'ரூ.400 கோடி... மக்களுக்கு அசௌகரியம்' - கிளாம்பாக்கம் பேருந்து நிலைய சர்ச்சை

சென்னை, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து தினசரி சுமார் 2,000 பேருந்துகள் வெளியூர், வெளி மாநிலங்களுக்கு இயக்கப்படுகிறது. இதனை லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த எண்ணிக்கை தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களிலும், தொடர் விடுமுறை தினங்களிலும் அதிகரிக்கும். மேலும் இப்பகுதியை சுற்றி வணிக நிறுவனங்கள், கடைகள், அலுவலகங்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

கோயம்பேடு பேருந்து நிலையம்

மேலும் சாலைகளில் ஆட்டோ, கால் டாக்ஸி, ஆம்னி பேருந்துகள் நிறுத்தப்படுகிறது. இது கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கு வழிவகை செய்கிறது. எனவே இதற்கு தீர்வு காணும் வகையில் கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என கடந்த 2012-ம் ஆண்டு முதல்வராக இருந்த ஜெயலலிதா அறிவித்தார். பின்னர் 2019-ம் ஆண்டு அடிக்கல் நாட்டினார், அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

ரூ.400 கோடி செலவில் அமைய பெற்றிருக்கும் இந்த பேருந்து நிலையம் 2022-ம் ஆண்டு தீபாவளிக்கு பயன்பாட்டுக்கு வந்துவிடும் என அறிவிக்கப்பட்டது. கட்டுமான பணியில் ஏற்பட்ட தொய்வின் காரணமாக 2023-ம் பொங்கல், 2023 தமிழ்ப் புத்தாண்டு என கடைசியாக ஜூன் மாதம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் இந்த முறையும் தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

கோயம்பேடு பேருந்து நிலையம்

ஆனால், 'இந்த பேருந்து நிலையத்தை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வந்து விடுவோம், அப்போது  கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வரும் பேருந்துகளின் எண்ணிக்கை 60% அளவுக்கு குறைவதுடன், பெருங்களத்தூர், தாம்பரம், கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் நெரிசல் பெருமளவில் குறையும்' என்று மார் தட்டி கொள்கிறார்கள், போக்குவரத்து துறை அதிகாரிகள். மறுபுறம் இது தங்களுக்கு அசௌகரியத்தை கொடுக்கும் வகையில் இருப்பதாக குற்றம்ச்சாட்டுகிறார்கள், பொதுமக்கள். என்ன தான் பிரச்சனை?

இதுகுறித்து நம்மிடம் பேசிய பயணிகள் சிலர். "வேளச்சேரி, கிண்டி, அடையாறு, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், நுங்கம்பாக்கம், வடபழனி என எங்கிருந்து வேண்டுமானாலும் எளிதில் கோயம்பேடு பேருந்து நிலையத்தை 30 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரத்துக்குள் அடைந்து விட முடியும். எனவே அலுவலகத்தில் பணியாற்றுவோருக்கு, பல்வேறு தொழில்களில் ஈடுபடுவோருக்கு எளிதாக இருக்கிறது. கிளம்பாக்கம் பேருந்து நிலையம், கோயம்பேட்டில் இருந்து 30 கி.மீ தொலைவில் அமைத்திருக்கிறது.

ஆம்னி பேருந்து

இங்கு செல்ல வேண்டும் என்றால் எம்டிசி பேருந்து, ஆட்டோ, கால்டாக்சி போன்றவற்றை தான் பயன்படுத்த முடியும். இதற்கு கிட்டத்தட்ட 2 மணி நேரம் எடுத்துக்கொள்ளும். பின்னர் அங்கிருக்கும் எம்டிசி பேருந்து நிலையத்தில் இருந்து 1 கி.மீ அளவுக்கு நடந்தால் மட்டுமே பேருந்தில் ஏற முடியும். மின்சார ரயில், மெட்ரோ பயன்படுத்த முடியாத நிலை இருக்கிறது. எனவே இது அனைத்து தரப்பு மக்களுக்கும் அசௌகரியத்தை கொடுக்கும் வகையில் இருக்கிறது. குறிப்பாக வயதானவர்கள், குழந்தைகளுக்கு இது மிகுந்த சிரமத்தை கொடுக்கும்" என்றனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் ஆறுமுக நயினார். "கோயம்பேடு பேருந்து நிலையத்தை பொறுத்தவரை மாநகர பேருந்து, மெட்ரோ இணைப்பு வசதி இருக்கிறது. ஆலந்தூர், கே.கே.நகர், பெருங்களத்தூர், தாம்பரம், பல்லாவரம், திரிசூலம் போன்ற இடங்களில் பயணிகள் இறங்கும் வசதி இருக்கிறது. ஆனால் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து வர வேண்டும் என்றால் மாநகர பேருந்துகளை தான் பயன்படுத்த முடியும்.

