DMK: பி.டி.ஆர் ஆடியோ லீக்ஸ்... மௌனம் கலைக்குமா திமுக தலைமை?!

2021-ம் ஆண்டு மே மாதம் ஆட்சிப்பொறுப்பை ஏற்றதிலிருந்து, கடந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு திட்டங்கள், செயல்பாடுகள் மூலம் பல தரப்பினரின் நன்மதிப்பை தி.மு.க அரசு பெற்றிருக்கிறது. கருணாநிதியைவிட சிறப்பாக ஆட்சி செய்கிறார் என்கிற பாராட்டை முதல்வர் ஸ்டாலின் பெற்றிருக்கிறார். ஆனால், சமீபகாலமாக சில சறுக்கல்களையும் தடுமாற்றங்களையும் தி.மு.க அரசு சந்தித்துவருகிறது.

முதல்வர் ஸ்டாலின்

வேலை நேரத்தை 12 மணி நேரமாக அதிகரிக்கும் மசோதா நிறைவேற்றம், திருமண மண்டபம் உள்ளிட்ட இடங்களில் மதுபானங்களுக்கு அனுமதியளிக்கும் அரசாணை போன்ற நடவடிக்கைகளால் தி.மு.க அரசின் செல்வாக்கு சறுக்கலைச் சந்தித்திருக்கிறது. `எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு முடிவுகட்ட வேண்டும்... தி.மு.க ஆட்சி மலர வேண்டும்' என்று சமூக வலைதளங்களிலும் பொதுமேடைகளிலும் யார் யாரெல்லாம் சட்டமன்றத் தேர்தலின்போது, குரல் கொடுத்தார்களோ, அவர்களே கண்டிக்கிற அளவுக்கு தி.மு.க அரசின் சமீபத்திய செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன.

இத்தகைய சூழலில்தான், பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட பி.டி.ஆர் குறித்த ஆடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. முதல்வரின் மகன் உதயநிதியும் மருமகன் சபரீசனும் ஒரே ஆண்டில் 30,000 கோடி ரூபாயை முறைகேடாகச் சேர்த்திருப்பதாக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசியதாக பா.ஜ.க வெளியிட்டிருக்கும் ஆடியோ க்ளிப், தி.மு.க தலைமைக்குப் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

அதற்கடுத்து, மற்றொரு ஆடியோ க்ளிப் ஒன்றையும் அண்ணாமலை வெளியிட்டிருக்கிறார். அந்த ஆடியோவில், “ஒரு நபர் ஒரு பதவி என்ற கொள்கைக்கு நான் அரசியலுக்கு வந்த நாள் முதலே ஆதரவு அளித்துவருகிறேன். பா.ஜ.க-விடம் எனக்குப் பிடித்த விஷயம் இதுதான். கட்சியையும் மக்களையும் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு பிரிந்திருக்க வேண்டுமல்லவா. ஆனால், இங்கு எல்லா முடிவுகளையும் அமைச்சர்களும் எம்.எல்.ஏ-க்களும்தான் எடுக்கிறார்கள். நிதி மேலாண்மை செய்வது சுலபம். இது ஒரு அமைப்பா... அவர்களுக்கு வரும் ஊழல் பணம் அனைத்தையும் அவர்களே எடுத்துக்கொள்கிறார்கள். முதல்வரின் மகனும் மருமகனும்தான் கட்சியே. அவர்களை நிதி மேலாண்மை செய்யச் சொல்லுங்கள்.

அதனால் எட்டு மாதங்கள் பார்த்த பிறகு முடிவுசெய்துவிட்டேன். இது ஒரு நிலையான முறை கிடையாது. எனக்கு இருக்கும் மிகப்பெரிய வசதி என்னவென்றால், இப்போது நான் விலகினால், இந்த குறுகிய காலத்தில் நான் வெளியே சென்றால் அவர்கள் செய்த அனைத்தும் அவர்களுக்கே எதிர்வினையாகத் திருப்பியடிக்கும். எப்படி சொல்வது... நான் இந்த யுத்தத்தை சீக்கிரமாகக் கைவிட்டதாக எனது மனசாட்சி சொல்லாது என்று கருதுகிறேன். நான் அந்தப் பதவியில் இல்லாதபோது அதைப் பற்றி நான் கவலைப்பட வேண்டியதில்லை” என்று அந்தக் குரல் பேசுகிறது. அதை, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் ஆடியோ என்று அண்ணாமலை கூறுகிறார்.

உதயநிதி

இது தன்னுடைய குரல் அல்ல என்று மறுக்கும் பி.டி.ஆர்., நவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் இதுபோன்ற போலி காணொளிகளை எளிதாக உருவாக்க முடியும் என்று அறிக்கை வெளியிட்டுவருகிறார்.

தன் அரசு பற்றியும் தன் குடும்பத்தினர் பற்றியும் தனது ஆட்சியில் நிதியமைச்சராக இருக்கும் ஒருவர் சர்ச்சைக்குரிய விஷயங்களைப் பேசியிருப்பதாக வெளியாகியிருக்கும் ஆடியோ குறித்து முதல்வர் ஸ்டாலின் உடனடியாக மறுப்பு தெரிவித்திருக்க வேண்டும். ஆனால், முதல்வர் ஸ்டாலின் இந்த விவகாரத்தில் மௌனம் காக்கிறார். அதேபோல, குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் அமைச்சர் உதயநிதியும், முதல்வரின் மருகன் சபரீசனும் எந்த எதிர்வினையையும் ஆற்றவில்லை.

ஸ்டாலின்

ஆமாம் என்றாலும் பிரச்னை... இல்லை என்றாலும் பிரச்னை. அதனால்தான், மௌனமாகக் கடந்துவிடலாம் என்று முதல்வர் நினைக்கலாம். ஆனால், இது அவ்வாறு கடந்துபோகிற விவகாரம் அல்ல. ஆகவேதான், இந்த விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு சிக்கல் ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இந்த ஆடியோ க்ளிப் இரண்டு பாகங்களுடன் நின்றுவிடும் என்று தெரியவில்லை. அண்ணாமலை அடுத்து வெளியிடக்கூடிய ஆடியோவில் இன்னும் சீரியஸான விவகாரங்கள் பேசப்பட்டிருக்கக்கூடும் என்கிறார்கள். அப்போதும் தி.மு.க தலைமை மௌனத்தையே கடைப்பிடிக்குமா?

இந்த விவகாரத்தை பா.ஜ.க-வினர் அவ்வளவு எளிதாக விடுவதாக இல்லை. ஏற்கெனவே, இது குறித்து ஆளுநரிடம் முறையிட்டிருக்கிறார்கள். உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர்கள் ஆளுநரிடம் வைத்திருக்கிறார்கள். ஒருவேளை, இது குறித்து ஆளுநர் ஒரு சீரியஸான முடிவை எடுக்கிறார் என்கிற பட்சத்தில், குறைந்தபட்சம் தங்கள் தரப்பு விளக்கத்தை அளிக்க வேண்டிய அழுத்தம் அப்போது தி.மு.க-வுக்கு நிச்சயம் ஏற்படும்.



from India News https://ift.tt/yPaYn4z

Post a Comment

0 Comments