ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதா... கடந்து வந்த பாதை!

தமிழ்நாட்டில், ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு பெரும் தொகையை இழந்தவர்கள் மனம் உடைந்து தற்கொலை செய்துகொள்ளும் போக்கு அதிகரித்துவந்தது. அது குறித்து பரவலாக புகார்களும் வந்தன. அதையடுத்து, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியில் ஆன்லைன் சூதாட்ட அவசரத் தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அந்த சட்டத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சிலர் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தமிழக அரசு கொண்டுவந்த அவசரச் சட்டத்தை ரத்துசெய்து தீர்ப்பளித்தது.

ஆன்லைன் ரம்மி

ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகும், ஆன்லைன் சூதாட்டத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் போக்கு தொடர்ந்தது. அதனால், தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கடந்த ஆண்டு ஜூன் 6-ம் தேதி நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், ஆன்லைன் ரம்மி விளையாட்டால் ஏற்படும் பாதிப்புகள், ஆபத்துகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, ஜூன் 9, 2022 அன்று ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் நான்கு பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்தது. 

அந்தக் குழுவில், ஐ.ஐ.டி தொழில்நுட்ப வல்லுநர் டாக்டர் சங்கரராமன், உளவியல் மருத்துவர் லட்சுமி விஜயகுமார், காவல்துறை கூடுதல் இயக்குநர் வினித் தேவ் வான்கடே உள்ளிட்டோர் இடம்பெற்றனர். அந்தக் குழு வழங்கும் பரிந்துரைகளின் அடிப்படையில், அவசரச் சட்டம் கொண்டுவரப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நீதிபதி சந்துரு

நீதிபதி சந்துரு தலைமையிலான குழு பல்வேறு தரப்பினரின் கருத்துக்களைக் கேட்டறிந்து, ஏற்கெனவே உள்ள விதிகளின்படி ஆன்லைன் சூதாட்டத்தைக் கட்டுப்படுத்த இயலாது என்பதால், புதிய சட்டம் ஒன்றை இயற்றுவதற்கு பரிந்துரை செய்தது. கடந்த ஆண்டு ஜூன் 27-ம் தேதி, 71 பக்க அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நீதிபதி சந்துரு சமர்ப்பித்தார்.

அதன் பிறகு, ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிப்பதற்கான அவசரச் சட்டத்துக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் 26-ம் தேதி அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. பின்னர், அந்த மசோதா ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டது. அவசரச் சட்டத்துக்கு உடனடியாக ஒப்புதல் அளித்தார் ஆளுநர்.

பின்னர், அக்டோபர் 17-ம் தேதி கூடவிருக்கும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் இதற்கான நிரந்தரச் சட்டம் கொண்டுவரப்படும் என்று தகவல் வெளியானது. அதன்படி, ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்வதற்கும், ஆன்லைன் விளையாட்டை ஒழுங்குபடுத்துவதற்குமான மசோதாவை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கடந்த அக்டோபர் 19-ம் தேதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். அந்த மசோதா அவையில் நிறைவேற்றப்பட்டது.

ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்ட அந்த மசோதாவை, ஆளுநர் மாளிகை கிடப்பில் போட்டுவைத்தது. மேலும் ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களை சார்ந்தவர்களையும் ஆளுநர் சந்தித்து பேசியது சர்ச்சையானது. பின்னர், திடீரென கடந்த டிசம்பர் மாதம் அந்த மசோதா குறித்து பல விளக்கங்களை தமிழ்நாடு அரசிடம் ஆளுநர் கோரியிருந்தார். அதற்கு, ஒரே நாளில் ஆளுநருக்கு தமிழக அரசு விளக்கங்களை அளித்தது.

ஆளுநர் ஆர்.என்.ரவி

தேவையான விளக்கங்களை ஆளுநருக்கு தமிழ்நாடு அரசு அனுப்பியது மட்டுமல்லாமல், ஆளுநரை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சந்தித்தார். அந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரகுபதி, “ஆன்லைன் ரம்மி தடை மசோதா குறித்தும் ஆளுநருக்கு விளக்கம் அளித்தேன். வல்லுநர் குழுவினர் அளித்துள்ள தகவல்களையும் தெரிவித்தேன். அப்போது, இந்த மசோதா குறித்து பரிசீலித்து முடிவெடுப்பதாக ஆளுநர் கூறினார்” என்றார்.

மேலும், “ஆன்லைன் சூதாட்ட அவசர சட்டம் காலாவதி ஆகிவிட்டதால், ஏற்கனவே அமலில் உள்ள சட்டத்தின் அடிப்படையில்தான் இனி தமிழக அரசு நடவடிக்கை எடுக்க முடியும். ஆளுநர் ஒப்புதல் அளித்தவுடன் ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை தமிழக அரசு அமல்படுத்த முடியும். அதற்கு நாங்களும் தயாராக உள்ளோம்” என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

ஆர்.என்.ரவி

ஆனாலும், அந்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காமல் நான்கு மாதங்கள் காலம் கடத்திய ஆளுநர், கடந்த மார்ச் 8-ம் தேதி அந்த மசோதாவை தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பினார். அதனால், தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநருக்கும் இடையிலான மோதல் போக்கு அதிகரித்தது. அதன் பிறகு, மீண்டும் கடந்த மார்ச் மாதம் 23-ம் தேதி ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது, “மிகுந்த கனந்த இதயத்துடன் நின்றுகொண்டு உள்ளேன். இதுவரை 46 பேர் உயிரிழந்துள்ளனர்” என்று முதல்வர் கூறினார். பின்னர், ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீது எம்.எல்.ஏ-க்களின் விவாதம் நடைபெற்றது. பிறகு, சபாநாயகரால் குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு மீண்டும் மசோதா நிறைவேற்றப்பட்டது. 

ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலின்

இதனிடையே ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆளுநர், `ஒரு மசோதாவை ஆளுநர் நிலுவையில் வைத்திருந்தால், அது நிராகரிக்கப்பட்டதாகவே அர்த்தம்’ எனப் பேசி சர்ச்சையை கிளப்பினார். இந்த நிலையில் தான் தமிழக அரசு ஆளுநருக்கு எதிராக தனித்தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியது.

இதற்கிடையே, ஆளுநருக்கு எதிராக தனித்தீர்மானம் கொண்டு வந்த அதே நாளில் சட்டமன்றத்தில் இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதாவுக்கு (ஏப்ரல் 10-ம் தேதி) ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்திருகிறார்.



from India News https://ift.tt/hPOeAFw

Post a Comment

0 Comments