மும்பையில் பாலியல் தொழில் செய்தது தொடர்பாக பிடிபட்ட பெண் ஒருவரை, ஓர் ஆண்டுக்கு பெண்கள் முகாமில் அடைக்க கடந்த மார்ச் மாதம் மஜ்காவ் கோர்ட் உத்தரவிட்டு இருந்தது. இதனால் அவர், பெண்கள் மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டார். இந்த உத்தரவை எதிர்த்து மும்பை செஷன்ஸ் கோர்ட்டில் அப்பெண் மேல் முறையீடு செய்தார்.
இம்மனு விசாரணைக்கு வந்தபோது அப்பெண் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், அரசியல் சட்டம் 19-வது பிரிவின் கீழ் பெண்ணிற்கு இருக்கும் உரிமை குறித்து வாதிட்டார். அதோடு பாலியல் தொழிலாளர்கள் குறித்து சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ள கருத்துகளையும் மேற்கோள் காட்டினார். தனிப்பட்ட முறையில் பாலியல் தொழிலில் ஈடுபடுவது சட்டவிரோதம் இல்லை என்றும், பாலியல் விடுதி நடத்துவதுதான் சட்டவிரோதம் என்றும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்து இருப்பதை சுட்டிக்காட்டினார்.
இதையடுத்து கருத்து தெரிவித்த நீதிபதி சி.வி.பாட்டீல், ``சம்பந்தப்பட்ட பெண், கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படவில்லை. கீழ் கோர்ட் பெண்ணிற்கு எதிராகத் தீர்ப்பளித்துள்ளது. தீர்ப்பளிக்கும் முன்பு நீதிபதி சமூக சேவகர்கள் அல்லது இதில் தொடர்புடையவர்களிடம் கருத்து கேட்கவில்லை. ஆனால் பெண்ணிடம் தனிப்பட்ட முறையில் விசாரணை நடத்திவிட்டு தீர்ப்பு வழங்கி இருக்கிறார். அதோடு சம்பந்தப்பட்ட பெண், தனக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும், அவர்களை கவனிக்க வேண்டியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அந்த பெண், ஒரு மேஜர். அவருக்கு சொந்தமாக முடிவு எடுக்கும் உரிமை இருக்கிறது. இதே பெண் இதற்கு முன்பும் பாலியல் தொழிலில் ஈடுபட்டு பிடிபட்டுள்ளார். இனி பாலியல் தொழிலில் ஈடுபடமாட்டேன் என்று கூறி எழுதிக்கொடுத்த பிறகு விடுவிக்கப்பட்டார்.
கீழ் கோர்ட் நீதிபதி, சம்பந்தப்பட்ட பெண்ணின் முந்தைய செயல்களைப்பார்த்து அவரை ஓர் ஆண்டு பெண்கள் முகாமில் அடைக்க உத்தரவிட்டுள்ளார். ஆனால் அவரின் வயது மற்றும் அவருக்கான உரிமைகள் குறித்து பரிசீலிக்கப்படவில்லை.
பொது இடத்தில் பாலியல் தொழில் செய்தார் என்று சம்பந்தப்பட்ட பெண் மீது குற்றம் சாட்டப்படவில்லை. பொது இடத்தில் நடக்காத வரை அது குற்றம் கிடையாது. அவரின் முந்தைய செயல்களுக்காகவே சம்பந்தப்பட்ட பெண்ணை பிடித்து முகாமில் அடைப்பது சரியாக இருக்காது" என்று கூறி அப்பெண்ணை விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
from India News https://ift.tt/5mcNKw6
0 Comments