`ஒரு பெண்ணாக இருந்தும் எங்களை ஆதரிக்கவில்லை’- பி.டி. உஷா கருத்துக்கு மல்யுத்த வீராங்கனைகள் வருத்தம்!

உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பிரிஜ் பூஷன் சரண் சிங், மூன்றாவது முறையாக இந்திய மல்யுத்த சம்மேளத்தின் தலைவராக பதவி வகித்து வருகிறார். இவர் உ.பி.யில் இருந்து பாரதிய ஜனதா எம்.பி.யாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ஒரு சிறுமி உள்பட மல்யுத்த வீராங்கனைகள் பலரிடம் இவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக சக வீராங்கனைகள் குற்றம்சாட்டியுள்ளனர். கடந்த ஜனவரி மாதமே இந்தக் குற்றச்சாட்டு பெரிதாக வெடித்தது. இந்த விவகாரம் நாடு முழுவதிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

பிரிஜ் பூஷன் சரண் சிங்

அப்போதே, பாதிக்கப்பட்ட விராங்கனைகளுக்கு ஆதரவாக ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா மற்றும் ஷாக்‌ஷி மாலிக் ஆகியோர் போராட்டம் நடத்தினர். பின்னர் இதில் விளையாட்டுத் துறை அமைச்சகம் தலையிட்டு புகார்கள் குறித்து விசாரணை நடத்த, மேரிகோம் தலைமையில் குழு ஒன்றை அமைத்தது.

இதன் தொடரச்சியாக பிரதமர் உள்துறை அமைச்சர் ஆகியோரை வீரர்கள் நேரில் சந்தித்து புகார் அளித்தனர். அவர்கள் அளித்த உத்தரவாதத்தின் அடிப்படையில் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.

ஆனால் மேரிகோம் தலைமையிலான குழு அமைக்கப்பட்டு மூன்று மாதங்கள் ஆகியும் இன்னும் பிரிஜ் பூஷன் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறி தேசிய மல்யுத்த வீரர்கள் மீண்டும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடந்த 23-ம் தேதி முதல், இரவு பகலாக இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த ஜனவரியில் நடந்த போராட்டத்தில் அரசியல் கட்சியினர் யாரும் கலந்து கொள்ள வேண்டாம் என வீரர்கள் வலியுறுத்தியிருந்தனர். ஆனால் இந்த போராட்டத்தின் போது அரசியல் கட்சியினரின் ஆதரவை நாடியுள்ளனர் வீரர்கள்.

பி.டி.உஷா

இவர்களின் போராட்டத்துக்கு சி.பி.எம் போன்ற அரசியல் கட்சிகளும் அபிநவ் பிந்த்ரா, நீரஜ் சோப்ரா போன்ற வீரர்களும் ஆதரவு அளித்துள்ளனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக வீரர்கள் உச்ச நீதிமன்றத்தையும் நாடியுள்ளனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இந்த விவகாரத்தில் விளக்கம் கேட்டு டெல்லி போலீஸுக்கு நேட்டீஸ் அனுப்பியுள்ளது. இதில் அடுத்தகட்ட விசாரணை இன்று நடைபெறவுள்ளது.

இந்நிலையில், இந்த போராட்டம் தொடர்பாக இந்திய ஒலிம்பிக் சம்மேளன தலைவர் பி.டி உஷா, ``விசாரணைக் குழுவின் அறிக்கை வெளிவரும் வரை வீரர்கள் அமைதி காத்திருக்க வேண்டும். இது, நாட்டுக்கும் விளையாட்டுக்கும் நல்லதல்ல/ இது ஒரு எதிர்மறையான அணுகுமுறை. இந்த போராட்டம் ஒழுக்கமின்மைக்கு சமம் “ என்று விமர்சித்துள்ளார்.

ஏற்கெனவே இது தொடர்பாக, பாதிக்கப்பட்டோர் அவருக்கு கடிதம் எழுதியிருந்தனர். ஆனாலும் பி.டி உஷா தரப்பில் இருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை என்ற விரக்தியில் இருந்த வீரர்களை தற்போது அவரின் விமர்சனம் கடும் கொந்தளிப்படைய செய்துள்ளது.

