மே தினம்: இந்தியாவில் தொழிலாளர்கள் நிலை என்ன?!

மே தினமான இன்றைய நாளில், ‘உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்’ என்ற முழக்கம் உலகம் முழுவதும் எதிரொலித்துக்கொண்டிருக்கிறது. 1923- ஆம் ஆண்டு, இந்தியாவிலேயே முதன்முறையாக சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் சென்னையில் செங்கொடியை ஏற்றி மே தினம் கொண்டாடப்பட்டதன் 100- வது ஆண்டு நிறைவுப்பெறுகிறது என்பது இந்த ஆண்டு மே தினத்தின் சிறப்பு.

ஆலைத் தொழிலாளர்கள்

உலகின் பல நடுகளில் 12 மணி நேரம் முதல் 18 மணி நேரம் வரை தொழிலாளர்கள் கட்டாய வேலை செய்யும் கொடுமைக்கு தள்ளப்பட்டதை எதிர்த்து மிகப்பெரிய போராட்டங்கள் வெடித்தன. அந்தப் போராட்டங்கள் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் ரத்தம் சிந்தியும் உயிர் தியாகம் செய்தும் வந்ததுதான் 8 மணி நேர வேலை. அப்படி உயிர் தியாகங்கள் செய்து பெற்ற ‘8 மணி நேரம் வேலை.. 8 மணி நேரம் ஓய்வு.. 8 மணி நேரம் உறக்கம்’ என்ற தொழிலாளர்களின் உரிமையைப் பறிப்பதற்கான சதிவேலை தற்போது நடந்துகொண்டிருக்கிறது.

இந்தியாவில் தொழிலாளர் சட்டங்களில் தொழிலாளர்களுக்கு சாதகமாக இருந்த அம்சங்களையெல்லாம் மாற்றி, தொழிலாளர் விரோத சட்டங்களை மத்திய அரசு கொண்டுவருகிறது என்று இந்தியா முழுவதும் தொழிற்சங்கங்கள் போராடிவருகின்றன. ஆகவேதான், 2014-ல் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு மத்தியில் வந்ததற்குப் பிறகு, கடந்த ஒன்பது ஆண்டுகளில் பல அகில இந்திய வேலை நிறுத்தங்களை தொழிற்சங்கங்கள் நடத்தியிருக்கின்றன.

தொழிலாளர்கள் போராட்டம்

இந்தச் சூழலில், மத்திய பா.ஜ.க அரசின் கொள்கைகளை கடுமையாக எதிர்க்கிற மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசே, 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக அதிகரித்து சட்ட மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்றியிருக்கிறது. கூட்டணிக் கட்சிகள், பொதுமக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக, அதை தற்போது நிறுத்திவைத்திருக்கிறார்கள். மே தினத்துக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறையை எங்கள் அரசுதான் வழங்கியது என்றும், மே தினப் பூங்காவை எங்கள் அரசுதான் கொண்டுவந்தது என்றும் பல ஆண்டுகளாக பெருமை பேசிவரும் தி.மு.க-வின் ஆட்சியிலேயே தொழிலாளர் விரோத செயல் நடைபெறுகிறது என்றால், தொழிலாளர்களின இன்றைய நிலையை எளிதில் புரிந்துகொள்ள முடியும்.

இன்றைய காலக்கட்டத்தில் இந்தியத் தொழிலாளர்கள் எதிர்கொண்டுவரும் பிரச்னைகள் குறித்து மூத்த தொழிற்சங்கத் தலைவரும் ரயில்வே தொழிலாளர் சங்கமான டி.ஆர்.இ.யூ-வின் அகில இந்திய துணைத் தலைவருமான ஆர்.இளங்கோவனிடம் பேசினோம்.

