`சொதப்பிய சமூகநீதி கூட்டமைப்பு’ முதல் `மாஜியின் சீர்வரிசை’ வரை - கழுகார் அப்டேட்ஸ்

பல் புடுங்கி அதிகாரிக்கு எதிராக எல்லோரும் ஒருமித்த குரலில் பேசிக்கொண்டிருக்கும் நிலையில், பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க மக்கள் பிரதிநிதி ஒருவர் மட்டும் அந்த அதிகாரிக்கு ஆதரவாக சட்டமன்றத்திலேயே குரல் கொடுத்தார். “அவர் இருக்கும் வரையில் சட்டம்-ஒழுங்கு சரியாக இருந்தது” என்று பாராட்டும் தொனியில் பேசினார் எம்.எல்.ஏ. “சாத்தான்குளம் சம்பவத்தை அன்றைய எதிர்க்கட்சியான தி.மு.க எப்படிக் கையாண்டது... இந்த எம்.எல்.ஏ ஏன் இப்படிப் பேசித் திரிகிறார்?” என்று சிலர் தலைமையிடம் ஏற்றிவிட, தலைமை அவரைப் பிடித்து வதக்கி எடுத்திருக்கிறது. ஊர் திரும்பிய அவர், அடுத்த நாளே பாதிக்கப்பட்ட மக்களை அழைத்து ஆறுதல் சொன்னார். அடுத்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், “அந்த அதிகாரி இருக்கும்போது சட்டம்-ஒழுங்கு நல்லாத்தான் இருந்தது. ஆனால், சட்டத்தை அவர் கையில் எடுத்தது தப்பு. தங்க ஊசி என்பதற்காக கண்ணில் குத்திக்கொள்ள முடியுமா?” என்று பட்டும் படாமல்தான் விமர்சித்தார். அதோடு விடாமல் பல் பிடுங்கப்பட்டவர்களைப் பார்த்து, “நீங்களும்தான் தப்பு பண்ணியிருக்கீங்க... நீங்க என்ன காந்தியா?” என்று கேட்டு அடுத்த சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் எம்.எல்.ஏ. “அண்ணனுக்கு நிறைய தொழில்கள் இருக்கு... போலீஸை பகைச்சுக்கக் கூடாதுல்ல” என்று கண்ணடிக்கிறார்கள் ர.ர-க்கள்!

“யாரையும் அனுசரித்துச் செல்வதில்லை” என மலைக்கோட்டை நகர மேயர்மீது நீண்டகாலமாகப் புகார் வாசித்துக்கொண்டிருக்கிறார்கள் உடன்பிறப்புகள். சமீபத்தில் அந்த நகரில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய மீசை அமைச்சர், “நாம எம்.எல்.ஏ ஆகிட்டோம், மேயர் ஆகிட்டோம்னு காலைத் தூக்கி தோள்ல போட்டுக்கிட்டு சுத்தக் கூடாது. நீ மேயர் மட்டுமில்லை, மாநகரச் செயலாளராகவும் இருக்கே. நீ எல்லா இடத்துக்கும் போகணும், வரணும்” என்று பகிரங்கமாகக் கண்டித்தார். கூடவே, “அந்தாளு இனிமேலும் அப்படி இருக்கலைன்னா என்கிட்ட சொல்லுங்க” என்று கட்சியினரிடம் ஓப்பனாகச் சொல்லியிருக்கிறார். “என்மீது மற்றவர்கள் சொல்லும் குற்றச்சாட்டையெல்லாம் கண்ணை மூடிக்கொண்டு அப்படியே நம்புகிறார் அமைச்சர். கண்டிக்க வேண்டுமானால் தனியாக அழைத்துப் பேசியிருக்கலாமே... இனி யார் என்னை மதிப்பார்கள்?” என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் பொங்கியிருக்கிறார் மேயர். மீசைக்காரருக்கும், அவருடைய தீவிர ஆதரவாளரான மேயருக்குமிடையிலான இந்த லடாயைக் கேள்விப்பட்ட, தாடிக்கார டெல்லி பிரதிநிதிக்கும், அன்பான அமைச்சரும் ரொம்ப ஹேப்பியாம்!

அ.தி.மு.க பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்று முதன்முறையாகச் சேலத்துக்குச் சென்றார் எடப்பாடி பழனிசாமி. அப்போது அங்கே முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் 100 வாகனங்களில் சென்று 50 வகையான சீர்வரிசைகளைக் கொடுத்து, அவரை வரவேற்றார். பொதுக்குழு வழக்கு முடியும் வரை ஒதுங்கியிருந்தவர், திடீரென இவ்வளவு பெரிய வரவேற்பு கொடுத்து பாசமழை பொழிவது ஏன் என்று விசாரித்தால், அவர்மீது வரிசைகட்டிய புகார்கள்தான் சீர்வரிசைக்குக் காரணம் என்கிறார்கள்.

