கடந்த ஏப்ரல் 12-ம் தேதி நடைபெற்ற தமிழ்நாடு அரசு பட்ஜெட் கூட்டத்தொடரில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ``தமிழ்நாட்டில் மொத்தம் 5,329 மதுக்கடைகள் செயல்பட்டுவருகின்றன. அவற்றில் தகுதியான 500 மதுக்கடைகள் கண்டறியப்பட்டு மூடப்படும்" என்று அறிவித்தார். `மதுவிலக்கு' என்ற ஒன்றையே தேர்தல் வாக்குறுதியாகக்கூடக் கொடுக்காத தி.மு.க., குறைந்தபட்சம் இதையாவது செய்கிறதே என பொதுமக்கள் தங்களைத்தாங்களே சமாதானப்படுத்திக் கொண்டனர்.
இந்தநிலையில், `திருமண மண்டபம், விளையாட்டு மைதானங்களில் அரசின் அனுமதி பெற்று மது விருந்து பரிமாறலாம்' எனத் தமிழ்நாடு அரசு வெளியிட்டிருந்த அரசாணை பொதுமக்கள் மற்றும் மதுவிலக்கு கோரும் அரசியல் கட்சிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பல்வேறு அரசியல்கட்சிகள், பொதுமக்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து தற்போது அவசர அவசரமாக சட்டத்தில் திருத்தமும் மேற்கொண்டிருக்கிறது.
தமிழ்நாடு அரசின் அரசாணையும் எதிர்க்கட்சிகளின் கொந்தளிப்பும்:
நேற்று (24/04/2023) காலை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் கூடுதல் தலைமை செயலாளர் K பனீந்திர ரெட்டி வெளியிட்டிருக்கும் அரசிதழில், ``தமிழ்நாடு அரசின் சிறப்பு அனுமதி பெற்று திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானம், அரங்க கூட்டங்கள், கேளிக்கை நிகழ்ச்சிகளில் ஆண்டுக் கட்டணம் அல்லது நிகழ்ச்சிக்கான கட்டணம் செலுத்தி மது விருந்து நடத்திக் கொள்ளலாம்" என்ற அறிவிப்பு இடம்பெற்றிருக்கிறது. மேலும், அதற்கான கட்டண விவரங்களும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பு வெளியான சில மணிநேரங்களிலேயே கடுமையான எதிர்வினைகளை பொதுமக்கள் சமூக வலைதளங்களிலும், எதிர்க்கட்சியினர், சமூக செயற்பாட்டாளர்கள் ஊடங்களிலும் வெளிப்படுத்திவந்தனர்.
குறிப்பாக அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ``மதுவிலக்கே ஒற்றை இலக்கு என கூறிவிட்டு 12 மணிநேரம் மதுக்கடைகளை திறந்து வைத்திருக்கும் இந்த தி.மு.க அரசு, இன்று கல்யாண மண்டபத்திலும், விளையாட்டுத் திடல்களிலும், மதுபானம் அருந்தலாம் என அனுமதித்திருப்பதற்கு எனது கடும் கண்டனங்கள். மதுவுக்கு அடிமையாக்கி இளைஞர்களின் எதிர்காலத்தை சீர்குலைத்து, கலாசாரத்தின் மீது திராவகத்தை வீசியுள்ளது இந்த திராவக மாடல் அரசு.
பொது அமைதியை சீர்குலைத்து குற்றச் செயல்களை அதிகரிக்கும் இத்தகைய மக்கள் விரோத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் இந்த அரசுக்கு மக்கள் விரைவில் தக்க பாடம் புகட்டுவர் என்பது மட்டும் உறுதி!" என கருத்து தெரிவித்தார்.
தமிழ்நாடு பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, ``மது ஆலைகளை மூடுவோம், மதுக்கடைகளின் எண்ணிக்கையைக் குறைப்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்த தி.மு.க வருடா வருடம் உச்ச வரம்பு நிர்ணயித்து மது விற்பனையைப் பெருக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. சட்டம் ஒழுங்கு ஏற்கனவே பொதுமக்களுக்குச் சவாலாக மாறிவிட்ட நிலையில், தி.மு.கவினர் நடத்தும் மது ஆலைகளின் வருமானத்தைப் பெருக்குவதற்காக சமுதாயச் சீர்கேடுக்கு வழிவகுக்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்து தி.மு.க ஈடுபட்டு வருவதை வன்மையாகக் கண்டிக்கிறோம். உடனடியாக இந்த அரசாணையைத் திரும்பப் பெறவேண்டும்!" என கண்டனம் தெரிவித்தார்.