“1886-ல் சிகாகோ நகரில் 8 மணி நேரத்துக்கு மேல் வேலை செய்ய முடியாது என்று தொழிலாளர்கள் திரண்டார்கள். அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடந்தது. பலர் உயிரிழந்தனர். பலர் சிறையில் அடைக்கப்பட்டனர். நான்கு பேர் தூக்கிலிடப்பட்டனர். அதன் பிறகு, 1889-ம் ஆண்டு பிரடெரிக் ஏங்கெல்ஸ் பிரஞ்சு புரட்சியின் நுற்றாண்டைக் கொண்டாடச் சென்ற இடத்தில், சர்வதேச தொழிலாளர் அமைப்பின் சார்பாக உலகம் முழுவதும் மே தினத்தைக் கொண்டாட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. அதிலிருந்துதான் மே தினம் கொண்டாடப்படுகிறது.

மே தினத்தைக் கொண்டாடுபவர்கள் இரண்டு விதங்களாக இருக்கிறார்கள். ஒரு பகுதியினர் மார்க்சிஸ்டுகள், இன்னொரு பகுதியினர் சீர்திருத்தவாதிகள். சீர்திருத்தவாதிகளைப் பொறுத்தவரை, உடனடிப் பொருளாதார கோரிக்கைகளை முன்வைத்து மே தினத்தைக் கொண்டாடுகிறார்கள். மார்க்சிஸ்டுகளோ, புரட்சிகரப் பாரம்பர்யத்தின்படி மே தினத்தைக் கொண்டாடுகிறார்கள்.

பூ வியாபாரி

தொழிலாளர்களின் மகத்தான போராட்டங்களின் விளைவாக 12 மணி நேரத்திலிருந்து 8 மணி நேரமாக வேலை நேரம் குறைந்தது என்றாலும், சுரண்டல் ஒழியவில்லை. உபரி உழைப்புச் சுரண்டல் என்பது தொடாகிறது. ஆகவேதான், வேலையில்லா திண்டாட்டமும் பொருளாதார நெருக்கடிகளும், வறுமையும், பல்வேறு சமூக அவலங்களும் தொடர்கின்றன. இதற்குத் தீர்வு என்னவென்றால், இன்றைக்கு இருக்கும் முதலாளித்துவ சமூகத்தைத் தூக்கியெறிந்துவிட்டு சோசலிச சமூகத்தை உருவாக்க வேண்டும். இதுதான் புரட்சிக்கரப் பாரம்பர்யம். சீர்திருத்தவாதிகளுக்கோ, தற்போது இருக்கும் சமூக அமைப்பை மாற்ற வேண்டும் என்கிற எண்ணமெல்லாம் கிடையாது. ஆனால், சுரண்டல் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதுதான் மே தினத்தின் லட்சியம்.

இந்தியாவில் 8 மணி நேர வேலை என்பதை சட்டத்தில் கொண்டுவந்துவிட்டார்கள் என்றாலும், நடைமுறையில் அது இல்லை. மத்திய அரசின் கீழ் வரும் ரயில் துறையில்கூட 12 மணி நேர வேலை இன்னமும் இருக்கிறது. ரயில்வே ஓட்டுநர்கள் 14 மணி நேரம் வேலை செய்கிறார்கள்.ஐ.டி துறையில் 12 மணி நேரம் வேலை செய்கிறார்கள். வாரத்தில் 48 மணி நேரத்துக்கு மேல் வேலை நேரம் இருக்கக்கூடாது என்று சட்டம் இருந்தாலும், ‘ஈஸ் ஆஃப் டூயிங் பிசினஸ்’ வேண்டும் என்று உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்கள் ஆட்சியாளர்களுக்கு நிர்ப்பந்தம் கொடுகின்றன.

