விவாகரத்து கோரி பல வழக்குகள் உச்ச நீதிமன்றத்திற்கு வருவதை நாம் அறிந்திருப்போம். 25 ஆண்டுகளாகப் பிரிந்தே இருந்த தம்பதியினர், சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்திருக்கின்றனர். இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, அனைவரையும் சிந்திக்க வைத்துள்ளது.
கடந்த 1994-ல் டெல்லியில் ஒரு தம்பதியினர் திருமணம் செய்து கொண்டனர். அந்த வருடமே கருவுற்ற அப்பெண், கருவைக் கலைத்ததாகவும், தன் கணவர் வீடு சிறியதாக இருப்பதை அப்பெண் விரும்பவில்லை எனவும், கணவர் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு வருடங்கள் திருமண உறவில் இவர்கள் இருந்த நிலையில், அப்பெண் தன்னுடைய கணவர் மீது வரதட்சணை புகார் மற்றும் கொடுமைப்படுத்தியதாக வழக்கு பதிவு செய்தார். அதனைத் தொடர்ந்து அப்பெண்ணின் கணவரும், சகோதரரும் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர். அதன்பின் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.
இவர்களின் நீண்ட பிரிவை மையப்படுத்தி விவாகரத்து மனுவிற்கு., விசாரணை நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. ஆனால் டெல்லி உயர் நீதிமன்றம் விவகாரத்துக்கான மனுவை நிராகரித்தது. எனவே அந்த நபர் உச்ச நீதிமன்றத்தை நாடி இருக்கிறார்.
உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சுதன்ஷு துலியா மற்றும் ஜேபி பார்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன், இம்மனு விசாரணைக்கு வந்தது.
நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், ``இந்த தம்பதியினர் நான்கு வருடங்கள் மட்டுமே ஒன்றாக வாழ்ந்துள்ளனர். 25 வருடங்கள் தனித்தனியாகப் பிரிந்தே இருந்துள்ளனர். அவர்களுக்குக் குழந்தை இல்லை. அவர்களின் திருமண பந்தம் சரிசெய்ய முடியாத அளவுக்கு முற்றிலும் உடைந்துவிட்டது. அவர்களுக்குக் குழந்தை இல்லாததால் திருமணம் முடிவடைவது, அவர்களை மட்டுமே பாதிக்கும்.
இந்த உறவு முடிவுக்கு வர வேண்டும் என்பதில் எங்களுக்கு எந்தச் சந்தேகமும் இல்லை.
நீடித்த பிரிவு, ஒன்றாக வாழாமல் இருப்பது, அர்த்தமுள்ள உறவுகளை முழுமையாக துண்டித்துக்கொள்வது மற்றும் இருவருக்கும் இடையே இருக்கும் கசப்பு ஆகியன, இந்து திருமணச் சட்டத்தின் கீழ் வன்முறைகளாகவே கருதப்பட வேண்டும்.
ஆண் மாதத்திற்கு 1 லட்சத்திற்கும் மேல் சம்பாதிப்பதால், பெண்ணுக்கு 30 லட்சத்தை நான்கு வாரங்களுக்குள் செலுத்த வேண்டும்.
25 ஆண்டுகளாக தனித்தனியாகத் தங்கியிருக்கும் தம்பதியரைத் திருமண பந்தத்தில் இருப்பதாக அங்கீகரிப்பது கொடுமையான செயல். எனவே அவர்களது திருமண உறவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்கிறது’’ எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
from India News https://ift.tt/GM9UNWl
0 Comments