப் பொறுப்பில் இருந்த அவர், உத்தரப்பிரதேச பா.ஜ.க-வின் எம்.பி-யாகவும் இருந்துவருகிறார். இந்த நிலையில், இவர் பொறுப்பு வகித்த காலகட்டங்களில் மல்யுத்த வீராங்களைகள் 8 பேருக்குப் பாலியல் தொல்லை (ஒரு மைனர் பெண் உட்பட) கொடுத்ததாக அவர்மீது புகார் முன்வைக்கப்பட்டது. சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்ற வீராங்கனைகள் சாக்ஷி மாலிக், வினோஜ் போகத், பஜ்ரங் புனியா ஆகியோர் கடந்த ஜனவரி மாதமே இவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென போராட்டம் நடத்தினர். கிட்டத்தட்ட 3 நாள்கள் நீடித்த நிலையில், இந்தப் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரிக்க ’மேரிகோம்’ தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் விசாரணை முடிந்து, அறிக்கை தாக்கல் செய்யப்பட்டும், அது வெளியிடப்படவில்லை. புகார்மீது எந்த முன்னேற்றமும் இல்லை என்பதை வலியுறுத்தி, கடந்த ஏப்ரல் மாதம் 23-ம் தேதியிலிருந்து தலைநகர் டெல்லியில் தங்களின் போராட்டத்தை மீண்டும் தொடங்கினர்.
எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் பலர் தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். மேலும், விளையாட்டு வீரர்களும் திரைப்பட கலைஞர்களும் தங்கள் ஆதரவைத் தெரிவித்து வந்தனர். ஆனால், மத்திய அரசு கொஞ்சமும் அசையவில்லை. இந்த நிலையில்தான், கடந்த மே 28-ம் தேதி புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறக்கப்பட்டது. இதை முற்றுகையிடும் நோக்கில் வீராங்கனைகள், வீரர்கள் பேரணியாகச் செல்ல முயன்றனர். அப்போது அவர்களின் பேரணியைத் தடுத்த காவல்துறையினர், அவர்களை வலுக்கட்டாயமாகக் கைதுசெய்தனர். அப்போது வீராங்கனைகள் கீழே தள்ளப்பட்டு, அவர்கள் நடத்தப்பட்ட விதம் பெரும் விமர்சனத்துக்குள்ளானது. எதிர்க்கட்சியினரும், சமூக ஆர்வலர்களும் இதை எதிர்த்து கேள்வி எழுப்பினர்.
``பதக்கம் வென்றபோது `இந்தியாவின் மகள்கள்’ எனப் போற்றப்பட்டவர்கள், இன்று போராடிவருகின்றனர். ஆனால், அன்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்ததாகப் பேசிய பா.ஜ.க அரசு, இன்று கள்ளமௌனம் சாதிக்கிறது" என விமர்சித்தனர்.
இறுதிகட்டமாக, இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண, தான் சர்வதேச போட்டிகளில் வென்ற பதக்கங்களைக் கங்கையில் வீசப்போவதாக அறிவித்த வீராங்கனைகள், கடந்த மாதம் 30-ம் தேதி ஹரித்வாரில் கங்கையை நோக்கிச் சென்றனர். நாட்டுக்காகப் போராடி வாங்கிய பதக்கங்களை ஆற்றில் வீசயிருப்பதை எண்ணி, அங்கு அவர்கள் சிந்திய கண்ணீர் ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கியது.
இதற்கிடையில், விவசாயி சங்கங்கள் பேச்சுவார்த்தை நடத்தி பதக்கங்களை ஆற்றில் எறிவதைத் தடுத்து நிறுத்தினர். இருப்பினும், ``இன்னும் 5 நாள்கள் மட்டுமே அரசுக்குக் கெடு. அதற்குள் குற்றம்சாட்டப்பட்டவர் கைதுசெய்யப்படவில்லை என்றால், நிச்சயமாகப் பதக்கங்களை ஆற்றில் எறிவோம்" என அறிவித்திருக்கின்றனர் வீராங்கனைகள். மேலும், பாரதிய கிசான் யூனியன் என்னும் விவசாய அமைப்பு வரும் 5-ம் தேதி டெல்லி எல்லைகளை அடைத்துப் போராடவிருப்பதாக அறிவித்திருக்கிறது.
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக உலக மல்யுத்தக் கூட்டமைப்பு அறிக்கை வெளியியிட்டிருக்கிறது. அதில், ``பாலியல் புகார்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராடும் இந்திய மல்யுத்த வீரர்கள் நடத்தப்படும் விதம் கண்டனத்துக்குரியது. புகார்மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏமாற்றமளிக்கிறது. கூட்டமைப்பில் கலைக்கப்பட்ட நிர்வாகிகள் குழுக்கள் தேர்தலை விரைந்து நடத்த வேண்டும். அப்படி இல்லையென்றால், இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பு சஸ்பெண்ட் செய்யப்படும்" எனக் கூறப்பட்டிருக்கிறது.
