ஈரோடு மாவட்டம், புஞ்சைபுளியம்பட்டி நகராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இந்த நகராட்சியின் ஆணையாளராக சையது உசேன் பணியாற்றி வந்தார். நகராட்சி பகுதிகளில் கொசு ஒழிப்பு பணிக்காக திருச்சியில் உள்ள தனியார் நிறுவனத்திடம் கொசு ஒழிப்பு மருந்து வாங்கப்பட்டு வந்தது. கடந்த 19-ம் தேதி புஞ்சைபுளியம்பட்டி நகராட்சிக்கு 335 லிட்டர் கொசு மருந்துகளை திருச்சியில் உள்ள நிறுவனத்திடம் இருந்து வாங்கியதாகவும், அதற்காக ரூ.3 லட்சத்து 98 ஆயிரத்து 299 காசோலையாக செலுத்தப்பட்டதாகவும் நகராட்சி பதிவேடுகளில் பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, நகராட்சித் தலைவர் ஜனார்த்தனன், துணைத் தலைவர் சிதம்பரம் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கொசு மருந்து இருப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கிடங்கில் கொசு மருந்து இல்லாதது தெரியவந்தது. இதுகுறித்து ஆணையர் சையது உசேனிடம் கேட்டபோது, அவர் முறையாக பதிலளிக்கவில்லை எனச் சொல்லப்படுகிறது.
இதுகுறித்து நகராட்சி நிர்வாக அதிகாரிகளிடம் நகராட்சி தலைவர் ஜனார்த்தனன் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் திருப்பூர் மண்டல நகராட்சி இயக்குநர் புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கொசு மருந்து வாங்காமல் கணக்கு காட்டியது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், நகராட்சி ஆணையர் சையது உசேன் புதன்கிழமை பணி ஓய்வு பெற இருந்த நிலையில், பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த முறைகேடுக்கு உதவி புரிந்ததாக நகராட்சி சுகாதார ஆய்வாளர் செந்தில்குமாரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
from India News https://ift.tt/GmZzaPO
0 Comments