தமிழகம் முழுவதும் இருக்கும் அரசு மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைப் பிரிவு, இதயநோய்ப் பிரிவு, தீவிர சிகிச்சைப் பிரிவு, குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவு, புதிதாக பிறந்த குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவு, இதய தீவிர சிகிச்சைப் பிரிவு போன்ற முக்கிய சிகிச்சைப் பிரிவுகள் இயங்கிவருகின்றன.
இங்கு தினந்தோறும் சுமார் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் டயாலிசிஸ் சிகிச்சை வழங்கப்பட்டுவருகிறது.
இந்த நிலையில், சமீபகாலமாக அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் சிகிச்சை பெயரளவுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இதற்குப் போதுமான அளவு பணியாளர்கள் நியமிக்கப்படாததும், சிகிச்சை உபகரணங்கள் பற்றாக்குறை நிலவி வருவதுமே முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது.
இது குறித்து நம்மிடம் பேசிய பெயர் சொல்ல விரும்பாத மருத்துவத்துறை ஊழியர் ஒருவர். "கிட்னி செயலிழக்கும்போது இயற்கையாக அது செய்ய வேண்டிய வேலைகளைச் செய்ய முடியாது. அப்போது மெஷின் மூலமாக அந்த வேலைகள் செய்யப்படும். இதுவே டயாலிசிஸ் சிகிச்சை.
நோயாளிகளின் நிலையைப் பொறுத்து வாரம் ஒருமுறை முதல் இரண்டு நாள்களுக்கு ஒருமுறை வரை டயாலிசிஸ் செய்துகொள்ள வேண்டும். பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் சிகிச்சை வழங்கக்கூடிய பணியாளர்களுக்குப் பற்றாக்குறை நிலவி வருகிறது.
கடந்த சில ஆண்டுகளாகப் புதிய பணியாளர்கள் நியமனம் செய்யப்படவில்லை. பிற பணிகளில் ஈடுபடுபவர்களையும், ஒப்பந்தப் பணியாளர்களையும் வைத்துதான் சிகிச்சையளித்து வருகிறார்கள். அதேபோல் உபகரணங்களும் போதுமான அளவுக்கு இல்லை.
இதனால் தனியார் மருத்துவமனைகளுக்கு டயாலிசிஸ் சிகிச்சைக்காக பொதுமக்கள் செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். அங்கு ஒருமுறை இந்த சிகிச்சை எடுத்துக்கொள்வதற்கு ரூ.1,200 முதல் ரூ.2,500 வரை செலவு செய்ய வேண்டிய நிலை இருக்கிறது. எனவே, இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
இது குறித்து நம்மிடம் பேசிய சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் செயலாளர் ரவீந்திரநாத். "தமிழகத்தில் சிறுநீரக பாதிப்பைச் சந்திப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. 2022-ம் ஆண்டில் மட்டும் தமிழகம் முழுவதும் இருக்கும் அரசு மருத்துவமனைகளில் 3.85 லட்சம் ஹீமோ டயாலிசிஸ் சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது.
ஆனால், போதுமான அளவுக்கு சிகிச்சையளிக்கப் பணியாளர்கள் இல்லை. குறிப்பாக நான்கு நிரந்தர டயாலிசிஸ் டெக்னீஷியன்கள் மட்டுமே அரசு மருத்துவமனைகளில் பணியில் இருக்கிறார்கள். மத்திய அரசு மூன்று டயாலிசிஸ் படுக்கைகளுக்கு ஒரு டெக்னீஷியன் நியமிக்க வேண்டும் என்று வழிகாட்டுதல்களை வழங்கியிருக்கிறது.
அதனடிப்படையில் போதுமான அளவுக்குப் பணியாளர்களை நியமிக்க வேண்டும். பல மருத்துவமனைகளில் உரிய சிகிச்சை கிடைக்காததால், பொதுமக்கள் தனியார் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது" என்றார்.
இது குறித்து சுகாதாரத்துறைச் செயலாளர் செந்தில் குமாரிடம் விளக்கம் கேட்டோம். "பல இடங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்கள். கொரோனா காரணமாகப் புதிய பணியாளர்கள் நியமனம் செய்வதில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது.
அதைச் சரிசெய்வதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், எப்போது பணியமர்த்துவோம் என்று நேரம் சொல்ல முடியாது. டயாலிசிஸ் சிகிச்சை உபகரணங்கள் தேவைப்படும் மருத்துவமனைகளுக்குச் சமீபத்தில்கூட வழங்கினோம். தற்போதைய நிலவரப்படி 1,100 டயாலிசிஸ் சிகிச்சை உபகரணங்கள் செயல்பாட்டில் இருக்கிறது" என்றார்.
from India News https://ift.tt/HLkXE8u
0 Comments