2000 ரூபாய் விவகாரம்: ``திமுக-வினரிடம் ஆலோசித்தால், நோக்கமே தோற்றுவிடும்” - இராம ஸ்ரீநிவாசன் சூசகம்

``கர்நாடகப் படுதோல்வியை மறைக்கவே 2000 ரூபாய் திரும்பெற்றதாக தமிழக முதல்வர் சாடியிருக்கிறாரே?”

``இதில் மறைக்க என்ன இருக்கிறது... கர்நாடகத்தில் காங்கிரஸ் வென்று ஆட்சியமைத்துள்ளது. 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறுவது என்பது கறுப்புப் பண ஒழிப்பு, பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைப்பதற்கான நடவடிக்கை. விஷச்சாராயம் அருந்தி 22 உயிரிழந்த சம்பவத்தை மறைக்கவே மு.க ஸ்டாலின் இப்படிப் பேசுகிறார்.”

ராம ஸ்ரீனிவாசன்

``மம்தாவும், அகிலேஷ் யாதவும் மனம் மாறிவிட்டார்கள் போல் தெரிகிறதே, கூட்டணி அமைந்துவிடுமோ...?”

``கர்நாடகாவில் பா.ஜ.க வாக்குவங்கிக்கு எந்த பாதமும் ஏற்படவில்லை. மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் வாக்குகள் மட்டும் காங்கிரஸ் வசமாகியிருக்கிறது. ஆகவே கூட்டல் கழித்தல் கணக்கில் ஆட்சியைப் பிடித்திருக்கிறது காங்கிரஸ். கர்நாடகாவில் மட்டும் 5 சதவீத வாக்குகள் அதிகமாகப் பெற்றுவிட்டு, காங்கிரஸ் வளர்ந்துவிட்டது, மீண்டெழுகிறது என்ற மாயத் தோற்றத்தை உருவாக்குகிறார்கள். இவர்கள் சொல்வதுபோலவே மு.க ஸ்டாலின், மம்தா, ராகுல் காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால், அகிலேஷ் யாதவ், நிதிஷ் குமார் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் என எல்லாரும் சேர்ந்து நிற்கட்டும். இதனால் யாருக்கு என்ன பயன்... தி.மு.க-வின் ஆதரவால் மேற்கு வங்கத்தில் மம்தா-விற்கு வாக்குகள் அதிகம் கிடைக்கப் போகிறதா... மம்தா அதரவால் தமிழகத்தில் மாற்றம் நிகழப்போகிறதா... பீகார், ஆந்திரா மாநிலத்தில் தி.மு.க நின்று வெற்றி பெறத்தான் முடியுமா... கூட்டணி அமைத்தாலும் அவர்களுக்கு பயனில்லை எங்களுக்குப் பாதகமில்லை.

``2000 ரூபாய் திரும்பப் பெறுதல் குறித்து  மாநில அரசுகளிடம் கலந்தாலோசித்திருக்க வேண்டும் என்கிறாரே நிதியமைச்சர் தங்கம் தென்னசு?”

``இது ரகசிய நடவடிக்கை. இதுபோன்ற விவகாரங்களில் மாநில அரசின் கருத்துகளைக் கேட்க வேண்டிய அவசியமில்லை. மாநில அரசிடம் கேட்டுதான் 2000 ரூபாய் கொண்டு வரப்பட்டதா... பின் இப்போது ஏன் கேட்க வேண்டும்.... (சிரித்தபடி) அவர்களிடம் கருத்துக் கேட்டால் என்ன நடக்கும் எனத் தெரியும். அதிலும் தி.மு.க-வினரிடம் சொல்லிவிட்டுச் செய்தால் இந்த நடவடிக்கையின் நோக்கமே தோற்றுப் போய்விடுமே.” 

ராம ஸ்ரீநிவாசன்

``விஷச்சாராய விவகாரத்தில் பா.ஜ.க அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தியது. ஆனால் அதிமுக ஆளுநர் மாளிகை பேரணி மட்டுமே நடத்தியது, எதிர்க்கட்சியாக அதிமுகவின் நடவடிக்கைகள் திருப்தி அளிக்கிறதா?”

``அ.தி.மு.க எப்படிச் செயல்பட வேண்டும் என நாங்கள் செயல்திட்ட அறிக்கை தர முடியாது. ஜெயலலிதா இருந்தபோது அ.தி.மு.க ஆளும்கட்சியாகவும் எதிர்க்கட்சியாகவும் செயல்பட்டது வேறு. அவரின் மறைவிற்குப் பிறகு அ.தி.மு.க-வில் பல்வேறு இடையூறுகள் எழுந்தன. பிரதமர் மோடியின் ஆதரவினால் ஆட்சியில் முழுமையாக நீடித்தது அதிமுக. தற்போது உட்கட்சி பிரச்னைகள் இருப்பதனால் எதிர்க்கட்சியாக அவர்கள் செயல்பட அவகாசம் கொடுக்க வேண்டியுள்ளது. அ.தி.மு.க வலிமைபெற வேண்டுமென விரும்புகிறோம். பா.ஜ.க திமுக எதிர்ப்பை கூர்மைப்படுத்துகிறோம். அ.தி.மு.க-வும் எங்களுடன் இணைந்து தி.மு.க-வை எதிர்த்துப் போராடும் காலம் விரைவில் வரும்.”

``ஜல்லிக்கட்டு மாபெரும் மக்கள் போராட்டம் - தமிழ்நாடு அரசின் அவசரச் சட்டம் - குடியரசுத் தலைவர் ஒப்புதல்... மோடி மட்டுமே காரணம் என்பது ஏற்புடையதா?”

``காளைகளைக் காட்சிப் பட்டியலிலிருந்து நீக்கி ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான சூழலை உருவாக்கியது மத்திய பா.ஜ.க அரசு. மாநில சட்டமன்றம் அவசரச் சட்ட முன்வரவை கொண்டு வர அறிவுறுத்தியது மத்திய அரசு. சட்ட முன்வடிவிற்கு விரைந்து ஒப்புதல் பெற நடவடிக்கை மேற்கொண்டது மத்திய அமைச்சரவை. மேலும் நீதிமன்றத்தில் வலுவான வாதங்களை முன் வைத்ததும் மத்திய அரசின் தரப்புதான். ஜல்லிக்கட்டு மட்டுமல்ல மகாராஷ்டிராவின் ரேக்ளா ரேஸ், கர்நாடகா-வின் கம்பளா, ஜல்லிக்கட்டு என மூன்றிருக்கும் தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது. ஆகவே இந்த வெற்றியில் மாநில அரசு சொந்தம் கொண்டாட நினைப்பது அபத்தம்.”

ராம. ஸ்ரீனிவாசன்

``அண்ணாமலை நடைப்பயணம் என்னானது.. ரத்தாகிவிட்டதா?”

``மாநிலத் தலைவர் அண்ணாமலை கர்நாடகா தேர்தல் பணிகளை மேற்கொண்டதால், ஜூலை மாதத்திற்குத் தள்ளி வைத்துள்ளோம். காலம் கருதி வெவ்வேறு வடிவங்களில் பயணம் இருக்கும். பாதயாத்திரை, வாகனப் பயணங்கள் எனக் கலவையாக இருக்கும்.”



from India News https://ift.tt/jUlrwu3

Post a Comment

0 Comments