சீர் வரிசை எடுத்துவரும் முன்னாள் அமைச்சர்

“அண்ணாமலையோடு நெருங்கிய தொடர்பில் இருந்ததாக எழுந்த சர்ச்சை, வழக்குகளிலிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள தி.மு.க-வுடன் உடன்படிக்கை செய்துகொண்டதாகச் சொல்லப்பட்ட விவகாரம், ஈரோடு இடைத்தேர்தலில் தலைமை சொல்லுக்குக் கீழ்ப்படிந்து நடக்காதது, சசிகலா குரூப்மீதான மறைமுகப் பாசம் எனப் பல்வேறு விவகாரங்களில் விஜயபாஸ்கர்மீது எடப்பாடி அப்செட்டில் இருந்தார். அதைச் சரிசெய்யவே இந்தச் சீர்வரிசை நாடகமெல்லாம்... ஆனால், இந்த வரவேற்பையெல்லாம் எடப்பாடி பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை” என்கிறார்கள் எடப்பாடியைச் சுற்றியிருக்கும் மாஜிக்கள் சிலர்.

தி.மு.க முயற்சியால் உருவாக்கப்பட்ட அகில இந்திய சமூகநீதிக் கூட்டமைப்பின் முதல் தேசிய மாநாடு டெல்லியில் நடந்தது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மட்டுமின்றி தேஜஸ்வி யாதவ், அகிலேஷ் யாதவ், டி.ராஜா, டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட பல்வேறு தேசியக் கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள் கலந்துகொண்டு பேசினர். ஆனால், தி.மு.க நினைத்த அளவுக்கு இந்த நிகழ்ச்சி பெரிய அளவில் பேசப்படவில்லை.

நிகழ்ச்சி சொதப்பியது ஏனென்று விசாரித்தால், “இந்த நிகழ்ச்சியை முன்னின்று நடத்தியது தி.மு.க எம்.பி வில்சன். ஜூனியரான அவரது அனுபவமின்மை, அணுகுமுறைக் குறைபாடே மூத்த நிர்வாகிகளையெல்லாம் இந்த நிகழ்ச்சியைப் பற்றிப் பேசி, அதை புரொமோட் செய்யவிடாமல் தடுத்துவிட்டது. அதே காரணத்தால்தான் ஐடி விங்கும் கண்டுகொள்ளவில்லை” என்கிறார்கள் உள்விவகாரம் அறிந்தவர்கள்.

இலைக் கட்சியின் தனிப்பெரும் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்ட துணிவானவருக்கு, நிர்வாகிகள்மீது கடும் கோபமாம். தன்னை வாழ்த்தி, பெரிய அளவில் பேனர்களோ, போஸ்டர்களோ, பத்திரிகை - டி.வி விளம்பரங்களோ கொடுக்கப்படாததுதான் அவரது கோபத்துக்குக் காரணம் என்கிறார்கள். கட்சியின் மா.செ-க்களை அழைத்து, ‘எவ்வளவு பெரிய போராட்டத்துக்குப் பிறகு இந்த இடத்துக்கு வந்திருக்கேன்... ஒரு விளம்பரம் வைக்கக்கூடவா தோணலை... எல்லாத்தையும் கேட்டுக் கேட்டுத்தான் வாங்கணுமா?’ என ரெய்டு விட்டதாம் துணிவானவர் தரப்பு.

ஏற்கெனவே, பணிவானவர், ஸ்மால் மம்மி, ட்ரிபுள் இனிஷியல் தலைவர் ஆதரவு மனநிலையில் இருக்கும் மா.செ-க்கள் மாற்றப்படுவார்கள்... எனச் சொல்லப்பட்டுவரும் சூழலில் எதற்கு வீண் வம்பு எனச் சில மா.செ-க்கள் இப்போது விழுந்தடித்துக்கொண்டு வேக வேகமாக விளம்பரம் செய்கிறார்களாம். ஆனாலும் திருப்திப்படாமல், “எதையும் சொல்லாமல் செய்ய மாட்டார்களா இவர்கள்?” என விரைப்பாக இருக்கிறதாம் துணிவானவர் தரப்பு.



from India News https://ift.tt/r7dPk4w

Post a Comment

0 Comments