முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவிடம், தற்போதைய அரசியல் சூழல் குறித்துப் பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம்.
“புதிய தலைமைக்குக் கீழ் அ.தி.மு.க-வின் செயல்பாடு எப்படி இருக்கிறது?”
“சிறப்பாக இருக்கிறது. தலைவர் கட்சி தொடங்கும்போது இருந்த எழுச்சி, இப்போது மீண்டும் வந்திருக்கிறது. முனைப்போடு கட்சியை முன்னெடுத்துச் செல்கிறார். எல்லோரிடமும் அன்பாகப் பேசி அரவணைத்துச் செல்கிறார்கள். சாதாரணத் தொண்டனாக இருந்தவர் கட்சிக்குத் தலைமை ஏற்றிருப்பது தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.”
“தென் மாவட்டத் தொண்டர்களிடம் மட்டும் அந்த உற்சாகம் இல்லாமல் இருக்கிறதோ?”
“யார் சொன்னது. தென் மாவட்ட இளைஞர்களும் எழுச்சியோடு இருக்கிறார்கள். கட்சி வேறு சாதி வேறு. ஆனால், எல்லோரும் இரண்டையும் இணைத்துப் பார்க்கிறார்கள். அ.தி.மு.க-வில் சாதி பார்த்திருந்தால் தலைவரை, அம்மாவை ஏற்றிருப்பார்களா? கட்சியைச் சிறுமைப்படுத்துவதற்காகச் சொல்வதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது”
“தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் எப்படி நடக்கிறது?”
“சபாநாயகர் நன்றாகத்தான் நடத்துகிறார். ஆனால், ஆளும் தரப்பினர்தான் குறை சொன்னால், அதைக் காது கொடுத்துக் கேட்கமாட்டோம் என்கிறார்கள். மக்களின் எண்ணங்களை வெளிப்படுத்த வாய்ப்பே கொடுக்க மாட்டோம் என்கிறார்கள். தங்கம் தென்னரசு போல சிலர் நகைச்சுவைக்காக ஏதாவது செய்கிறார்கள். மா.சு போலச் சிலர் தரம் தாழ்ந்த விமர்சனங்களை முன்வைக்கிறார்கள்.”
"எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி யார் தலைமை சிறந்தது என நினைக்கிறீர்கள்?”
“யாரையும் யாரோடும் ஒப்பிட முடியாது. மக்கள் செல்வாக்கு எடப்பாடிக்கு இருந்தது. அதோடு உழைப்பு, ஆட்சித் திறன், அனுபவசாலிகளை அருகில் வைத்துக்கொண்டு சிறப்பாகப் பணியாற்றினார். எனவேதான் அவருக்கு இந்த இடம் கிடைத்திருக்கிறது. புரட்சித் தலைவர், அம்மா மாதிரி எடப்பாடிக்கும் கூட்டம் சேர்கிறதே. அண்மையில் நடந்த கூட்டத்தில் கட்சிக்காரர்களைவிட மக்கள் அதிக அளவில் பங்கேற்றார்கள். மக்களை ஈர்க்கும் திறன் எடப்பாடிக்கு வந்துவிட்டது.”
“அப்படியானால், இப்போது கட்சி பெரியதா, எடப்பாடி பெரியவரா?”
“எடப்பாடியை இப்போதைக்குக் கட்சியின் ஆளுமையாகத்தான் பார்க்க வேண்டும். கட்சியை வலிமைப்படுத்த வியூகங்கள் வகுக்கிறார். தவறுகளைச் சுட்டிக்காட்டி உடனடியாக நடவடிக்கை எடுக்கிறார். இதுதானே ஆரோக்கியமான தலைமைக்கு அடையாளம்.”
”அ.தி.மு.க ஆட்சியில் அறிவித்த திட்டங்களில், எதுவுமே நிறைவேற்றப்படவில்லை என்கிறார்களே?”
“தற்போதைய நிதியமைச்சரே, `அ.தி.மு.க ஆட்சியில் 110 விதியின் கீழ் கொண்டுவந்தவையில் 69 சதவிகிதம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. 20 சதவிகித பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன. 10 சதவிகிதத்தைத் தள்ளுபடி செய்திருக்கிறோம்' என வெள்ளை அறிக்கை வெளியிட்டிருக்கிறார். நிதியமைச்சர் சட்டமன்றத்துக்குள் அப்படிச் சொல்லிவிட்டு, இப்படிச் சொல்லியிருக்கிறார். மகளிர் அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் என்றார்கள், கூட்டுறவு கடன் எல்லாம் தள்ளுபடி செய்யப்படும் என்றார்கள். ஆனால், அதை எல்லாம் குழப்பியடிக்கிறார்கள். விடியலைத் தருகிறோம். என்றார்கள்... இருளைத்தான் கொடுத்திருக்கிறார்கள். முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவதுதான் தி.மு.க-வின் பண்பாடு என்பதால் அவர்கள் சொல்வதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை.”
“எல்லாப் பிரச்னைக்கும் காரணம், நிதிநிலைமையை நீங்கள் மோசமாக வைத்துவிட்டுச் சென்றதுதான் என்கிறார்களே?”
“நிதிநிலைமையை இவர்கள் சொல்லும்படியெல்லாம் வைத்துவிட்டுச் செல்ல முடியாது. நமக்கு மத்திய அரசு தனிக்கைக் குழு ஒன்று இருக்கிறது. அது மாநில அரசு வாங்கும் கடன்களைத் தனிக்கை செய்யும். மத்திய அரசு குறிப்பிட்ட நிதி அளவைவிட அதிக அளவு கடன் வாங்கிவிட முடியாது. அப்படி வாங்குவதானால் அதற்கான காரணத்தைச் சொல்ல வேண்டும். நாங்கள் வாங்கிய கடன்களெல்லாம் கட்டமைப்புகளை மேம்படுத்தத்தான். பத்து ஆண்டுகளில் நாங்கள் வாங்காத கடனை இரண்டே ஆண்டுகளில் தி.மு.க அரசு வாங்கிவிட்டது. இதுவரை 2.40 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியிருக்கிறார்களே. இப்போதும் கடன் மேல் கடன் வாங்கிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. அ.தி.மு.க அரசின் திட்டங்களுக்கு மூடுவிழா கண்டதுதான் இவர்களின் சாதனையே.”
“தயிரை `தஹி' என எழுதச் சொன்ன விவகாரத்தில் அ.தி.மு.க எந்தக் கருத்தும் சொல்லவில்லையே?”
“அதெல்லாம் ஒரு பிரச்னையா. `தவறு நடந்துவிட்டது மாற்றிவிட்டோம்' எனச் சொல்லிவிட்டார்கள். அதற்குமேல் அதில் பேச என்ன இருக்கிறது?”
“ `பத்து ஆண்டுகளாக நீங்கள் மதுரைக்கு எதுவுமே செய்யவில்லையா?' என சபாநாயகர் கேட்டது குறித்து?”
“நிறைய திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறேன். இவர் கொண்டுவரும் தொழில்துறை முன்னெடுப்புகள் வெற்றியடைய வேண்டுமானால் அதற்குக் கட்டுமானம் சிறப்பாக இருக்க வேண்டும். எங்கள் ஆட்சியில் மதுரையில் அந்தளவு கட்டுமானங்களைச் செய்திருக்கிறோம். அதேபோல தி.மு.க-வினரும் செயல்பட்டு மதுரையை ஆஹா ஓஹோ எனக் கொண்டு வர வேண்டும் எனச் சொன்னேன்.”
from India News https://ift.tt/oIO5rLm
0 Comments