வேலூர் மாவட்டம், அல்லேரி மலைப் பகுதிக்குட்பட்ட அத்திமரத்துகொல்லையைச் சேர்ந்தவர் பிரியா. இவரின் ஒன்றரை வயதுப் பெண் குழந்தை தனுஷ்காவைக் கொடிய விஷப்பாம்பு தீண்டியது. அதைக் கண்ட பெற்றோர் குழந்தையைத் தூக்கிக்கொண்டு மலையடிவாரத்தில் இறங்கி வந்து, அங்கிருந்து வெகு தூரத்திலுள்ள அணைக்கட்டு அரசு மருத்துவமனைக்குச் சென்றனர். மலையில் சாலை வசதி ஏற்படுத்தித் தராததால், மருத்துவமனையைச் சென்றடைவதில் பெரும் சிரமமும் தாமதமும் ஏற்பட்டன. இதனால், குழந்தையின் உயிரும் பரிதாபமாகப் பிரிந்தது.
அதைவிடக் கொடுமை, ஆம்புலன்ஸ் மூலம் குழந்தையின் உடல் மலையடிவாரம் வரை மட்டுமே கொண்டு செல்லப்பட்டது. அதற்குமேல் பாதை இல்லாததால், சுமார் 10 கிலோமீட்டர் தொலைவிலுள்ள தங்கள் கிராமத்துக்குக் குழந்தையின் உடலை தாய் பிரியா இரு கைகளால் சுமந்தபடியே சென்றிருக்கிறார்.
மனதை உலுக்கிய இந்தத் துயரச் சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்திருக்கும் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, ‘‘குழந்தையின் இறப்புக்கு தமிழக அரசே முழுப் பொறுப்பு’’ எனக் குற்றம்சாட்டியிருக்கிறார். இது தொடர்பாக மேலும் அவர், ‘‘பிரதமரின் கிராமச் சாலை திட்டத்தின்கீழ் சிறிய மற்றும் மலைக் கிராமங்களில் சாலைகள் அமைக்க மத்திய அரசு பெருமளவில் நிதி ஒதுக்கியிருக்கையில், இத்தனை ஆண்டுகளாக வேலூர் போன்ற மாநகரத்தைச் சுற்றியிருக்கும் கிராமங்களில்கூட சாலைகள் அமைக்கப்படவில்லை என்றால், இத்தனை ஆண்டுகளாக ஒதுக்கப்பட்ட நிதி என்னவானது?
சரியான சாலை வசதி இல்லாததால், ஒரு குழந்தை இறந்துபோயிருக்கிறது என்பதைச் சிறிதும் ஏற்றுக்கொள்ள முடியாது. குழந்தையின் சடலத்தைக் கையில் தூக்கிக்கொண்டு பத்து கிலோமீட்டர் தொலைவுக்குக் குழந்தையின் பெற்றோர் நடக்க நேர்ந்தது, அதை விடக் கொடுமையானது. யாருக்குமே வரக் கூடாத துயரத்தின் உச்சம் இது.
ஏற்கெனவே, பட்டியல் சமூக மக்களின் முன்னேற்றத்துக்காக ஒதுக்கப்படும் நிதியைப் பயன்படுத்தாமல் திருப்பி அனுப்பியதுபோல, தற்போது மாநிலத்தின் உட்கட்டமைப்பை மேம்படுத்த மத்திய அரசு ஒதுக்கும் நிதியையும் பயன்படுத்தாமல் என்ன செய்கிறது, தமிழக அரசு? இந்தச் சிறு பெண் குழந்தையின் இறப்புக்கு, தமிழக அரசே முழுப் பொறுப்பு. தமிழக அரசின் புறக்கணிப்பால், இனியும் ஓர் இழப்பு ஏற்படக் கூடாது. தமிழகம் முழுவதும் சரியான சாலை வசதிகள் இல்லாத கிராமங்கள் மற்றும் மலைக் கிராமங்களுக்கான சாலைகளை உடனே அமைக்க வேண்டும். ஏழை, எளிய மக்களின் சாலைப் போக்குவரத்து வசதிகளை உறுதிசெய்ய வேண்டும்’’ என்று கூறியிருக்கிறார்.
from India News https://ift.tt/lSG3OwE
0 Comments