அதேபோல பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், ``தமிழக அரசு கொண்டுவந்திருக்கும் மதுபானச் சட்டத் திருத்தம் எங்கு சென்று முடியும் என்று தெரியவில்லை. ஒரு பக்கம் மதுக்கடைகளைப் படிப்படியாகக் குறைப்பதாகக் கூறிவிட்டு, திருமண மண்டபங்களில், வீடுகளில், விளையாட்டு மைதானங்களில் மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்று மது அருந்திக்கொள்ளலாம் என அனுமதி வழங்கியிருக்கிறது. மது குடிப்பதை அரசே ஊக்குவிப்பதுபோல் இருக்கிறது. இதற்கு டோர் டெலிவரி செய்யலாம். இது ஏமாற்று விஷயம். ஒரு சமூகச் சீரழிவை ஏற்படுத்தும். மக்களைச் சீரழிவை நோக்கி இழுத்துச் செல்லும் முயற்சியை அரசு செய்துவருகிறது. இந்த விதிவிலக்கு, சட்டத் திருத்தம் என்பதை உடனடியாக அரசு திரும்பப்பெற வேண்டும். எந்தக் காரணம் கொண்டும் இதை அனுமதிக்க மாட்டோம்!" என வெடித்தெழுந்தார்.
அதேபோல நா.த.க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ``தகுதி வாய்ந்த பெண்களுக்கு 1000 ரூபாய் வழங்குவதற்கு 7000 கோடிகளை ஒதுக்குவதாக அறிவித்துள்ள தி.மு.க அரசு, அதனை ஈடுகட்ட டாஸ்மாக் வருமானத்தை 45000 கோடிகளிலிருந்து 50000 கோடிகளாக அதிகரித்து கோடிக்கணக்கான பெண்களின் குடும்பத்தைக் காவு வாங்கத் திட்டமிட்டுள்ளது. அதற்காக மதுக்கடைகள் திறப்பு நேரம் அதிகரிப்பு, பார்கள் 24 மணி நேரமும் இயங்க அனுமதி, பெண்களுக்குத் தனி பார் வசதி என அனைத்துச் சீரழிவு முயற்சிகளையும் வேகவேகமாக முன்னெடுத்து வருகிறது.
தீயப் பழக்கமாக இருந்த மதுவை, திராவிடப் பண்பாடாகவே தி.மு.க அரசு மாற்றி நிறுத்தியுள்ளது வெட்கக்கேடானது. இதுதான் உலகம் வியக்கும் தி.மு.கவின் திராவிட மாடல் ஆட்சியா? மதுவிற்பனை மூலம் வரும் வருமானம் தொழுநோயாளி கையில் வழியும் வெண்ணெய்க்குச் சமம் என்று சொன்ன அறிஞர் அண்ணாவின் வழிவந்தவர்கள் அந்த வெண்ணெயை விற்றுதான் ஆட்சி நடத்தமுடியும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டதுதான் வரலாற்றுப்பெருந்துயரம். கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்களை ஒழிக்க திமுக அரசு தீவிர நடவடிக்கை எடுக்கும் என்று அறிவித்தபோது, மது போதைப்பொருள் அல்லாமல் புனித தீர்த்தமா?" எனக் காட்டமாகக் கேள்வி எழுப்பினார்.
அதேபோல தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத் தலைவர் பொன்னுசாமி, ``சாதிப் பிரச்னைகளில்லா சமத்துவம் மிக்க மாநிலமாக, சட்டம் ஒழுங்கில் தலைசிறந்த மாநிலமாக, அமைதிப்பூங்காவாக தமிழகம் திகழ்வதாக அடிக்கடி கூறி வரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மதுவிலக்கு உள்ள மாநிலமாக, மது விற்பனை தடை செய்யப்பட்ட மாநிலமாக, இளம் விதவைகளே இல்லாத மாநிலமாக, மது குடித்து விட்டு வாகனங்கள் இயக்குவதால் ஏற்படும் சாலை விபத்துகளால் துர் மரணங்களே இல்லாத மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என நெஞ்சம் நிமிர்த்தி கூறக் கூடிய நிலையை உருவாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்!" என கேட்டுக்கொண்டார்.
