இந்தியாவின் புதிய நாடாளுமன்றம் வரும் 28-ம் தேதி பிரதமரால் திறந்துவைக்கப்படுகிறது. ஆனால், புதிய நாடாளுமன்றத்தை பிரதமர் திறக்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தும், குடியரசுத் தலைவர் தான் திறக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியும் 19 எதிர்க்கட்சிகள் இந்த புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவைப் புறக்கணிப்பதாக அறிக்கை வெளியிட்டிருக்கின்றனர்.
இதற்கிடையில் புதிய நாடாளுமன்றத்தில் பிரதமரால் செங்கோல் வைக்கப்படப்போவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். இந்த நிலையில், தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ``புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த 20 ஆதீனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த நிர்மலா சீதாராமன், ``எதிர்க்கட்சிகள் அனைவரும் தங்கள் நிலைப்பாடு குறித்து யோசித்து மக்களுக்காகவாவது நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும். இதே எதிர்க்கட்சித் தலைவர்கள் தான் அவரை (குடியரசுத் தலைவர்) ரப்பர் ஸ்டாம்ப் என்று விமர்சித்தார்கள். அந்த நேரத்தில் அவர்களில் ஒருவர் கூட அவரை பெருமைப்படுத்தவில்லை. ஆனால் இன்று திடீரென பிரதமருக்கு எதிராக அவரை ஆதரிக்கின்றனர்.
ஆங்கிலேயரிடம் இருந்து இந்தியாவுக்குச் சுதந்திரம் வந்தபோது, முதல் பிரதமர் நேருவிடம் செங்கோல் கொடுக்கப்பட்டது. ஆனால், அது எங்கு இருந்திருக்க வேண்டும்... மக்களவையில் இருந்திருக்க வேண்டும் அல்லவா, அதைத்தான் பிரதமர் தற்போது செய்கிறார். சத்தீஸ்கரில் புதிதாகச் சட்டமன்றம் கட்டப்பட்டபோது, சோனியா காந்திதான் அதை திறந்து வைத்தார். ஆனால் சட்டப்பேரவைத் தலைவரான ஆளுநர் அதைத் திறந்து வைக்கவில்லை" என்று என்றார்.
மேலும், தெலங்கானாவில் கடந்த மாதம் திறந்துவைக்கப்பட்ட புதிய சட்டமன்றம் குறித்து பேசிய தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், ``தெலுங்கானாவில் புதிதாகக் கட்டப்பட்ட சட்டமன்றத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார். இதில் ஆளுநருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா என்று எல்லோரும் கேட்டார்கள். ஆனால், முதலமைச்சர் தான் ஆட்சி செய்கிறார் அவர்தான் திறந்து வைப்பார் என்று சொல்லப்பட்டது. ஆளுநருக்கு அழைப்பு கூட விடுக்கப்படவில்லை" என்று கூறினார்.
from India News https://ift.tt/ZQwSRh1
0 Comments