ஆறுமுக நயினார்

மின்சார ரயிலை பயன்படுத்த வேண்டும் என்றால், பெருங்களத்தூர், கூடுவாஞ்சேரிக்கு வர வேண்டும். மெட்ரோ இணைப்பும் இல்லை. ஆம்னி பேருந்துகளை கட்டுப்படுத்தி கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இயங்க வைக்க முடியாது. அவர்களிடம் சென்னையில் இருந்து பேருந்துகளை இயக்க நீதிமன்ற ஆணை இருக்கிறது. கோயம்பேட்டில் இருந்து தனியார் பேருந்துகளையும், கிளாம்பாக்கத்தில் இருந்து அரசு பேருந்துகளையும் இயக்கினால், அது தனியாருக்கு சாதகமாக அமையும்.

மக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படுவதுடன் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும். நகர பேருந்துகள் சென்னைக்கு வர தேசிய நெடுஞ்சாலையை குறுக்கே கடக்க வேண்டும். அதற்கு ஒரு பாலம் தேவைப்படும். கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு முன்பு பாலம் கட்டுவதற்கான பணியே 20 ஆண்டுகள் நடந்தது. கிளாம்பாக்கத்தில் இப்போது பாலம் கட்ட ஆரம்பித்தால் கூட எப்போது கட்டி முடிப்பார்கள் என்று அவர்களுக்கே தெரியாது. இதனால் அந்த இடம் மேலும் நெரிசலுக்கு உள்ளாகி, சென்னைக்குள் வாகனங்கள் நுழையும் போது இடியாப்ப சிக்கல் ஏற்படும்" என்றார்.

அனைத்து ஆம்னி பேருந்து முதலாளிகள் சங்க தலைவர் டாக்டர் அன்பழகன்

இதுகுறித்து நம்மிடம் பேசிய அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அன்பழகன். "கோயம்பேட்டில் இருக்கும் ஆம்னி பேருந்து நிலையம் 6.75 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இங்கு 31 டிராவலஸ் அலுவலகங்கள், 80 பிக்கப் பாயிண்ட், 151 பஸ் பார்க்கிங், 14 பயணிகள் கூடம், 22 கடைகள் இருக்கிறது. இதற்குள்ளும், சுற்றியுள்ள பகுதிகளிலும் 270 ட்ராவல்ஸ் அலுவலகங்கள் இயங்கி வருகிறது.

இதில் கர்நாடகா, ஆந்திராவிற்கு பேருந்துகளை இயக்குவது 30 டிரால்ஸ் நிறுவனங்கள் மட்டுமே. 240  டிராவல்ஸ் நிறுவனங்கள் தமிழகத்தின் தென் பகுதிகளுக்கு பேருந்துகளை இயக்குகிறது. சென்னையில் இருந்து சாதாரண நாட்களில் 150 பேருந்துகளும், வார இறுதி நாட்கள் மற்றும் விழாக்காலங்களில் 1450 பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 62 பிக்கப் பாயிண்ட், தற்காலிகமாக 130 பார்க்கிங் மட்டுமே வழங்கப்படுகிறது.

தமிழக அரசு

இது எங்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தும். எனவே பேருந்து நிலையத்தில் அல்லது அருகாமையில் ஆம்னி பேருந்துகளுக்கு 500 பார்க்கிங், 240 அலுவலகங்கள், எரிபொருள் நிரப்பும் ஸ்டேஷன், ஓட்டுநர்களுக்கு ஓய்வறை மற்றும் பேருந்து பராமரிக்க தேவையான மெக்கானிக் செட், எலக்ட்ரீக் செட், Tyre Fitment & Alignment Centre, Body Repair Centre, Water & AC Service Centre போன்ற அடிப்படை தேவைகளை செய்து தர வேண்டும். அதுவரை கோயம்பேட்டில் இருந்து தான் பேருந்துகளை இயக்குவோம்" என்றார்.

இதுகுறித்து விளக்கம் கேட்பதற்காக அமைச்சர் சேகர்பாபுவை பலமுறை தொடர்பு கொண்டும், குறுஞ்செய்தி அனுப்பியும் அவர் பதில் அளிக்கவில்லை. பின்னர் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரை தொடர்பு கொண்டபோது, "எனக்கு எதுவும் தெரியாது. அவர்கள் இயக்க சொன்னால், நாங்கள் பேருந்துகளை இயக்குவோம்" என சுருக்கமாக முடித்துக்கொண்டார்.



from India News https://ift.tt/WrYK2NL

Post a Comment

0 Comments