அகில இந்திய வானொலியில் இந்தி திணிப்பா?! - அரசியல் தலைவர்கள் எதிர்ப்பின் பின்னணி

மத்தியில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததிலிருந்து, மத்திய அரசின் திட்டங்கள் அனைத்துக்கும் இந்தியில் பெயர்கள் வைக்கப்படுவது குறித்து சர்ச்சை நிலவிவருகிறது. சமீபத்தில், தயிர் பாக்கெட்களில் ‘தயிர்’ என்ற தமிழ் சொல்லுடன், ‘தஹி’ என்ற இந்தி வார்த்தையும் அச்சிடப்பட்ட வேண்டும் என்ற கோரிக்கைக்கு கடும் கண்டனம் எழுந்தது. தற்போது, அகில இந்திய வானொலியில் இந்தித் திணிப்பு நடைபெறுவதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. ‘அகில இந்திய வானொலியின் அறிவிப்புகள், செய்திகள், அலுவல் சார்ந்த கடிதங்கள் ஆகியவற்றில் ‘ஆல் இந்தியா ரேடியோ’ என்று பயன்படுத்தக்கூடாது.

அதற்கு பதிலாக, ‘ஆகாஷ்வாணி’ என்ற பெயரைத்தான் பயன்படுத்த வேண்டும்’ என்று வானொலி நிலையங்களுக்கு அதன் தலைமை அலுவலகத்தின் கொள்கைப்பிரிவு உத்தரவிட்டிருக்கிறது. அந்த உத்தரவைத் தொடர்ந்து, ஆங்கிலச் செய்திகளில் ‘ஆல் இந்திய ரேடியோ’ என்பதற்கு பதிலாக ‘ஆகாஷ்வாணி’ என்ற பெயர் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு, அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்திருக்கின்றன.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூருக்கு கடிதம் எழுதியிருக்கிறார், தி.மு.க-வின் மக்களவைக் குழு தலைவரான டி.ஆர்.பாலு. அதில் அவர், “அகில இந்திய வானொலியை 'ஆகாஷ்வாணி' என்று இந்தியில் மட்டும் பயன்படுத்தும் உத்தரவு தேவையில்லாத ஒன்று. தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநில வானொலிகளில் அகில இந்திய வானொலி, ஆல் இந்தியா ரேடியோ என்ற வார்த்தைகள்தான் பயன்படுத்தப்படுகின்றன.

டி.ஆர்.பாலு

மாநிலச் செய்திகளில் அகில இந்திய வானொலி என்றும், ஆங்கில செய்திகளில் ஆல் இந்தியா ரேடியோ என்றும் பயன்படுத்தப்படுகின்றன. வானொலி என்பது ஆகாஷ்வாணி என்ற வார்த்தையின் தமிழ் சொல்லே ஆகும் . இதை மாற்ற வேண்டும் என்ற உத்தரவுகள் தேவையில்லாதவை. ஒன்றிய அரசின் உத்தரவுக்கு தமிழ்நாட்டில் பொதுமக்கள் இடையேயும், அரசியல் கட்சியினர் இடையேயும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் ஒன்றிய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தலையிட்டு, முன்பிருந்த நிலையே நீடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று டி.ஆர்.பாலு வலியுறுத்தியிருக்கிறார்.

‘மத்திய அரசின் இந்த நடவடிக்கை, அப்பட்டமான இந்தித் திணிப்பு’ என்று குற்றம்சாட்டியிருக்கிறார் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ராமதாஸ். அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “அகில இந்திய வானொலியின் அறிவிப்புகள், செய்திகள் போன்றவற்றிலும், அலுவல் சார்ந்த கடிதங்களிலும் இனி ஆல் இந்தியா ரேடியோ என்ற பதத்தைப் பயன்படுத்தக் கூடாது என்றும், அதற்கு மாற்றாக ஆகாஷ்வாணி என்ற பதம் தான் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் வானொலி நிலையங்களுக்கு அதன் தலைமை அலுவலகத்தின் கொள்கைப்பிரிவு ஆணையிட்டுள்ளது.

ராமதாஸ்

இதை ஏற்க முடியாது. என்னென்ன வழிகளில் எல்லாம் இந்தியைத் திணிக்க முடியுமோ, அந்தந்த வழிகளில் எல்லாம் இந்தியைத் திணிக்க மத்திய அரசு துடிக்கிறது. அதன் வெளிப்பாடுதான் தமிழ்நாட்டு வானொலி நிலையங்களின் செய்திகளிலும், அறிவிப்புகளிலும் கூட ஆகாஷ்வாணி என்று அறிவிக்க கட்டாயப்படுத்துவதாகும்.

