`டிடிவி-க்கு லாபம், அனுகூலம்... அப்போ ஓ.பி.எஸ்ஸுக்கு?’ - திடீர் சந்திப்பும் பின்னணி கணக்குகளும்

தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரனும் சந்தித்துப் பேசியிருப்பது தமிழகம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தொடர்புடைய அரசியலில் முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. நேற்று முந்தினம் மாலை 7 மணியளவில் ஓ.பி.எஸ், டிடிவி தினகரனை அவரது வீட்டில் சந்தித்துப் பேசினார். ஓ.பி.எஸ் வந்தபோது அவரை வாசல் வரை வந்து வரவேற்ற டிடிவி தினகரனுடனான இந்தச் சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய இருவரும், தாங்கள் இணைந்து செயல்படப்போவதாக அறிவித்தனர்.

ஓ.பன்னீர்செல்வம் - பண்ருட்டி ராமச்சந்திரன் - டி.டி.வி.தினகரன்

இந்த சந்திப்பின் போது மூத்த தலைவர்களில் ஒருவரான பண்ருட்டி ராமச்சந்திரன், “இரு இயக்கங்களும் சேர்ந்து செயல்படுவது என முடிவெடுத்துள்ளோம். ஒரே லட்சியம் தான்.

எம்.ஜி.ஆர் தொடங்கி ஜெயலலிதா கட்டிக் காத்த இயக்கத்தை அதன் அடிமட்டத் தொண்டர்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனும் லட்சியத்துடன் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோர் தனித்தனியே செயல்பட்டார்கள். அதே லட்சியத்துடன் சேர்ந்து செயல்படுவது என்று இன்று முடிவெடுத்துள்ளோம். எப்படி இடது கம்யூனிஸ்ட் கட்சி, வலது கம்யூனிஸ்ட் கட்சி இணைந்து செயல்படுகிறார்களோ அப்படி இணைந்து செயல்படுவோம். கடந்த காலத்தைப் பற்றிப் பேசினால் உணர்ச்சி மேலிட்டு மீண்டும் பிளவுகளும் பேதங்களும்தான் வரும். அதனால் எதிர்காலத்தைப் பற்றித்தான் சிந்திக்க வேண்டும். நடந்ததையே பேசுவது இயக்கத்தை வலுவாக வளர்க்கப் பயன்படாது. நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், நடப்பவை நல்லவையாக இருக்கட்டும். அதிமுகவின் எதிர்காலம் என்ன என்பதைப் பார்க்க வேண்டும்” என்றார்.

அதிமுகவில் ஏற்பட்ட ஒற்றைத் தலைமை பிரச்னைக்குப் பிறகு ஓ.பி.எஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த நீக்கத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் வி.கே.சசிகலாவை சந்திக்கப் போவதாகக் கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து அவர் தனது ஆதரவாளர்களைத் திரட்டி, திருச்சியில் மாநாடு ஒன்றையும் நடத்தியிருந்தார். இதற்கிடையே, எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு எதிரானவர்களை ஓர் அணியில் ஒன்றுதிரட்ட ஓ.பி.எஸ் முயல்வதாகத் தகவல் வெளியாகியிருந்த நிலையில் தற்போது இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. விரைவில் சசிகலாவைவும் சந்திக்க திட்டம் வைத்திருக்கிறார் ஓபிஎஸ்.

ஓ.பன்னீர்செல்வம் - டிடிவி தினகரன்

இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி.தினகரன், “ராமச்சந்திரன் சொன்னது போல் இடது வலது கம்யூனிஸ்ட் போல் செயல்படுவோம். அம்மாவின் உண்மையான தொண்டர்கள் கையில் இந்த இயக்கம் இருக்க வேண்டும். பண பலத்தை வைத்துக்கொண்டு, அதைக் கபளீகரம் செய்தவர்களிடம் இருந்து இந்த இயக்கத்தை மீட்டெடுத்து, தீய சக்தியான திமுக-வை வீழ்த்தும் முயற்சியில் நாங்கள் இணைந்துள்ளோம். நாங்கள் ஒருவரை ஒருவர் அறிந்துள்ள நண்பர்கள். எங்களுக்குள் மனதளவில் பகையுணர்வு ஏதும் கிடையாது. ஏதோ சில காரணங்களால் பிரிந்திருந்தோம். எங்களுக்கான சுயநலத்தோடு நாங்கள் இணையவில்லை. இயக்கத்தை மீண்டும் உண்மையான தொண்டர்களிடையே ஒப்படைப்பதுதான் ஒரே லட்சியம். பன்னீர்செல்வம் எனது பழைய நண்பர். அவரிடம் எப்போது எனக்கு அன்பு உண்டு. அதன் வெளிப்பாடுதான் இது. அவரை நம்பி இருட்டில்கூட நான் கையைப் பிடித்துக்கொண்டு செல்ல முடியும். பழனிசாமியுடன் நான் அப்படிச் செல்ல முடியுமா? இபிஎஸ் துரோகி, திமுக எதிரி” என்றார்.

