இன்று மீண்டும் ஆளுநரை சந்திக்கும் பாஜக-வினர்... பின்னணி என்ன?!

அமைச்சர் உதயநிதி, முதல்வரின் மருமகன் சபரீசன் ஆகியோர் குறித்து அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசியதாக ஆடியோ  ஒன்று வெளியானது. அதைத் தொடர்ந்து, அந்த ஆடியோ விவகாரம் அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. தொடர்ந்து, அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இந்த ஆடியோ `போலி' என மறுப்பு தெரிவித்து, விளக்கமளித்திருந்தார்.

ஆளுநரை சந்தித்த பா.ஜ.க நிர்வாகிகள்

இந்த நிலையில், பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பி.டி.ஆர்  ஆடியோ விவகாரம் தொடர்பாக நியாயமான முறையில் தணிக்கை செய்யப்பட வேண்டும் என ஆளுநர் ரவியை பா.ஜ.க மூத்த தலைவர்கள் வி.பி துரைசாமி, கரு.நாகராஜன் உள்ளிட்டோர் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர்கள், "அரசின் கஜானாவுக்குச் செல்ல வேண்டிய தமிழக மக்களின் வரிப்பணத்தைக் கொண்டு, நன்மை செய்ய வேண்டிய இடத்தில் இருப்பவர்கள், 30 ஆயிரம் கோடியை எடுத்துவிட்டார்கள் என்பதுதான் எங்கள் குற்றச்சாட்டு.

இது தொடர்பாக அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசிய ஆடியோ விவகாரத்தின் மீது நடவடிக்கை எடுத்து, தடயவியல் விசாரணை செய்து உண்மையைக் கண்டறிய வேண்டும். ஆடியோவில் இருப்பது அவர் குரல் தானா அல்லது வேறு ஒருவரின் குரலா என்பதைக் கண்டறியும்படி ஆளுநரிடம் கோரிக்கை விடுத்திருக்கிறோம். அரசின் தலைவர் ஆளுநர்தான். அதனால், அவரிடம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியிருக்கிறோம். ஆளுநரும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்திருக்கிறார்.

பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

பி.டி.ஆரும் சபரீசனும் உறவினர்கள்தான். இதனால், ஸ்டாலினையும் பி.டி.ஆரையும் பிரிக்க வேண்டிய அவசியமே எங்களுக்கு இல்லை. மக்கள் வரிப்பணம் தனி மனிதனிடம் சென்றுவிட்டதே என்பதால் நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுத்திருக்கிறோம்" எனத் தெரிவித்தனர்.

இந்த நிலையில், இன்று மாலை 4 மணியளவில் பா.ஜ.க பட்டியலினத் தலைவர் தடா பெரியசாமி தலைமையில் ஆளுநரை மீண்டும் பாஜக-வினர்சந்திக்கின்றனர்.

இந்த சந்திப்பின் போது சமீபத்திய சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்ட சில விவகாரங்கள் குறித்து முறையிடப்போவதாக பா.ஜ.க தரப்பு வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன. அதில் குறிப்பாகக் கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய ஆதிதிராவிடர்களுக்கும், பட்டியலின மக்களுக்கான உரிமைகள், சலுகைகளை வழங்கும் வகையில், அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்ட தனி தீர்மானத்தை ரத்து செய்யக் கோரிக்கை முன்வைக்கவிருப்பதாகத் தெரிவித்திருக்கின்றனர்.

தடா பெரியசாமி

மேலும், பட்டியலின மக்கள் நலத் திட்டங்களுக்காக மத்திய அரசு 2022-2023-க்கு,  ரூ.16,442 கோடி நிதி ஒதுக்கி வழங்கியதில் ரூ.10,420 கோடி செலவு செய்யப்படவில்லை. இதற்கான காரணம் குறித்து தி.மு.க அரசிடம் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்படவிருப்பதாகக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, பஞ்சமி நில விவகாரம் குறித்த அரசாணைக்குப்  பதில்,  சிறப்புச்  சட்டம் கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆளுநரைச் சந்திக்க பா.ஜ.க  முடிவெடுத்திருப்பதாகக் கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



from India News https://ift.tt/QYWZGnN

Post a Comment

0 Comments