புல்வாமா தாக்குதல்: "பிரதமர் மோடி என்னை அமைதியாக இருக்கச் சொன்னார்" - ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர்

பா.ஜ.க ஆட்சியில் கடந்த 2019, பிப்ரவரி 14 அன்று ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட புல்வாமா தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 40 பேர் பலியான சம்பவம் நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த நிலையில், புல்வாமா தாக்குதல் நடந்தபோது ஜம்மு காஷ்மீரின் ஆளுநராக இருந்த சத்ய பால் மாலிக், ராஜ்நாத் சிங் தலைமையிலான அப்போதைய மத்திய உள்துறை அமைச்சகத்தின் அலட்சியமே புல்வாமா தாக்குதலுக்கு காரணம் என்றும், அப்போது பிரதமர் மோடி தன்னை அமைதியாக இருக்கச் சொன்னதாகவும் கூறியிருப்பது பேசுபொருளாக மாறியிருக்கிறது.

சத்ய பால் மாலிக்

நேற்று பிரபல ஊடகத்துடனான நேர்காணலில் புல்வாமா தாக்குதல் குறித்து பேசிய முன்னாள் ஆளுநர் சத்ய பால் மாலிக், ``பெரிய கான்வாய்கள் சாலையில் பயணிப்பதில்லை. அதனால், சி.ஆர்.பி.எஃப் தங்கள் வீரர்களை அழைத்துச் செல்ல விமானம் கேட்டது. அவர்களுக்கு ஐந்து விமானங்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால், உள்துறை அமைச்சகம் அதற்கு மறுத்துவிட்டது.

அவர்களுக்கு விமானங்களை வழங்கியிருந்தால், இது நடந்திருக்காது. பிறகு, நம்முடைய தவறு காரணமாகவே இந்தத் தாக்குதல் நடந்தது என்று, அன்று மாலையே பிரதமர் மோடியிடம் கூறினேன். ஆனால் பிரதமர் மோடி, அதுப் பற்றி பேசாமல் அமைதியாக இருக்குமாறு கேட்டுக்கொண்டார்" என்று கூறினார்.

சத்ய பால் மாலிக்கின் இத்தகைய கூற்று எதிர்க்கட்சிகளிடையே பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

புல்வாமா தாக்குதல்

இது குறித்து காங்கிரஸ் தன் ட்விட்டர் பக்கத்தில் சத்யா பால் மாலிக்கின் நேர்காணல் வீடியோவைப் பதிவிட்டு, ``உங்களுடைய அரசின் தவறால் தான் இந்த தாக்குதலும், 40 வீரர்களின் உயிர்தியாகமும் நடந்திருக்கிறது. நம்முடைய ஜவான்களுக்கு விமானம் கிடைத்திருந்தால், தீவிரவாத சதி தோல்வியடைந்திருக்கும். இந்தத் தவறுக்கு நீங்கள் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும், ஆனால், நீங்கள் இந்த உண்மையை மறைத்து, உங்கள் இமேஜைக் காப்பாற்ற முயற்சிக்கிறீர்கள். தற்போது சத்ய பால் மாலிக்கின் வார்த்தைகளால் நாடே அதிர்ச்சியிலிருக்கிறது" என ட்வீட் செய்திருக்கிறது.



from India News https://ift.tt/D5Rmhfn

Post a Comment

0 Comments