சமீபத்திய சட்டமன்ற கூட்டத் தொடரின் இறுதி நாளின்போது 12 மணி நேர வேலை நேர மசோதாவைத் தாக்கல் செய்தது தமிழக அரசு. அரசியல் கட்சியினர் மட்டுமின்றி மக்கள் மத்தியிலும் மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. சமூக வலைதளங்களில் 12 மணி நேர வேலையின் பாதகங்கள் குறித்து அதிகம் பேசப்பட்டன. அதையடுத்து 12 மணி நேர வேலை நேர மசோதாவை நிறுத்திவைப்பதாக அறிவித்தது தமிழ்நாடு அரசு
12 மணி நேர மசோதா சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டபோது, ``எட்டு மணி நேரப் பணிச் சூழலில் உள்ளபோதே பெற்றோர்கள் இருவரும் வேலைக்குச் செல்லும் வீடுகளில் குழந்தைகளின் மனநிலையில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. 12 மணி நேரம் என்றால் வளரும் குழந்தைகளைக் கடுமையாக அது பாதிக்கும். மேலும் பயண நேரத்தைச் சேர்த்துக்கொண்டால் 14 மணி நேரமாகலாம், நாளொன்றுக்கு 14 மணி நேரப் பணிச் சூழல் என்பது உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும், இரவு நேர ஷிஃப்டில் பணியாற்றப் போகிறவர்களால் இதை எப்படிக் கையாளமுடியும் எனத் தெரியவில்லை” என்பது போன்ற கருத்துகள் சமூக வலைதளத்தில் உலா வந்தன.
இந்தக் கடினமான பணிச் சூழல் முறையை நிதர்சனத்தில் அனுபவித்து வருகின்றனர் தமிழ்நாடு அரசின் 108 ஆம்புலன்ஸ் சேவையில் பணி செய்யும் ஊழியர்கள்.
நம்முடன் பேசிய 108 ஆம்புலன்ஸ் தொழிற்சங்கப் பிரதிநிதி திருநாவுக்கரசர், ``இதரப் பணிகளில் 12 நேரம் வேலை செய்வதைக்கூட ஓரளவுக்குச் சகித்துக்கொள்ள முடியும், நாங்கள் வாகனம் ஓட்டுகிறோம். அதிலும் எந்த நேரமாக இருந்தாலும் வேகத்துடனும் விவேகத்துடனும் ஆம்புலன்ஸை இயக்குகிறார்கள் ஊழியர்கள். தமிழகத்தைப் பொறுத்தவரை 14 நிமிடத்தில் ஆம்புலன்ஸ் சம்பவ இடத்துக்குச் சென்று நிற்பதாக தமிழக அரசு தெரிவிக்கிறது. தொடர்ச்சியாக ஆம்புலன்ஸ் ஊழியர்கள் 12 மணி நேரம் பணிபுரிவதில் பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன.
12 மணி நேர வேலை அமலுக்கு வந்தால் என்னவெல்லாம் ஆகும், எப்படியெல்லாம் ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை சமீபத்தில் தமிழகமே பேசியது. அதை 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் நிதர்சனத்தில் அனுபவித்து வருகிறார்கள் என்பதைத் தமிழ்நாடு அரசின் கவனத்துக்குக் கொண்டுசெல்ல விரும்புகிறோம். ஊழியர்கள் 12 மணி நேரம் வேலை செய்கிறார்கள், வாரத்தில் ஆறு நாள்கள் பணி நாள். குறிப்பாக இதில் இரவுப் பணியும் இருக்கிறது, இரவு 8 மணிக்குத் தொடங்கி மறுநாள் காலை 8 மணிவரை நீள்கிறது. இரவு நேரங்களில் முழுக்க கண்விழித்துப் பணி செய்தாலும் எட்டு மணி நேரத்துக்கு மேல் ஒருவரால் கவனத்துடன் பணி மேற்கொள்வது பெரும்பாடு என்பதை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்” என்றார்.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் ஊழியர் ஒருவரோடு பேசியபோது, “காலை 8 மணிக்கு வருகிறேன் என்றால் இரவு 8 மணிக்குச் சரியாக வீட்டுச் செல்லும் சூழல் இங்கு இருப்பதில்லை. கிளம்பும் தறுவாயில் அவசர அழைப்பு வந்தால் எவ்வளவு தொலைவு என்றாலும் நாங்கள்தான் சென்று திரும்ப வேண்டும். கிளம்பும் நேரத்துக்கு அவசர அழைப்பு வந்தால் பணி செய்ய மாட்டோம் என்றெல்லாம் நாங்கள் சொல்வதில்லை. கடந்த மாதம் ஒரு நாள் 16 மணி நேரம் பணி செய்தேன்.
தொடர்ச்சியான 12 மணி நேர வேலை என்பது பல உடல்ரீதியான பிரச்னைகளைத் தருகிறது. வாகனம் ஓட்டும் எங்களுக்கு இப்படி ஓய்வற்ற முறையில் பணி செய்தால் எங்களுக்கு உயிர் பாதுகாப்பே கேள்விக்குறியாகிறது. ஆம்புலன்ஸ்கள் விபத்துக்குள்ளாகும் துயரச் சம்பவங்கள் அதிகரிக்கின்றன. மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் துவண்டு போய் நிற்கிறோம்” என்கிறார் வருத்தத்துடன்.
நம்முடன் பேசிய ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சிலர், ”108 ஆம்புலன்ஸ் நிர்வாகத்தை தமிழ்நாடு அரசு, ஜி.வி.கே இ.எம்.ஆர்.ஐ என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்திருக்கிறது. அந்த நிறுவனத்தார் நாங்கள் சொல்லும் எந்தக் கோரிக்கையையும் பரிசீலிப்பதில்லை, கோரிக்கைகளைத் தொழிற்சங்கங்களின் வாயிலாக எடுத்துச் சென்றாலும் கோரிக்கைகளை முன்வைப்பவர்களைக் கட்டம் கட்டுகிறார்கள், தமிழ்நாடு அரசு இதில் தலையீட்டு எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும். 12 மணி நேரம் என இரண்டு ஷிஃப்டாக பணி செய்கிறோம், அதை எட்டு மணி நேரமாக மாற்றி மூன்று ஷிஃப்டாக மாற்றிட வேண்டும் ” என்கிறார்.
உயிர் காக்கும் நோக்கில் அழைத்த மாத்திரத்தில் வந்து நிற்கும் ஆம்புலன்ஸ் ஊழியர்களின் கோரிக்கையை கவனத்தில் கொள்ளுமா தமிழ்நாடு அரசு?
from India News https://ift.tt/hwd7jS3
0 Comments