பிரதமரும், மத்திய உள்துறை அமைச்சரும் தாய்மொழிக்குதான் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள். ஆனால், வானொலியின் தலைமையோ இந்தியைத் திணிக்கத் துடிக்கிறது. இது கண்டிக்கத்தக்கது. வானொலி வேண்டுமானால் தேசிய அளவிலானதாக இருக்கலாம். ஆனால், அதன் நிகழ்ச்சிகள் உள்ளூர் அளவிலானவை.

அதனால் அதற்கான அறிவிப்புகளும், வானொலி சேவையின் பெயரும் கூட உள்ளூர் மொழிகளில் தான் இருக்க வேண்டும். அனைத்திந்திய வானொலி என்று அழகுத் தமிழில் அழைப்பதற்கு மாற்றாக, ஆகாஷ்வாணி என்று இந்தியில் அறிவிப்பதைக் கேட்க சகிக்காது.

அகில இந்திய வானொலி

அதையும் கடந்து, தொடர்ந்து இந்தியைத் திணித்து தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுடன் விளையாடக் கூடாது. எனவே, ஆகாஷ்வாணி அறிவிப்பு ஆணையை ரத்து செய்து விட்டு, தமிழில் ஆல் இந்தியா ரேடியோ என்பதை அனைத்திந்திய வானொலி என்று அறிவிக்க மத்திய அரசு ஆணையிட வேண்டும்” என்று ராமதாஸ் வலியுறுத்தியிருக்கிறார்.

இதேபோல, அகில இந்திய வானொலியில் இந்தித் திணிப்பு நடைபெறுவதாக கடந்த ஆண்டும் ஒரு சர்ச்சை கிளம்பியது. காரைக்கால் வானொலி நிலையத்தில், கடந்த ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி தொடர்ந்து நான்கு மணி நேரம் இந்தியில் நிகழ்ச்சிகள் ஒலிப்பப்பட்டன. அப்போது, தமிழ் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படும் நேரத்தில், இந்தியில் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பு செய்யப்பட்டதாக பிரச்னை எழுந்தது. விவசாயிகள், மீனவர்கள் உள்ளிட்ட தரப்பினருக்கு உதவுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட உள்ளூர் வானொலி நிலையங்களில் இந்தியைத் திணிப்பது கண்டிக்கத்தக்க செயல் என்று விமர்சனங்கள் எழுந்தன.

வானொலி

காரைக்கால் வானொலி நிலையத்தில், புதுச்சேரி பிரதேசத்தில் பேசப்படும் தமிழ், தெலுங்கு, மலையாளம், பிரெஞ்ச் ஆகிய மொழிகளில் மட்டுமே நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட வேண்டும். ஆனால், இந்த மொழிகளைப் புறக்கணித்துவிட்டு தொடர்ந்து நான்கு மணி நேரம் இந்தி ஒலிபரப்பு நடைபெற்றது.

உள்ளூர் விவசாயிகளுக்கு வேளாண் தகவல்களைத் தெரிவிக்கவும், கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு மீன்வளம், வானிலை தொடர்பான தகவல்களைத் தெரிவிக்கவும்தான் காரைக்கால், தர்மபுரி, நாகர்கோவில் ஆகிய ஊர்களில் வானொலி நிலையங்கள் தொடங்கப்பட்டன. அதற்கு மாறாக, உள்ளூர் மொழிகளைப் புறக்கணித்து, இந்தித் திணிப்பில் ஈடுபடுவது எந்த வகையிலும் உள்ளூர் மக்களுக்கு உதவாது என்று சமூக ஆர்வலர்கள் குரல் எழுப்பினர். இந்தித் திணிப்பு எந்த வடிவத்தில் வந்தாலும், அதற்கு கடும் எதிர்ப்பு எழுகின்றன. ஆனாலும், இந்தித் திணிப்பு நடவடிக்கையில் மத்திய ஆட்சியாளர்கள் தொடர்ந்து ஈடுபடுவது வருந்தத்தக்கது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.



from India News https://ift.tt/aD6qgHt

Post a Comment

0 Comments