அதன் விளைவாகத்தான், ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை வாங்கலாம் என்று மத்திய அரசும், சில மாநில அரசுகளும் சட்டம் கொண்டுவந்திருக்கின்றன. இந்தியாவில் 44 தொழிலாளர் சட்டங்கள் இருந்தன. அவற்றில் ஐந்த சட்டங்கள் ஜி.எஸ்.டி வந்தபோது ஒழிக்கப்பட்டுவிட்டன. மீதி 29 சட்டங்களை நான்கு தொகுப்புச் சட்டங்களாக மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவந்திருக்கிறது.

ஐ.டி துறை ஊழியர்கள்

48 மணி நேரத்துக்குள்தான் வேலை நேரம் இருக்க வேண்டும்... மிகை நேரம் வேலை செய்தால் மிகை ஊதியம் வழங்க வேண்டும்... போன்ற தொழிலாளர்களுக்கு சாதகமான அம்சங்களெல்லாம் காலிசெய்துவிட்டார்கள். 18-ம் நூற்றாண்டில் இருந்ததைப் போல மீண்டும் அடிமை முறையைக் கொண்டுவருகிறார்கள். தொழிலாளர்களின் உரிமைகளுக்காக தொழிற்சங்கங்கள் போராடுகின்றன. எனவே, தொழிற்சங்கங்களின் உரிமைகளைப் பறிக்கிற மாதிரியான சட்டங்களயும் கொண்டுவந்துவிட்டார்கள்.

தற்போது தொழிலாளர்களுக்கு சாதகமாக மிச்சம் மீதி இருக்கிற சட்டங்களிலும், வஞ்சகமாக பல விதிகளைக் கொண்டுவந்திருக்கிறார்கள். அதாவது, இந்தந்த சட்டங்கள் யாருக்கெல்லாம் பொருந்தாது என்று அரசு அறிவித்தால், அவர்களுக்கு அந்தச் சட்டங்கள் பொருந்தாது என்ற நிலை உருவாகிவிடும். உதாரணமாக ,‘ஸ்டாண்டிங் ஆர்டர்’ என்கிற நிலை ஆணை இருக்கிறது. அதில், 8 மணி நேர வேலை, ஷிஃப்ட் முறை எப்படி இருக்க வேண்டும், வேலை நேரத்தில் ஒரு தொழிலாளி தவறு செய்தால் அவருக்கு என்ன தண்டனை, எவையெல்லாம் தவறுகள், தவறுக்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளிக்கு பிழைப்பூதியம் கொடுப்பது என பல விதிமுறைகள் நிலை ஆணையில் இருக்கின்றன.

சிஐடியு

நூறு தொழிலாளர்கள் பணியாற்றும் இடங்களுக்கு இந்தச் சட்டம் பொருந்தும் என்று இருந்தது. இதை, நூறு தொழிலாளர்களுக்கு குறைவாக இருக்கும் தொழில் இடங்களில் இந்த நிலை ஆணையைப் பின்பற்றத் தேவையில்லை என்று கொண்டுவருகிறார்கள். 70 சதவிகிதமாக தொழிற்சாலைகள் 100-க்கும் குறைவான தொழிலாளர்களைக் கொண்டவையாக இருக்கின்றன. அப்படியென்றால், 70 சதவிகித தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு நிலை ஆணையில் கூறியுள்ள அம்சங்கள் பொருந்தாது. இப்போது, 300 தொழிலாளிக்கு குறைவாக இருக்கும் தொழிற்சாலைகளுக்கு நிலை ஆணை பொருநதாது என்று கொண்டுவந்திருக்கிறார்கள். அப்படியென்றால், 90 சதவிகித தொழில் இடங்களில் அந்தச் சட்டம் பொருந்தாது.

