``டாடாவின் பணம் எங்கே போனது?" - பிரிஜ் பூஷன் சிங் மீது மல்யுத்த வீரர் புதிய குற்றச்சாட்டு!

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள், வீரர்கள் நடத்திவரும் போராட்டத்துக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகிவருகிறது. மல்யுத்த வீராங்கனைகள் உச்ச நீதிமன்றத்துக்குச் சென்ற பிறகு இந்த விவகாரத்தில் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது போக்சோ உட்பட இரண்டு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவுசெய்தனர்.

பிரிஜ் பூஷன் சரண் சிங் - மல்யுத்த வீராங்கனை, வீரர்

அதைத்தொடர்ந்து எத்தகைய விசாரணைக்கும் தயார் என பிரிஜ் பூஷன் கூறிவந்தார். பின்னர் இந்த விவகாரத்தில் `உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் பிரிஜ் பூஷனை உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தவேண்டும். புகாரளித்த ஏழு வீராங்கனைகளையும் உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தலாம்' என மல்யுத்த வீராங்கனைகள் தெரிவித்தனர். இந்த நிலையில் இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு டாடா வழங்கிவந்த பணம் எங்கே போனது என மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா புதிய கேள்வியை எழுப்பியிருக்கிறார்.

முன்னதாக நேற்று ஜந்தர் மந்தரில் வீராங்கனைகளுக்கு, வீரர்களும் நெற்றியில் கருப்பு பட்டை (Black band) கட்டிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பஜ்ரங் புனியா, ``பிரிஜ் பூஷனுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று (வியாழன்) கருப்பு தினமாக அனுசரிக்கிறோம். எங்களுக்கு நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம். ஏதோ நாங்கள் குற்றம் செய்ததைப் போல நடத்தப்படுகிறோம். எங்களின் தொலைபேசி எண்கள் உளவுபார்க்கப்படுகின்றன. எங்களுடன் தொடர்பில் உள்ளவர்களும் கண்காணிக்கப்படுகிறார்கள்.

பஜ்ரங் புனியா

எந்தப் பணத்தை நீங்கள்(இந்திய மல்யுத்த கூட்டமைப்பு) செலவு செய்தீர்கள். டாடா-வின் பணம் எங்கே போனது. கடந்த ஐந்து ஆண்டுகளாக டாடா குழுமம் உங்களுக்குப் பணம் தருகிறார்கள். அந்த பணம் எங்கே? ரத்தன் டாடாவிடம் நாங்கள் கோரிக்கை வைத்திருக்கிறோம். அவரின் பணம் சரியான இடத்துக்கு செல்கிறதா அவர் கண்டுபிடிக்க வேண்டும்" என்று கூறினார்.



from India News https://ift.tt/DR9Q7He

Post a Comment

0 Comments