கர்நாடகாவில் கடந்த 10-ம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி பரபரப்பாக நடந்துவருகிறது. பா.ஜ.க, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என மும்முனைப் போட்டியாக அமைந்த இந்த தேர்தலில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளின்படி, பா.ஜ.க-வுடன் எண்ணிக்கையில் பெரிய அளவில் வித்தியாசமில்லாமல் தோராயமாக 120 இடங்களுடன் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் என்று கூறப்பட்டது.
அதற்கேற்றாற் போலவே இன்று காலை தொடங்கிய வாக்குப்பதிவு எண்ணிக்கையில் காங்கிரஸுக்கும், பா.ஜ.க-வுக்கும் இடையே இரண்டு, மூன்று இடங்கள் வித்தியாசத்தில் கடும் போட்டி வருகிறது. இந்த நிலையில், பா.ஜ.க-வை ஆட்சியிலிருந்து நீக்க என்ன வேண்டுமானாலும் செய்வோம் என சித்தராமையாவின் மகன் யதீந்திர சித்தராமையா கூறியிருக்கிறார்.
இன்று காலை ஊடகத்திடம் பேசிய யதீந்திர சித்தராமையா, ``எங்களுக்குப் பெரும்பான்மை கிடைக்கும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். எங்களுக்கு எந்த கூட்டணியும் தேவையில்லை என்று நினைக்கிறேன். ஒருவேளை பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் அடுத்து என்ன செய்யலாம் என்பதை தலைவர்கள் முடிவு செய்வார்கள். மாநில நலனுக்காக பா.ஜ.க-வை ஆட்சியிலிருந்து நீக்க என்ன வேண்டுமானாலும் செய்வோம்" என்று கூறினார்.
தனது தந்தை சித்தராமையா குறித்துப் பேசுகையில், ``ஒரு மகனாக அவரை முதலமைச்சராகப் பார்க்க விரும்புகிறேன். அதேசமயம் மாநிலத்தின் குடிமகனாக, அவர் முதலமைச்சராக வந்தால் கடந்த ஆட்சியின் ஊழல்களைச் சரி செய்வார் என்று நம்புகிறேன். மாநிலத்தின் விருப்பம் கூட அதுவே" என யதீந்திர சித்தராமையா கூறினார்.
தேர்தலுக்கு முன்பு காங்கிரஸின் முதல்வர் வேட்பாளர் மூத்த தலைவர் சித்தராமையாவா அல்லது மாநில தலைவர் டி.கே.சிவக்குமாரா என்று கட்சிக்குள்ளே பேச்சுக்கள் எழ, அதனைத் தேர்தலுக்குப் பின்பு பார்த்துக்கொள்ளலாம் என கட்சி மேலிடம் அறிவித்ததையடுத்து, இருதரப்பினரும் முழுவீச்சில் காலத்தில் இறங்கி செயல்பட்டனர். தற்போது காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வருகிறது எனபது குறிப்பிடத்தக்கது.
from India News https://ift.tt/1TFenva
0 Comments