"இந்தியாவின் மக்கள்தொகை அதிகரிப்புக்கு சிறுபான்மையினரே பொறுப்பு!" - பிரவின் தொகாடியா கருத்து

ஐநா சபை, 2023-க்கான உலக மக்கள்கொகை அறிக்கையை அண்மையில் வெளியிட்டது. அதில் இந்தியாவின் மக்கள்தொகை 142.86 கோடி என்றும், சீனாவின் மக்கள்தொகை 142.57 கோடி என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அறிக்கையின் அடிப்படையில், சீனாவைவிட இந்தியாவின் மக்கள்தொகை சுமார் 29 லட்சம் அதிகம் என்பது தெரியவந்திருக்கிறது.

பிரவின் தொகாடியா

இந்த நிலையில், `உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாகச் சீனாவை பின்னுக்குத் தள்ளி, இந்தியாவுக்கு முதல் இடம் கிடைத்ததற்குச் சிறுபான்மை சமூகம்தான் பொறுப்பு' என விஷ்வ ஹிந்து பரிஷத்தின் (VHP) முன்னாள் செயல் தலைவரும், அந்தராஷ்டிரிய இந்து பரிஷத்தின் (AHP) தலைவருமான பிரவின் தொகாடியா தெரிவித்திருக்கிறார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``இந்தியாவின் மக்கள்தொகை அதிகரிப்புக்குச் சிறுபான்மை சமூகமே பொறுப்பு. நாட்டில் இந்துக்களின் மக்கள்தொகை வளர்ச்சி தற்போது எதிர்மறையாக இருக்கிறது.

இந்தியாவின் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் இந்துக்களின் சதவிகிதம் உண்மையில் குறைந்திருக்கிறது. எனவே, தற்போதைய இந்தியாவின் மிகப்பெரிய மக்கள்தொகை உயர்வுக்கு இந்துக்கள் பங்களிக்கவில்லை. சிறுபான்மை மக்கள்தொகை அதிகரிப்பு அடுத்த 15 முதல் 20 ஆண்டுகளில் அஸ்ஸாமை மோசமாகப் பாதிக்கும். அதனால் கடுமையான மக்கள்தொகை கட்டுப்பாட்டுச் சட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும்.

பிரவின் தொகாடியா

தொடக்கத்திலிருந்தே, எங்கள் அமைப்பு மக்கள்தொகை கட்டுப்பாட்டுச் சட்டத்தைக் கோரி வருகிறது. 1951 வாக்காளர் பட்டியல் மற்றும் டி.என்.ஏ மூலம் வங்காள தேசத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்களையும், ஊடுருவலாளர்களையும் அடையாளம் காண வேண்டும் என நான் அஸ்ஸாம் அரசை வலியுறுத்துகிறேன்" எனத் தெரிவித்திருக்கிறார். 



from India News https://ift.tt/28fpH0d

Post a Comment

0 Comments