பணிந்த அரசு; திருத்தப்பட்ட அரசாணை!
பெரும் எதிர்ப்பு கிளம்பிய உடனேயே மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ``மற்ற மாநிலங்களில் இருப்பதுபோல ஐ.பி.எல் உள்ளிட்ட சர்வதேச விளையாட்டுகள் நடைபெறும் மைதானம், சர்வதேச அளவிலான கூட்டம் நடைபெறும் இடங்களுக்கு மட்டுமே மது அருந்த அனுமதிக்கப்பட்டிருக்கிறது. சர்வதேச விளையாட்டுகள் தமிழ்நாட்டில் நடக்க வேண்டுமானால் இந்த அனுமதி அளிக்கப்பட வேண்டும். அதேபோல, திருமண மண்டபங்களில் திருமணம், மற்ற நிகழ்ச்சிகளில் மதுபானம் பயன்படுத்த அரசு எப்போதும் அனுமதிக்காது. எந்த இடங்களிலும் அது போன்ற அனுமதி வழங்கப்படாது" எனத் தெரிவித்தார்.
இந்தநிலையில், சர்ச்சைக்குள்ளான தமிழக அரசின் மது விநியோக சட்ட திருத்தத்தில், வணிக பகுதிகள் இல்லாத இடங்களில் மது பரிமாறுவதற்கான சிறப்பு உரிமம் வழங்குவதற்கான அறிவிக்கை நீக்கப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டிருக்கிறது.
அதில், ``வணிக வளாகங்கள் உட்பட மாநாடு நடைபெறும் இடங்கள், கூட்ட அரங்குகள், திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்கள் போன்றவற்றில் மதுபானம் வைத்திருப்பதற்கும் பரிமாறுவதற்கும் சிறப்பு உரிமம் கர்நாடகா, மகாராஷ்டிரா, பஞ்சாப், டெல்லி போன்ற மாநிலங்களில் நடைமுறையில் உள்ளவாறு, தமிழ்நாட்டிலும் வழங்கிட 18-3-2023 அன்று அரசிதழில் பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கையில் திருமணக்கூடங்களும், இதர இடங்களும் இடம்பெற்றிருந்தன.
இதுகுறித்து பெறப்பட்ட கருத்துக்களை கவனமுடன் பரிசீலித்த தமிழ்நாடு அரசு , தற்போது அவற்றைநீக்கி, வணிக வளாகங்களில் உள்ள மாநாடு மையங்கள், கூட்ட அரங்குகள் ஆகியவற்றில் நடைபெறும் தேசிய நிகழ்வுகள், பன்னாட்டு நிகழ்ச்சிகள், உச்சி மாநாடுகள் மற்றும் சர்வதேச மற்றும் தேசிய விளையாட்டு நிகழ்வுகள் நடைபெறும் விளையாட்டு மைதாங்கள் / விளையாட்டு அரங்குகளில் அந்த நிகழ்வுகள் நடைபெறும்போது மட்டும் மதுபானம் வைத்திருத்தல் மற்றும் பரிமாறுவதற்கான தற்காலிக உரிமம் வழங்கப்படும் என்று திருத்தப்பட்ட அறிக்கையினை இன்று வெளியிட்டுள்ளது.
அதேபோன்று இதுகுறித்து மேற்குறிப்பிட்ட அரசிதழில் வெளியிடப்பட்டிருந்த வணிகப் பகுதிகள் அல்லாத இடங்களில் நடைபெறும் கொண்டாட்டங்கள், விழாக்கள், விருந்துகள், போன்றவற்றில் மதுபானம் வைத்திருப்பது பரிமாறுதற்கான சிறப்பு உரிமம் வழங்குவதற்காக முறையையும், இந்த திருத்தப்பட்ட அறிவிக்கையில் நீக்கம் செய்து தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படுகிறது" எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
from India News https://ift.tt/1dVbayF
0 Comments