நாடாளுமன்றத் தேர்தல் குறித்த மக்கள் நீதி மய்ய நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம், அதன் தலைவர் கமல் தலைமையில் கோவையில் நடந்திருக்கிறது. சட்டமன்றத் தேர்தல் தோல்வி, தி.மு.க-வுடனான உறவின் எல்லை போன்றவை குறித்து கூட்டத்தில் ஆலோசனை செய்திருக்கிறார்கள். கூடவே, ‘தலைவர் கமல், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறுவதே கட்சியை உயிர்ப்போடு வைத்திருப்பதற்கான வழி. சட்டமன்றத் தேர்தலில் விட்டதை, நாடாளுமன்றத் தேர்தலில் பிடிக்க மீண்டும் கோவையிலேயே அவர் போட்டியிடலாம்” என்று ஒரு தரப்பினர் கூட்டத்தில் யோசனை சொல்லியிருக்கிறார்கள். “ரிஸ்க் வேண்டாம்... தென்சென்னையில் போட்டியிடலாம்” என வேறு சிலர் கூறியிருக்கிறார்கள்.
எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட கமல், ஆலோசித்துவிட்டுச் சொல்வதாகச் சொல்லிவிட்டுச் சென்றாராம். “கட்சி நிர்வாகிகள் எல்லோரும் இங்கே இருக்க, இவர் யாரிடம் ஆலோசித்து முடிவெடுக்கப்போகிறார்?” என முணுமுணுத்தபடியே வெளியேறியிருக்கிறார்கள் நிர்வாகிகள்.
பா.ஜ.க பட்டியல் அணியைச் சேர்ந்த சங்கரின் கொலை, அந்தக் கட்சியின் முன்னாள் தலைவர் தொடங்கி பல முக்கிய நிர்வாகிகளுக்குத் தனிப்பட்ட வகையில் பேரிழப்பாக அமைந்திருக்கிறது. அவர் வாயிலாகக் கிடைத்துவந்த இனிப்பு எதுவும் இனி கிடைக்காதே என்று நினைத்து நினைத்து மருகுகிறார்களாம் அவர்கள். `சங்கர் கொலைக்கு நீதி கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும்’ என அவர் சார்ந்த அணியின் மாநிலத் தலைவர் தடா பெரியசாமி நிர்வாகிகளுடன் ஆலோசித்தாராம். அப்போது, “கொலைசெய்யப்பட்ட சங்கர், பிரபல ரெளடி. அவரின் கொலைக்கு நீதி கேட்டுப் போராடினால் சர்ச்சையாகாதா?” என்று சில நிர்வாகிகள் ஆட்சேபித்திருக்கிறார்கள்.
இருப்பினும், மாநிலம் முழுக்கப் போராட்டம் நடந்திருக்கிறது. ஆனால், தடா பெரியசாமி அதில் பங்கேற்கவில்லையாம்.
பீரங்கி நகரத்தில் பெரிய பொறுப்பிலிருக்கும் மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர், தனக்கு முக்கியமான பதவி வேண்டும் என்று சித்தரஞ்சன் சாலை வீட்டுக் கதவைத் தட்டியிருக்கிறார். `நேரம் வரும்போது நிச்சயம் அழைப்பு வரும்’ எனச் சொல்லி அனுப்பிய சித்தரஞ்சன் சாலை, இதுவரை எந்த அழைப்பும் விடுக்கவில்லையாம். ‘பின்னணியில் என்ன நடக்கிறது?’ என்ற விசாரணையில் இறங்கியவர், தனது பெயர் பரிந்துரைப் பட்டியலிலேயே இல்லை என்பதை அறிந்ததும், விரக்தியின் உச்சத்துக்கே சென்றுவிட்டாராம். ஏன் தன் பெயர் இல்லை என, தனது பழைய தி.மு.க நட்புகளிடம் விசாரித்திருக்கிறார். ‘ஊடகத்துறையில் கோலோச்சும் தி.மு.க குடும்ப சகோதரர்களுடன் நெருக்கமாக இருந்தவர் என `நோட்’ சென்றதாலேயே உங்கள் பெயர் பரிந்துரையில் இல்லை’ என்று காரணம் சொல்லியிருக்கிறார்கள். “அப்படியானால், இனி இந்த ஆட்சி முடியும் வரை நமக்கு எதுவும் கிடைக்காதா?” என்ற விரக்தியில் சோக கீதம் பாடுகிறாராம் அந்த அதிகாரி.
`மே 2-ம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் முடிந்ததும், முதல் ஆளாக வெளியேறிவிட்டார் பி.டி.ஆர்’ என்கிறது கோட்டை வட்டாரம். “வழக்கமாக, அமைச்சரவைக் கூட்டம் நிறைவுபெற்றதும், முதல்வர்தான் முதலில் வெளியேறுவார். பின்னர், மூத்த அமைச்சர்களைத் தொடர்ந்து மற்றவர்கள் ஒருவர் பின் ஒருவராக அறையைவிட்டு வெளியேறுவார்கள். ஆனால், முன்கூட்டியே முதல்வரிடம் மட்டும் சொல்லிவிட்டு வெளியேறிவிட்டார் பி.டி.ஆர்” என்கிறார்கள்.
என்ன காரணம் என்று விசாரித்தால், “அமைச்சரவைக் கூட்டம் முடிந்த பின்னர் சீனியர்கள் யாராவது ஆடியோ விவகாரத்தை எழுப்பக்கூடும் என்பதாலேயே பி.டி.ஆர் வேகமாக வெளியேறிவிட்டார்” என்கிறார்கள் சிலர். பி.டி.ஆர் தரப்போ, “கோடி கோடியா குவித்தவர்களெல்லாம் பி.டி.ஆரைக் குற்றவாளிபோலப் பார்க்கிறார்கள். அவர்களின் பார்வையிலிருந்து அகலவே வேகமாக வெளியேறினார்” என்கிறார்கள்.
நகரங்களைக் கட்டி ஆளும் துறையில் பொன்னான அதிகாரிக்கும், துறை மேலிடத்துக்கும் நீண்டகாலமாக நிலவிய பனிப்போர் இப்போது உச்சத்தை எட்டியிருக்கிறது. காரணம், 17 அதிகாரிகளுக்கான இடமாறுதலில் துறை மேலிட ஆசி பெற்றவர்களுக்கு மட்டுமே ஆர்டர் கொடுக்கப்பட்டிருக்கிறதாம். தனது சிபாரிசுகள் எடுபடாததே பொன்னானவரின் கோபத்துக்குக் காரணமாம். இதேபோல வீடு கட்டிக்கொடுக்கும் துறையிலும் மூத்த அதிகாரிக்கும், வாரியத் தலைவருக்கும் முட்டல் மோதல் அதிகரித்திருப்பதாகச் சொல்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில்.
மோதலுக்கான காரணம் என்னவென்று விசாரித்தால், ‘துறை அமைச்சருக்குக் கொடுக்கும் அதே மரியாதையைத் தனக்கும் கொடுக்க வேண்டும்’ என்று அடம்பிடிக்கிறாராம் வாரியம்.
from India News https://ift.tt/RDd1JGK
0 Comments