ஒரு தொழிற்சாலையை அதன் முதலாளியால் தன் விருப்பத்துக்கு ஏற்ப நிரந்தரமாக மூடிவிட்டுப் போய்விட முடியாது. 100-க்கும் குறைவான தொழிலாளர்களைக் கொண்ட நிறுவனம் என்றால், அதை நிரந்தரமாக மூடுவதற்கு அரசிடம் அனுமதி வாங்கத் தேவையில்லை. 100-க்கும் மேல் தொழிலாளர்கள் இருந்தால், அதை மூடுவதற்கு அரசின் அனுமதியை வாங்க வேண்டும். தற்போது கொண்டுவரப்பட்டிருக்கும் தொகுப்புச் சட்டத்தில், 400, 500 தொழிலாளர்கள் பணியாற்றும் தொழிற்சாலைகளைக்கூட அனுமதி வாங்காமல் மூடிவிட்டுப் போய்விடலாம் என்று கொண்டுவந்திருக்கிறார்கள்.

புலம்பெயர்த் தொழிலாளர்கள்

போக்குவரத்து போன்ற அத்தியாவசிய சேவைகளில் இருக்கும் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்ய வேண்டுமென்றால் மட்டும்தான் ‘வேலைநிறுத்த நோட்டீஸ்’ கொடுத்துவிட்டு ஸ்டிரைக்கில் ஈடுபட வேண்டும் என்று முன்பு இருந்தது. இப்போது, எல்லா விதமான தொழிற்சாலைகளுக்கும் நோடடீஸ் கொடுத்துததான் ஸ்டிரைக் செய்ய வேண்டும் என்று கொண்டுவந்துவிட்டார்கள். அதாவது, மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் தொகுப்புச் சட்டங்கள், நிறுவனங்களுக்கு மட்டுமே சாதமாக இருக்கிறது. தொழிலாளர்களின் உரிமைகளை அது பறிக்கிறது. குழந்தைத் தொழிலாளர் ஒழிப்புச் சட்டம், மகப்பேறு சட்டம், பெண்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் என்பது என எதுவும் 90 சதவிதத் தொழில்களுக்கு பொருந்தாது என்று ஆக்கிவிட்டார்கள்” என்கிறார் தொழிற்சங்கத் தலைவர் ஆர்.இளங்கோவன்.

தொழிற்சாலைகளில் பணியாற்றுகிற தொழிலாளர்களுக்கு இந்த நிலையென்றால், எந்த சட்டப்பாதுகாப்பும் இல்லாத முறைசாரா தொழிலாளர்களின் நிலைமை மிகவும் பரிதாபமானது. கட்டுமானத் தொழிலாளர்கள், ஆட்டோ தொழிலாளர்கள், பூ வியாபாரிகள், சுமைப்பணித் தொழிலாளர்கள் என அன்றாடங்காய்ச்சிகளாக இருக்கும் அவர்களுக்கு எந்தவித சட்டப்பாதுகாப்பும் கிடையாது.

விவசாயிகள் போராட்டம்

தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா உட்பட பல மாநிலங்களில் வட மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான புலம்பெயர்த் தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள். அவர்களுக்கு எந்தவித சட்டப்பாதுகாப்பும் கிடையாது. மிகக் குறைந்த கூலியில் கொடூரமாக அவர்கள் வேலைவாங்கப்படும் நிலைமை இருக்கிறது.

“ ‘பாட்டாளி மக்களே.... எங்களுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்தால் உங்களுக்கு செருப்பாக உழைப்போம்’ என்று வீதியில் இறங்கி வாக்கு கேட்டு தேர்தலில் வெற்றிபெறுபவர்கள், அதிகாரத்தில் அமர்ந்த பிறகு, ‘ஏழை எளிய மக்களுக்காகப் பாடுபடுகிறோம்’ என்று மேடைகளில் வாய்ஜாலம் காட்டுகிறார்கள். ஆனால், அவர்கள், உண்மையில் செருப்பாக உழைப்பது முதலாளிகளுக்குதானே... இது தான் இந்தியாவில் இப்போதைய தொழிலாளர்கள் நிலை” என்று விமர்சிக்கிறார்கள் தொழிலாளர்கள்.



from India News https://ift.tt/iF8GYWy

Post a Comment

0 Comments