மேலும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி வெளியிட்டிருக்கும் அறிக்கையிலும், “ஒரு மாத காலமாக இந்தப் போராட்டம் நடந்தவருகிறது. இதன் முதற்கட்ட விசாரணை நடந்து முடிந்திருக்கிறது. அடுத்தக்கட்ட விசாரணைக்கு இதை எடுத்துச் செல்ல வேண்டும். இதற்கிடையில் மல்யுத்த வீராங்கனைகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்து, விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
`இத்தகைய பாலியல் புகாரை மத்திய பா.ஜ.க அரசு கையாளும் விதம், உலகளவில் இந்தியாவின் கௌரவத்தை குறைத்துவிட்டது" என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றன.
இப்படியாக, ``குற்றம்சாட்டப்பட்டவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தீவிரமாகப் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆனால், அவர்மீது பா.ஜ.க அரசு நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது. இதற்கு முன்பும் இவர் செய்த குற்றங்கள்மீது ஆளும் பா.ஜ.க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" எனக் கூறி பிரிஜ் பூஷண் சரண் சிங்கின் குற்றப்பின்னணியைத் தோண்டி, சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
பிரிஜ் பூஷண் சரண் சிங்கின் குற்றப்பிண்ணனி:
பா.ஜ.க எம்.பி-யான இவர் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர். திருட்டு, கலவரம், கொலை, மிரட்டல், கொலை முயற்சி, ஆட் கடத்தல் போன்ற பல்வேறு கிரிமினல் குற்றச்சாட்டுகளின்கீழ் இதுவரை ’38’ கிரிமினல் வழக்குகள் பதியப்பட்டிருக்கின்றன.
1. 1992 டிசம்பர் 6-ம் தேதி பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டு கைதாகிய 39 பேரில் இவரும் ஒருவர். ஆனால் கைதுசெய்யப்பட்ட சில நாள்களில் வெளிய வந்துவிட்டார்.
2. 1993-ம் ஆண்டு நடந்த மும்பை குண்டு வெடிப்பில் குற்றம்சாட்டப்படுபவர் தாவூத் இப்ராஹிம். இவரின் அடியாட்களுக்கு சட்டவிரோதமாக அடைக்கலம் கொடுத்து பாதுகாப்பு தந்ததற்காக பிரிஜ் பூஷண், தடா சட்டத்தின் (பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்) கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டு, கைதாகி சில மாதங்கள் சிறையில் இருந்தார்.
3. இவரின் நண்பர் ரவீந்தர் சிங் என்ற நபர் கொலைசெய்யயப்பட்டார். இது தொடர்பாக ஒரு சேனலுக்குப் பேட்டியளித்த பிரிஜ் பூஷண், "நான் கடந்த காலத்தில் ஒரு கொலைசெய்திருக்கிறேன். என் நண்பன் ரவீந்தரைச் சுட்டுக் கொன்ற நபரை நானே துப்பாக்கியால் சுட்டுக் கொன்றேன்” என ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.
4. 2021-ம் ஆண்டு நடந்த ஜூனியர் லெவல் மல்யுத்த போட்டியின்போது, கேமரா முன்னிலையில் மேடையில் ஒரு மல்யுத்த ஒரு வீரரை அறைந்தார் பிரிஜ் பூஷண்.
5. இவருடைய மகன் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்துகொண்டார். இறுதியாக எழுதிய கடிதத்தில் “என் சாவுக்குக் காரணம், என்னுடைய அப்பாதான் காரணம்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
`இத்தகைய குற்றப்பிண்ணனி கொண்ட ஒருவரை பா.ஜ.க அரசு காப்பாற்ற நினைப்பது ஏன்?' என்னும் கேள்வியை எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் முன்வைத்து வருகின்றனர்.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு உறுப்பினர் கனகராஜ் நம்மிடம் பேசுகையில், ``மல்யுத்த வீராங்கனைகள் குற்றச்சாட்டு முன்வைத்திருக்கும் பா.ஜ.க எம்.பி பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது கிட்டத்தட்ட ’38’ வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இவ்வளவு குற்றங்கள் செய்த நபரை எப்படி பார்லிமென்ட்டில் அனுமதிக்கிறார்கள். அவரை ஏன் பா.ஜ.க அரசு தூக்கிப்பிடிக்க வேண்டும். மேலும், இந்த விவகாரத்தில் புகார் கொடுத்தவர்களுக்கு மிரட்டல் கொடுக்கும் வகையில் ’சர்வதேச போட்டிகளில் கலந்துகொள்ள மல்யுத்தப் பயிற்சிக்கு வழங்கப்பட்ட காசை வசூல் செய்ய வேண்டும்’ எனப் பேசியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல், ஜூன் 5-ம் தேதி உத்தரப்பிரதேசத்தில் 11 லட்சம் சீடர்களைக் கொண்டு போக்சோ சட்டத்தைத் தடைசெய்யவேண்டும் என்பதை வலியுறுத்தி பேரணி செல்லவிருப்பதாகக் கூறியிருக்கிறார்.
