திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் ஓபிஎஸ் அணி சார்பில் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழா, ஜெயலலிதா பிறந்தநாள் விழா, அதிமுக 51-வது ஆண்டு விழா என முப்பெரும் விழா மாநாடு நேற்று நடைபெற்றது.
இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகளை முன்னின்று செய்த முன்னாள் அ.தி.மு.க., அமைச்சர் வைத்திலிங்கம் மாநாட்டில் பேசுகையில், “ஆயிரம் எடப்பாடி வந்தாலும் ஒரு ஓபிஎஸ்க்கு சமமில்லை. இந்தக் கட்சி தொண்டர்களால் உருவாக்கப்பட்டது. தொண்டர்களை மதிக்காதவன் அழிந்து போவான். நிச்சயமாக இதற்கு தர்மம் பதில் சொல்லும்.
மலை குலைந்தாலும் நிலை குலையாமல் மாண்போடு இருக்கின்ற அண்ணன் ஓபிஎஸ் அவர்கள், நாலு பக்கமும் இருந்து அம்புகள் வந்தாலும் தன்னுடைய புன்னகையால் அதை சிதறடிக்கக் கூடிய ஆற்றலும், அறிவும் பெற்றவர். பொறுமைக்கு எடுத்துக்காட்டானவர். 3 முறை தனக்கு கொடுத்த முதலமைச்சர் பதவியை திருப்பிக் கொடுத்தவர் அண்ணன் ஓபிஎஸ் அவர்கள். ஆனால், எடப்பாடி பழனிசாமியோ காலில் விழுந்து முதலமைச்சரானவர்.
சரஸ்வதி சபதம் படத்தில் கே.ஆர்.விஜயா யாசகம் பெறும் பெண்ணாக நடிப்பார். யானை மாலையிட்டு அவர் ராணியாவார். ராணி ஆனவுடன் திமிர் அதிகமாக இருக்கும். அதை அடக்குவார்கள். அதேபோல எடப்பாடி திமிரை தொண்டர்களாகிய நீங்கள் தான் அடக்க வேண்டும். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கும், புரட்சித் தலைவி அம்மாவுக்கும் யார் ஒருவர் துரோகம் செய்தாலும், கழகத்தின் ஒன்றரைக் கோடி தொண்டர்கள் நிச்சயமாக அவர்களை மன்னிக்க மாட்டார்கள்.
புரட்சித் தலைவர் வகுத்த விதியை, அம்மா கட்டிக்காத்த விதியை தூக்கிப்போட்டு காலில் மிதித்துள்ளனர். அம்மா தான் நிரந்தர பொதுச் செயலாளர் என்பதை ரத்து செய்த எடப்பாடி பழனிசாமிக்கு நாம் தண்டனை கொடுத்தாக வேண்டும். இன்றைக்கு எடப்பாடி பழனிசாமி முன்னுக்குப் பின் முரணாக பேசிக் கொண்டிருக்கிறார். கொடநாடு கொள்ளை நடந்த நாள் 2017 ஏப்ரல் 24-ம் தேதியான இன்று தான். அந்த நாளில் தான் இந்த மாநாடு நடக்கிறது. அந்தக் குற்றவாளி யாராக இருந்தாலும், அவன் எவ்வளவு பெரியக் கொம்பனாக இருந்தாலும் இறைவன் தண்டிப்பான். ஓபிஎஸ் தான் கட்சிக்கு ஒருங்கிணைப்பாளர். தொண்டர்களாகிய நீங்கள் அவருக்கு முழு ஒத்துழைப்பைத் தர வேண்டும்” என்றார்.
from India News https://ift.tt/PTqKmle
0 Comments