இந்தியாவில், 2012 அக்டோபர் மாதம் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில், ஆம் ஆத்மி கட்சி துவங்கப்பட்டது. கடந்த பத்து ஆண்டுகளில் மெல்ல மெல்ல வளர்ந்து, இன்று பஞ்சாப் மற்றும் டெல்லியில் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ளது. கட்சிகளுக்கான சட்டத்தின் படி, ஒரு கட்சி, நான்கு மாநிலங்களில், 6 சதவிகிதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருந்தால், தேசியக் கட்சி அந்தஸ்தைப்பெறும்.
அந்த வகையில், ஆம் ஆத்மி டெல்லி, பஞ்சாப்பில் ஆட்சியில் உள்ளதுடன், 2022ல் கோவாவில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், 6.8 சதவிகிதம்; கடந்த டிசம்பர் மாதம் நடந்த குஜராத் தேர்தலில், 12.9 சதவிகிதம் வாக்குகளைப் பெற்றிருப்பதன் மூலம், ஆம் ஆத்மி, தேசியக் கட்சி அந்தஸ்து பெறும் தகுதியைப் பெற்றிருக்கிறது.
ஆனால், மத்திய தேர்தல் ஆணையத்தால், ஆத் ஆத்மிக்கு தேசியக்கட்சி அந்தஸ்து வழங்கப்படாமல் இருந்தது. வரும் மே 10-ம் தேதி கர்நாடகாவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருப்பதால், தேசியக்கட்சி அந்தஸ்து வழங்கக்கோரி, கடந்த வாரம், கர்நாடகா உயர் நீதிமன்றத்தில், ஆம் ஆத்மி கட்சியினர் மனு தாக்கல் செய்திருந்தனர். ‘‘ஏப்ரல் 13-ம் தேதிக்குள் வழக்கை முடித்து, தேசியக் கட்சி விவகாரத்தில் முடிவெடுக்க வேண்டும்’’ எனக்கூறி, தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
இந்த நிலையில், நேற்று (10ம் தேதி) மாலை, மத்திய தேர்தல் ஆணையம் ஆம் ஆத்மி கட்சிக்கு தேசிய அந்தஸ்து வழங்கியுள்ளது. கட்சி துவங்கி, 10 ஆண்டுகளில் தேசியக்கட்சியாக உருவெடுத்துள்ளதால், ஆம் ஆத்மி கட்சியினர் பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
‘அதிசயத்துக்கும் குறைவானது அல்ல’!
இது குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் ட்விட்டரில், ‘‘மிகக்குறைவான கால இடைவெளியில் தேசியக்கட்சி அந்தஸ்தா? இது அதிசயத்துக்கும் குறைவானது அல்ல. கோடிக்கணக்கான மக்கள் எங்களை இந்த நிலைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். அவர்கள் எங்களிடம் நிறைய எதிர்பார்க்கின்றனர்; எங்களிடம் பெரிய பொறுப்பை ஒப்படைத்துள்ளனர்,’’ எனப்பதிவிட்டுள்ளார்.
தேசிய அந்தஸ்தை இழந்த 3 கட்சிகள்!
ஒரு புறம் ஆம் ஆத்மி தேசியக்கட்சி அந்தஸ்து பெற்ற நிலையில், மம்தா பாஜர்ஜியின் அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் (என்.சி.பி) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.ஐ) ஆகியவற்றின் தேசிய கட்சி அந்தஸ்து திரும்பப்பெறப்பட்டு, பிராந்திய கட்சிகளாக மாற்றப்பட்டுள்ளன.
தேசிய தேர்தல் ஆணைய உத்தரவு என்ன?
‘ஆம் ஆத்மி கட்சி தேசியக் கட்சியாக அங்கீகரிக்கப்படுகிறது. இக்கட்சி, பிரிவு 6பி (iii) நிபந்தனையை நிறைவேற்றியுள்ளது. அதாவது, தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், டெல்லி, கோவா, பஞ்சாப் மற்றும் சமீபத்தில் நடந்த குஜராத் மாநிலத்தில், மாநிலக்கட்சியாக அங்கீகாரம் பெற்றுள்ளது.
தேசியக்கட்சிக்கான தகுதியை இழந்ததால், அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் (என்.சி.பி) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.ஐ) ஆகியவற்றின், தேசியக்கட்சி அந்தஸ்து திரும்பப்பெறப்பட்டது. வரும் தேர்தல்களின் முடிவுகளின் அடிப்படையில் இழந்த அந்தஸ்தை கட்சிகள் திரும்பப்பெற முடியும்,’ என, அறிவித்துள்ளது.
இந்தக்கட்சிகளின் அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால், தற்போது இந்தியாவில், பா.ஜ.க, காங்கிரஸ், ஆம் ஆத்மி, மா.கம்யூ., பகுஜன் சமாஜ் கட்சி (B.S.P), தேசிய மக்கள் கட்சி (N.P.P) ஆகிய ஆறு கட்சிகள் மட்டுமே தேசியக்கட்சிகளாக உள்ளன.
from India News https://ift.tt/no7R6VQ
0 Comments