கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அகரகோட்டாலம் பகுதியில், 'மக்களை நேரில் சந்தித்து மனுக்கள் பெறும் நிகழ்ச்சி' 23-ம் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக சங்கராபுரம் தி.மு.க எம்.எல்.ஏ உதயசூரியன் கலந்துக் கொண்டார். உடன், மாவட்ட வருவாய் அலுவலர் சத்திய நாராயணன் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களும் பெறப்பட்டது.
அப்போது பேருந்து சேவை குறித்து பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதற்கு பதிலளித்து பேசிய எம்.எல்.ஏ உதயசூரியன், போக்குவரத்து துறை சார்பாக கோப்புகள் தயார் செய்யப்பட்டு, விரைவில் உரிய ஏற்பாடுகள் செய்யப்படும் என தெரிவித்தார். உடனே, போக்குவரத்துத்துறை டி.எம் வந்திருக்கிறாரா... எங்கே இருக்கிறார்? என கேட்டார். அப்போது, மேடை பக்கமிருந்த போக்குவரத்துத்துறையின் கள்ளக்குறிச்சி பணிமனை அதிகாரி, 'சார் இங்கே' என்று கூற, "நீ தான் டி.எம்-மா... கண்டெக்டர், டிரைவர் எங்கே?" என கேட்டார் எம்.எல்.ஏ உதயசூரியன்.
அதற்கு அந்த அதிகாரி, 'டி.ம் மெட்ராஸ் போயிருக்காரு சார்' என்றார். அதே சமயம், இந்த நிகழ்ச்சி சங்கராபுரம் பகுதியில் நடப்பதால், அப்பகுதியின் பணிமனையை சேர்ந்த போக்குவரத்துத்துறை அதிகாரி ஒருவர், "இதோ இருக்கிறேன் சார்" என்று மேடையின் எதிரில் இருந்து பதிலளித்தார். யார் எப்பகுதி அதிகாரி என்றும் அறியாமல், கோபப்பட்ட எம்.எல்.ஏ., மேடை பக்கவாட்டு திசையில் இருந்து பதிலளித்த போக்குவரத்துத்துறை அதிகாரியை பார்த்து... "தோ இருக்காருயா `...’" என்று திட்டினார். எம்.எல்.ஏ-வின் இந்த செயலைக் கண்டு மேடையில் அமர்ந்திருந்த மற்ற அதிகாரிகளும், அப்பகுதி பொதுமக்களும் முகம் சுளித்தனர்.
மக்கள் பிரதிநிதியாக இருக்கும் உதயசூரியன், அரசு விழாவில் போக்குவரத்து துறை அதிகாரியை அநாகரிகமாக திட்டிய சம்பவம் அப்பகுதியில் சற்று சலசலப்பை ஏற்படுத்தியது.
மீண்டும், தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் தூக்கத்தை கெடுக்க துவங்கிவிட்டனரா கழக உடன்பிறப்புகள்?!
from India News https://ift.tt/Vm3kxq7
0 Comments