"லவ் ஜிகாத்தை மையப்படுத்துவது திட்டமிட்ட நடவடிக்கை"- `தி கேரளா ஸ்டோரி’ சினிமாவுக்கு பினராயி கண்டனம்!

கேரள மாநிலத்தில் லவ் ஜிகாத் குறித்த விவாதம் அவ்வப்போது எழுந்துவருகிறது. கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்து அமைப்புகள் மட்டுமல்லாது, கிறிஸ்தவ பிஷப்புகள் மத்தியிலும் லவ் ஜிகாத் குறித்த குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இளம்பெண்களைக் குறிவைத்து, காதலித்து மதம் மாற்றி ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புகளில் இணைத்துவிடுவதாக குற்றச்சாட்டில் கூறப்பட்டுவந்தன.

லவ் ஜிகாத் கருத்து அவ்வப்போது அரசியல்ரீதியாகவும், சர்ச்சைகளை ஏற்படுத்துவது வழக்கம். இந்த நிலையில், லவ் ஜிகாத் கருத்தை மையப்படுத்தி 'தி கேரளா ஸ்டோரி' என்ற சினிமா சண் ஷைன் பிக்சர்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

தி கேரளா ஸ்டோரி

இந்த சினிமாவின் ட்ரெய்லர் கடந்த 26-ம் தேதி வெளியான நிலையில், மே 5-ம் தேதி தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி மொழிகளில் இந்த சினிமா வெளியாகவிருக்கிறது. இந்து பெண்ணைக் காதல் வலையில் வீழ்த்தி, சிரியாவிலுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் கொண்டுசேர்ப்பது குறித்த காட்சிகள் ட்ரெய்லரில் காட்டப்பட்டிருக்கின்றன. மேலும், கேரளாவில் சுமார் 32,000 பெண்கள் மாயமானதாகவும் ட்ரெய்லரில் கூறப்பட்டிருக்கிறது. இந்த சினிமாவுக்கு சி.பி.எம்., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன.

இந்த நிலையில், `தி கேரளா ஸ்டோரி' சினிமாவுக்கு கேரளா முதல்வர் பினராயி விஜயன் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். இது குறித்து பினராயி விஜயன், "வகுப்புவாதத்தை லட்சியமாகக்கொண்டு கேரளாவுக்கு எதிராக வெறுப்பு பிரசாரத்தை உருவாக்கும் வகையில், `தி கேரளா ஸ்டோரி' என்ற இந்தி சினிமாவின் டிரெய்லர் வெளியிடப்பட்டிருக்கிறது.

மதச்சார்பற்ற மண்ணான கேரளத்தை, மதத் தீவிரவாதத்தின் மையமாகக் காட்டுவதற்கான சங் பரிவாரின் அஜண்டாவை இந்த சினிமா பரப்புகிறது என்பதை ட்ரெய்லர் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. கேரளாவில் தேர்தல் அரசியலில் ஆதாயம் அடைய சங் பரிவார் மேற்கொள்ளும் பல்வேறு முயற்சிகளின் பின்னணியில் ஒன்றுதான் முஸ்லிம்களை அன்னியப்படுத்தும் இந்த சினிமா. விசாரணை ஏஜென்சிகளும், கோர்ட்டும், மத்திய உள்துறை போன்றவை மறுத்திருக்கும் லவ் ஜிகாத் குற்றச்சாட்டை மையப்படுத்துவது திட்டமிட்ட நடவடிக்கையாகும். லவ் ஜிகாத் என்ற ஒன்று இல்லை என அன்றைய மத்திய இணை அமைச்சரும், இன்றைய மத்திய அமைச்சருமான கிஷன் ரெட்டி நாடாளுமன்றத்தில் பதிலளித்தார்.

கேரள முதல்வர் பினராயி விஜயன்

அப்படி இருந்தும் பொய்க் குற்றச்சாட்டை முக்கிய மையக்கருத்தாகக் கொண்டு சினிமா எடுத்திருப்பது உலகத்தின் முன்னில் கேரளாவை அவமானப்படுத்தி காட்ட வேண்டும் என்ற எண்ணம்தான் காரணம். கேரளாவில் மத ஒற்றுமையை தகர்த்து வகுப்புவாத விஷ விதைகளை விதைக்க, சங் பரிவார் முயல்கிறது. பிற இடங்களைப்போல கேரளாவில் அவர்களின் அரசியல் எடுபடாததால், போலிக்கதைகள் மூலம் பிரிவினை அரசியலை சினிமா மூலம் புகுத்தப் பார்க்கிறார்கள்.

எந்த உண்மையும், ஆதாரமும் இல்லாமல் சங் பரிவார் இது போன்ற கட்டுக்கதைகளை ஏற்படுத்துகிறது. கேரளாவில் 32,000 பெண்களை மதம் மாற்றி ஐ.எஸ் உறுப்பினர்களாக மாற்றியதாக பச்சைப்பொய்யை சினிமாவின் ட்ரெய்லரில் பார்க்க முடிகிறது. அந்தக் கும்பலின் பொய் தொழிற்சாலையில் உருவான போலிக்கதைதான் இது.

சினிமா

மத வெறியையும், பிரிவினையையும் உருவாக்க சினிமாவை பயன்படுத்துபவர்களைக் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் நியாயப்படுத்துவது சரியல்ல. கருத்து சுதந்திரம் என்பது பொய்களைப் பரப்புவதற்கும், மக்களைப் பிரிப்பதற்குமான லைசென்ஸ் அல்ல. வகுப்புவாத, மதவாத இயக்கங்களை மக்கள் முற்றிலும் நிராகரிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். பொய்ப் பிரசாரத்தின் மூலம் சமூகத்தில் அமைதியைக் குலைக்கும் வகுப்புவாத சக்திகள் குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சமூக விரோதச் செயல்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.



from India News https://ift.tt/cWiUFR7

Post a Comment

0 Comments