பி.டி உஷாவின் கருத்துக்கு பதில் அளித்துள்ள மல்யுத்த வீரர்கள், ``பி.டி உஷாவின் கருத்து எங்களுக்கு வேதனை அளிக்கிறது. அவர் ஒரு பெண்ணாக இருந்தும் எங்களை ஆதரிக்கவில்லை. நாங்கள் என்ன ஒழுங்கீனம் செய்தோம்? நாங்கள் அமைதியாக இங்கே அமர்ந்திருக்கிறோம். எங்களுக்கு நீதி கிடைத்திருந்தால் இதை நாங்கள் செய்திருக்க மாட்டோம்” என மல்யுத்த வீராங்களை சாக்‌ஷி மாலிக் கூறியுள்ளார்.

மல்யுத்த வீரர்கள் போராட்டம்

மேலும், ``பிரதமர் மோடி எல்லோருடைய `மன் கி பாத்’ (மனதில் குரல்) தையும் கேட்கிறார். எங்கள் `மன் கி பாத்தை’ அவரால் கேட்க முடியாதா? நாங்கள் பதக்கங்கள் வெல்லும்போது எங்களை அவரது வீட்டுக்கு அழைத்துப் பரிசளிக்கிறார். எங்களை மிகவும் மதிப்பதாகவும் மற்றும் எங்களை அவரது மகள்கள் என்று அழைக்கிறார். இன்று, அவர் எங்களின் 'மன் கி பாத்' கேட்க வேண்டும் என்று நாங்கள் அவரிடம் கேட்டுக்கொள்கிறோம்" என சாக்ஷி மாலிக் குறிப்பிட்டுள்ளார்.

``இந்த விவகாரம் பற்றி பேசுவதற்காக நான் பலமுறை பி.டி உஷாவை தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றேன் ஆனால் அவர் என் எந்த அழைப்புக்கும் பதிலளிக்கவில்லை. அவர் இந்த விவகாரத்தில் ஒருவித அழுத்தத்தில் இருக்கிறாரா, யாரேனும் அவரை வழிநடத்துகிறார்களா என்பது எங்களுக்குத் தெரியவில்லை” என, மல்யுத்த வீரர் வினேஷ் போகட் தெரிவித்துள்ளார்.

ஆனால், பிரிஜ் பூஷன் தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் முற்றிலுமாக மறுத்துள்ளார். தான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்க மிக பெரிய போராட்டம் நடத்தவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

``நம் விளையாட்டு வீரர்கள் நீதி கேட்டு தெருக்களில் இறங்கி போடுவதை பார்ப்பது எனக்கு வலிக்கிறது. நமது மகத்தான தேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தவும், நம்மை பெருமைப்படுத்தவும் அவர்கள் கடுமையாக உழைத்துள்ளனர். வீளையாட்டு வீரராக இருந்தாலும் சக குடிமக்களாக இருந்தாலும் தேசம் மற்றும் ஒவ்வொரு தனி நபரின் ஒருமைப்பாடு மற்றும் கண்ணியத்தை பாதுகாக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. எது நடந்ததோ அது நடந்திருக்கவே கூடாது. இது ஒரு முக்கியமான பிரச்னை, இதை பாரபட்சம் இல்லாமலும் மற்றும் வெளிப்படையான முறையிலும் கையாளப்பட வேண்டும். நீதியை நிலைநாட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என ஒலிம்பிக்கில் தங்கள் வென்ற நீரஜ் சோப்ரா குறிபிட்டுள்ளார்.

மல்யுத்த வீரர்களின் இந்த போராட்டத்துக்கு அனைத்து தரப்பில் இருந்தும் தொடர்ந்து ஆதரவு பெருகி வருகிறது. மறுபக்கம் உச்ச நீதிமன்றத்திலும் இந்த விவகாரம் தொடர்பான மனு மீது விசாரணை நடைபெற்று வருகிறது.



from India News https://ift.tt/Clg8meV

Post a Comment

0 Comments