எடப்பாடி பழனிசாமியுடன் சேர்ந்து செயல்படுவதற்கான முயற்சி எடுக்கப்படுமா என்று பண்ருட்டி ராமச்சந்திரனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, “இந்தக் கேள்வியை எடப்பாடி பழனிசாமியிடம் கேட்க வேண்டும். அவர்தான் யாரையுமே சேர்க்க வேண்டாம் என்கிறாரே!” என்றவரிடம், `எடப்பாடி பழனிசாமையை பாஜக நம்புவதற்கு என்ன காரணம்?’ என கேள்வி வைத்த போது, “எடப்பாடி தரப்பினர்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்களே தவிர, பாஜகவின் தலைமையில் இருந்து கூட்டணி உருவாகியிருப்பதாக இதுவரையிலும் எந்தத் தகவலும் வரவில்லை,” என்றார்.

சசிகலா, ஓ.பி.எஸ்

இது தொடர்பாக நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம். “தென் மாவட்ட வாக்கை ஒருங்கிணைக்க பார்க்கிறார்கள். அப்படி ஒருங்ணைந்தாலும் இருவரும் இணைந்தால் மட்டுமே வென்றுவிட முடியும் என்றும் சொல்லிவிட முடியாது. டிடிவி-க்கான செல்வாக்கு 2019 தேர்தலில் 20 இடங்களில் மூன்றாம் இடம் வந்தார். ஒன்பது நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றி, தோல்வி நிர்ணயிக்கும் இடத்தில் டிடிவி-யின் கட்சிக்கு செல்வாக்கு இருக்கிறது. ஆனால், ஓ.பி.எஸ்ஸுக்கு கட்சியும் இல்லை செல்வாக்கும் இல்லை. அதிமுக-வை க்ளைம் செய்தும் புரோஜனம் இல்லை. ஏனென்றால் தேர்தல் ஆணையம் தெளிவுப்படுத்திவிட்டது. தேர்தல் ஆணையும் முடிவை எதிர்த்து நீதிமன்றம் போனாலும் அது எத்தனை நாள் ஆகும் என்பதும் தெரியாது.

இதையெல்லாம் தாண்டி ஓ.பி.எஸ் துணிந்து தனி கட்சி என்கிற முடிவு எடுக்க வேண்டும். தனி கட்சி முடிவெடுத்தால் அதிமுக-வை க்ளைம் செய்ய முடியாது. அதிமுக-வை மீட்க போகிறேன் என்று டிடிவி- செய்த விஷயத்தைத்தான் ஓ.பி.எஸ்ஸும் செய்ய முடியும். இப்போதைய சூழலில் டிடிவி-க்குத்தான் அரசியலாக கை மேலோங்கி இருக்கிறது. அதனால்தான் டிடிவி-யை போய் பார்த்திருக்கிறார் ஓ.பி.எஸ். இதன் மூலம் டிடிவி நிறுத்தும் வேட்பாளரை வேண்டுமானால் ஓ.பி.எஸ் ஆதரிக்கலாம். ஒருவேளை ஓ.பி.எஸ் தரப்பில் வேட்பாளர் நிறுத்தப்பட்டால் அவர் குக்கர் சின்னத்தில் நிற்பாரா என்பதும் இங்கு பார்க்க வேண்டும்.

தராசு ஷ்யாம்

ஒருவேளை பாஜக கூட்டணிக்குள் டிடிவி வந்தால் அதிமுக-விடம் சீட் வாங்கி கூட்டணிக்குள் கூட்டணி என்கிற முறையில் கொடுக்கலாம். ஏனென்றால் பாஜக-அதிமுக கூட்டணி இன்றும் தொடர்கிறது என்றுதான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதேநேரத்தில் இன்றைய சூழலில் அதிமுக-வின் வாக்கு வங்கி அவர்களின் இயலாமையால் குறைந்திருக்கிறது. இதில் டிடிவி-ஓ.பி.எஸ் இணையும் போது அதிமுக-வுக்குத்தான் நஷ்டமாகும்.

ஓ.பி.எஸ் சசிகலாவை சந்திப்பது புரோஜனமில்லாதது. ஏனென்றால், சசிகலா 2016-ல் இடைக்கால பொதுச்செயலாளராக பொதுக்குழுவால் தேர்வானார். அதன் பிறகு அவரை நீக்கினாலும், அது குறித்தான வழக்கு, மேல்முறையீடு என்று போய் கொண்டிருக்கிறது. ஓ.பி.எஸ் - நிலைபாடு அதிமுக-வின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா. இந்த இடத்தில் சசிகலா பொருந்த மாட்டாங்களே.

பன்னீர்

இப்போது டிடிவி, ஓ.பி.எஸ் சந்திப்பின் மூலமாக ஓ.பி.எஸுக்கு ஒரு அரசியல் நகர்வு. டிடிவி-க்கு ஒரு அனுகூலம். ஓ.பி.எஸ், டிடிவி-யை சந்திததன் மூலம் அரசியல் பிம்பம் டிடிவி-யின் உயர்வுக்கு வழிவகுக்கும். எனவே டிடிவி-க்கு லாபம். ஓ.பி.எஸுக்கு அரசியல் லாபம் நேரடியாக இருக்குமா என்பது தெரியவில்லை. எது எப்படியோ பாஜக-வின் மனநிலை என்னவோ அதற்கு தகுந்தாற்போல்தான் அடுத்தக்கட்ட நகர்வுகள் இருக்கும். அது கர்நாடக தேர்தலுக்கு பிறகு, அந்த நகர்வுகள் இன்னும் வேகமாக இருக்கும்” என்றார்.



from India News https://ift.tt/F1ZG2pq

Post a Comment

0 Comments