போக்சோ சட்டத்தில் புகார் அளிக்கப்பட்ட நபரை விசாரணையின்றி கைதுசெய்ய வேண்டும் என்பதைத்தான் சட்டம் சொல்கிறது. ஆனால், அவரைத் தற்போதுவரை கைதுசெய்யவில்லை. உச்ச நீதிமன்றம் சொல்லித்தான் முதல் தகவல் அறிக்கை போடப்பட்டது. ஆனால், நாடாளுமன்றத் திறப்பு விழாவின்போது நீதி கேட்டுப் போராடியவர்கள்மீது 7 மணி நேரத்தில் 7 பிரிவுகளின்கீழ் வழக்கு பதியப்படுகிறது. அதே நேரத்தில் பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான அவர், புதிய நாடாளுமன்றத் திறப்பு விழாவில் எடுத்த புகைப்படங்களுக்கு உற்சாகமாக போஸ் கொடுக்கிறார். மல்யுத்தக் கூட்டமைப்பில் விசாகா கமிட்டி இல்லை. அதை அமைக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. அதேபோல், பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் கேட்பதைவிட பைத்தியக்காரத்தனம் வேறில்லை.
ஹத்ராஸில் ஏழைப் பெண், காஷ்மீரில் சிறுபான்மையினப் பெண், இப்போது உலகம் அறிந்த விளையாட்டு வீராங்கனைகள் என இவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி வழங்கவேண்டும் என்பதில் துளி அளவும் அக்கறையில்லாமல் செயல்படுகிறது மத்திய அரசு. இதை ஆளும் பா.ஜ.க அவமானமாகவோ, சர்வதேச அளவில் பெயர் கெட்டுப்போகும் என்றோ எள்ளளவும் யோசிக்காது" என்றார்.
இது தொடர்பாக தமிழக பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் அஸ்வத்தாமனிடம் விளக்கம் கேட்டோம், ”இந்தியாவின் பெயரை உலக முழுவதுக்கும் கொண்டு சென்றிருக்கிறார் பிரதமர் மோடி. சர்வதேச அளவில் வலிமைமிக்க தலைவர்களுள் ஒருவர். மற்ற நாட்டு பிரதமரே அவரின் காலைத் தொட்டு வணங்குகின்றார். அப்படி இருக்கும் நிலையில், இந்தப் பிரச்னை எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது" என்றார்.
பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது பல குற்ற வழக்குகள் இருப்பது பற்றி கேள்வி கேட்டபோது, ``அவர் மீது முன்வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளில், பாலியல் குற்றங்கள் இல்லை. எனவே, அதைவைத்து இந்தக் குற்றத்தை இவர்மீது திணிக்க முடியாது. மேலும், எப்படி விவசாயப் போராட்டங்கள் ‘டூல் கிட்’ வைத்து திசை திருப்பப்பட்டதோ, அதேபோல் இதிலும் நடப்பதாக சந்தேகம் இருக்கிறது.
மேலும் டெல்லி போலீஸார், போராடும் வீராங்கனைகள் விசாரணக்கு ஒத்துழைப்பு தரவில்லை எனக் கூறுகின்றனர். அவர்களும் விசாரணைக்கு ஒத்துழைப்பு தரவேண்டும்.
போலீஸார் கருத்துக்கும் காதுகொடுக்க வேண்டும். ஆனால், போக்சோ வழக்கின்கீழ் கைது என்பதான முடிவை எடுக்க வேண்டியது போலீஸார்தான். உண்மையான குற்றவாளி கைதுசெய்யப்பட வேண்டும் என்னும் நோக்கத்தில்தான் விசாரணைக்கு வீராங்கனைகள் அழைக்கப்படுகின்றனர். எனவே, ’குற்றம்’ நிரூபிக்கப்பட்டால், அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பா.ஜ.க அரசு தயங்காது” என்றார்.
from India News https://ift.tt/syrqhP3
0 Comments