எடப்பாடி டெல்லி விசிட்: `அதிமுக-விடம் பதிலை மட்டும் எதிர்பார்க்கும் பாஜக?!’ - அமித் ஷா மெசேஜ்

கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் பாஜக-வுக்கும், அதிமுக-வுக்கும் இடையிலான பரஸ்பர தாக்குதல்கள் அதிகமாகின. இதன் உச்சகட்டமாக, “முதிர்ந்த அரசியல்வாதி பற்றி கேட்டால் கருத்து சொல்லலாம். தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வதற்காகவே அண்ணாமலை பேசி வருகிறார். அவரை பற்றி என்னிடம் எந்த ஒரு கேள்வியையும் கேட்க வேண்டாம். நாங்க தேசிய தலைமையோடு கூட்டணி வைத்திருக்கிறோம். பாஜக-வின் பாஸ் அமித் ஷா, மோடி, நட்டாதான். கீழ இருப்பர்வகள் பற்றி என்னிடம் பேசாதீர்கள்” என்று, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு சமீபத்தில் காட்டமாக பதில் அளித்திருந்தார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

எடப்பாடி பழனிசாமி

இந்தநிலையில் பொதுச்செயலாளராக தேர்வான எடப்பாடியின் வெற்றியை தேர்தல் ஆணையம் வரை உறுதிப்படுத்திய நிலையில், அமித் ஷா-வை சந்திக்க நேரம் கேட்டிருந்தார் எடப்பாடி. அதன் அடிப்படையில் நேற்று முந்தினம் (ஏப்-26) இரவு, கர்நாடக தேர்தலில் பிசியாக இருக்கும் அமித் ஷா, எடப்பாடிக்கு நேரம் கொடுத்தார். இந்த சந்திப்பின் போது பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் உடனிருந்தனர். அதிமுக தரப்பில் கே.பி.முனுசாமி, தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம், ஜெயக்குமார் ஆகியோர் இருந்தனர்.

எடப்பாடி சந்திப்பின் போது அண்ணாமலையும் இருக்க வேண்டும் என்பதற்காக கர்நாடக தேர்தல் பணியிலிருந்த அவரை டெல்லி வர சொல்லி இருக்கிறார் அமித் ஷா. `நாங்கள் அண்ணாமலையோடு பேச மாட்டோம். அமித் ஷாவோடுதான் பேசுவோம்’ என்று சொல்லி வந்த எடப்பாடி பழனிசாமியை சந்திக்கும் போது அமித் ஷா தன் பக்கத்தில் அண்ணாமலையை வைத்து கொண்டது முக்கியமானதாக அரசியல் அரங்கில் பார்க்கப்படுகிறது.

எடப்படி பழனிசாமி, அமித் ஷா

மக்களவைத் தேர்தலுக்கு சரியாக, இன்னும் ஒரு வருடம் இருக்கும் நிலையில், அண்ணாமலை தனது மேலிடத்தில் சில விஷயங்கள் சொல்லி அதற்கு அனுமதி வாங்கி செயல்பட்டு வருகிறார் என்று பேசப்படுகிறது. குறிப்பாக தமிழகத்தில் பாஜக தலைமையில் போட்டியிடுவது. அதன்படி, `பாஜக தலைமையில் தமிழ்நாட்டில் ஒரு கூட்டணி அமைப்பதுதான் அண்ணாமலையின் யோசனை. அதற்கான வேலைகளையும் ஒரு பக்கம் அண்ணாமலை தொடங்கிவிட்டார்’ என்கிற செய்தி எடப்பாடிக்கு தெரிந்திருந்தாலும் அதை பெரிதாக பொருட்படுத்திக் கொள்ளவில்லை. ஆனால், இந்த சந்திப்பின் போது கூட்டணியோடு மேலும் சில விஷயங்கள் குறித்து பேசுவதற்குதான் டெல்லி சென்றிருக்கிறார் எடப்பாடி.

இது தொடர்பாக அவருக்கு நெருக்கமானவர்கள் நம்மிடம் பேசும் போது, “சமீபத்தில் திருச்சியில் நடந்த ஓபிஎஸ் மாநாட்டுக்கு திமுக, பாஜக சில விஷயங்கள் செய்து கொடுத்திருக்கிறார்கள். இன்னமும் ஓபிஎஸ்-க்கு பாஜக சில உதவிகள் தொடர்வதை எடப்பாடி விரும்பவில்லை. இன்னொரு முக்கியமான விஷயம் தேர்தல் ஆணையம் சமீபத்தில் எடப்பாடியை அதிமுக பொதுச் செயலாளர் என்று தனது ஆவணங்களில் பதிவு செய்வதாக அவருக்கு கடிதம் எழுதியது. அதேநேரம் இது எதிர்வரும் காலங்களில் நீதிமன்ற உத்தரவுகளுக்கும், அறிவுறுத்தல்களுக்கும் இறுதி முடிவு உட்பட்டது என்றும் தெரிவித்திருந்தது. இதற்கு சரியான ஒரு தீர்வு கிடைக்க வேண்டும். ஆக இந்த இரு கோரிக்கைகள் பிரதானமாக அமித் ஷாவிடம் வைப்பதற்காக அவரை சந்திக்க நேரம் கேட்டிருந்தார் எடப்பாடி” என்கிறார்கள்.

“இனி நாங்கள் பெறும் இடத்தில் இல்லை. கொடுக்கும் இடத்தில் இருக்கிறோம்” என்கிறார்கள் டெல்லிக்கு நெருக்கமான பாஜக பிரமுகர்கள். மேலும் இந்த சந்திப்பில் நடந்த விஷயங்கள் பற்றி நம்மிடம் பகிர்ந்த போது, “அதிமுக தரப்பில் சில விஷயங்கள் பகிர்ந்தார்கள். அதை அனைத்தையும் அமைதியாக கேட்டு கொண்டார் அமித் ஷா. பாஜக தரப்பிலிருந்து எந்த ஒரு உத்தரவாதமும் அதற்கெல்லாம் அளிக்கவில்லை. இறுதியாக, ‘குறிப்பிட்ட சில தொகுதிகளில் பாஜக நிற்கும். அதற்கு உங்கள் பதிலை சீக்கிரம் எதிர்பார்க்கிறோம்’ என்று சொல்லி அனுப்பி இருக்கிறார் அமித் ஷா. பொதுவாக அதிமுக இடங்கள் முடிவு செய்து பாஜக-வுக்கு கொடுக்கும். இந்த முறை பாஜக முடிவு செய்து அதற்கான பதிலை மட்டும் அதிமுக-விடம் கேட்கப்பட்டிருக்கிறது” என்கிறார்கள்.



from India News https://ift.tt/bAM8G9u

Post a Comment

0 Comments