மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே திடீரேன அதிர்ஷ்டம் அடித்தது போன்று கடந்த ஆண்டு முதல்வராகிவிட்டார். கொரோனா காலத்தில் முதல்வராக இருந்த உத்தவ் தாக்கரே உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்ததைப் பயன்படுத்தி, ஒவ்வொரு எம்.எல்.ஏ-வையும் தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசி சிவசேனாவை இரண்டாக உடைத்து பா.ஜ.க-வின் துணையோடு ஏக்நாத் ஷிண்டே முதல்வரானார். தற்போது ஏக்நாத் ஷிண்டே எந்நேரமும் மாற்றப்படுவார் என்ற பேச்சு அடிபடுகிறது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் பா.ஜ.க-வில் இணைவது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார். அவர் கணிசமான எம்.எல்.ஏ-க்களுடன் வந்தால், அவருக்கு முதல்வர் பதவி கொடுப்பது குறித்து பா.ஜ.க-வும் தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது.
மற்றொரு புறம் ஏக்நாத் ஷிண்டே அரசு எந்நேரமும் கவிழும் என்று சிவசேனா (உத்தவ்) எம்.பி சஞ்சய் ராவுத் கூறிக் கொண்டிருக்கிறார். இந்த அரசியல் பிரச்னைகள் குறித்து மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரேயிடம் துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸின் மனைவி அம்ருதா பட்னாவிஸ், மராத்தி நடிகரும் எம்.பி-யுமான அமோல் கோலே ஆகியோர் நேர்காணல் நடத்தினர். இதில் அவர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த ராஜ் தாக்கரே, ``தற்போது இருக்கும் முதல்வர் பதவி ஏக்நாத் ஷிண்டேயிக்கு தற்காலிகமானதுதான். எனவே அவர் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டியது அவசியம்" என்றார்.
உத்தவ் தாக்கரே, ஆதித்ய தாக்கரே குறித்து கேட்டதற்கு, ``அவர்கள் சுயநலமாக இருக்கின்றனர்" என்று தெரிவித்தார். `நீங்கள் சிவசேனா தலைவராக இருந்திருந்தால், எம்.எல்.ஏ-க்கள் கட்சியிலிருந்து விலகவிட்டிருப்பீர்களா?' என்று கேட்டதற்கு, ராஜ் தாக்கரே பதிலளிக்க மறுத்துவிட்டார். அஜித் பவார் குறித்து கேட்டதற்கு, ``அவர் தன்னுடைய சித்தப்பா சரத் பவாரிடம் கவனத்தை செலுத்தவேண்டும்" என்று தெரிவித்தார்.
``2019-ம் ஆண்டு புல்வாமா தாக்குதல் நடந்தபோது மத்திய அரசின் கவனக்குறைவால்தான் நடந்தது என்று நான் சொன்னதை கேட்டு மக்கள் சிரித்தார்கள். ஆனால் இப்போது ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் அதே குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்" என்று மற்றொரு கேள்விக்கு ராஜ் தாக்கரே பதிலளித்தார். இதற்கிடையே சரத் பவார் மும்பையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசுகையில், ``சரியான நேரத்தில் கட்சியில் புதிய தலைமை உருவாக்கப்படும்" என்று தெரிவித்தார்.
from India News https://ift.tt/b9colUw
0 Comments