மும்பையைச் சேர்ந்த சிவானி (37) என்ற பெண்ணுக்கு, கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. 2022-ம் ஆண்டு தன் கணவரும், அவரின் பெற்றோரும் தன்னை துன்புறுத்துவதாக, சிவானி குற்றம் சாட்டினார். இதையடுத்து கடந்த ஆண்டு சிவானி, கணவர் வீட்டில் இருந்து விரட்டப்பட்டார். ஆனால் அவர் குழந்தையை எடுத்துச்செல்ல அவர்கள் அனுமதிக்கவில்லை; கணவர் வீட்டார் வைத்துக்கொண்டனர்.
இதையடுத்து சிவானி,தன் கணவர் மீது குடும்ப வன்முறை தடுப்பு சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதனை விசாரித்த கீழ் நீதிமன்றம், குழந்தையை தாயிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சிவானியின் கணவர், அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

சிவானியின் கணவர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், ’குழந்தையின் தாய்க்கு தற்போது வேலை இல்லை. அவர் நிதி நிலையும் சரியில்லை. வேலை தேடிக்கொண்டிருக்கிறார். குழந்தைக்கு 8 மாதமாக இருந்தபோது கணவர் வீட்டைவிட்டுச் சென்றுவிட்டார். அதன் பிறகு குழந்தையைக் கணவரும், அவரின் பெற்றோரும்தான் கவனித்துக்கொள்கின்றனர். எனவே குழந்தையை அவரிடம் ஒப்படைப்பது சரியாக இருக்காது’ என்று வாதிட்டார்.
சிவானி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ’குழந்தையின் தந்தை வீட்டில் 5 நாய்கள் வளர்க்கப்படுகின்றன. எனவே கணவரின் வீடு குழந்தையின் வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் சுத்தமாக இருக்காது. கணவர் வீட்டில் தொடர்ந்து துன்புறுத்தியதால்தான் வீட்டைவிட்டு வெளியேறவேண்டிய நிலை சிவானிக்கு ஏற்பட்டது’ என்று வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஸ்ரீகாந்த் போஸ்லே, தற்காலிகமாக குழந்தையை தாயிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார். ’குழந்தையின் உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு தாய்ப்பால் மிகவும் முக்கியம். கடந்த ஓர் ஆண்டாக குழந்தை அதன் தந்தை வீட்டில் வளர்வதால் தாய்ப்பால் கிடைக்காமல் சிரமப்பட்டுள்ளது. எனவே, இப்போது குழந்தையின் நலனுக்கு அது தன் தாயுடன் இருப்பதே சிறப்பான முடிவாக இருக்கும்’ என்று தெரிவித்தார்.
கடந்த ஜூலை மாதம் பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றம், தாய்ப்பால் கொடுக்கவேண்டும் என்பதற்காக நான்கு மாதக் குழந்தையை அதன் தாயிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
from India News https://ift.tt/5xMFnwI
0 Comments