தமிழகத்தில் 65 வகையான முத்திரைத்தாள் ஆவணங்கள் இருக்கின்றன. இதில் 20-க்கும் மேற்பட்ட சட்டபூர்வ ஆவணங்களுக்கான முத்திரைத் தீர்வைக் கட்டணத்தை உயர்த்தும் சட்டமுன்வடிவு சட்டசபையில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இது, சாதாரண மக்களை பாதிக்கும் வகையில் சட்டம் கொண்டுவந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
இது குறித்து சட்டமன்றத்தில் பேசிய வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, ``இந்திய முத்திரைச் சட்டம் 1899-ன்படி பொதுமக்கள் வணிக நிறுவனங்கள், வங்கிகள் பயன்படுத்தும் ஆவணங்களுக்குச் செலுத்தப்பட வேண்டிய முத்திரைத் தீர்வை நிர்ணயம் செய்யப்படுகிறது. சில ஆவணங்களுக்கு 1992-ம் ஆண்டும், சில ஆவணங்களுக்கு 2001-ம் ஆண்டும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளாக முத்திரைத் தீர்வை மாற்றியமைக்கப்படவில்லை. 65 வகையான ஆவணங்களில் வங்கி, நிறுவனங்கள் பயன்படுத்தும் 15 ஆவணங்களுக்கு மட்டுமே முத்திரைத் தீர்வை மாற்றியமைக்கப்படுகிறது.
சாதாரண மக்கள் பயன்படுத்தும் ஆவணங்களில் எந்த மாற்றமும் இல்லை. கடந்த அ.தி.மு.க ஆட்சியில் தமிழ்நாடு முத்திரைச் சட்டம் 2013 மற்றும் 2019 என இருமுறை இயற்றப்பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுத் திரும்பப் பெறப்பட்டன. அ.தி.மு.க கொண்டுவந்த சட்டத்தோடு ஒப்பிகையில் ஐந்து வகையான ஆவணங்களுக்குக் குறைவான முத்திரை விகிதமும், நான்கு வகையான ஆவணங்களுக்கு அதே விகிதமும், ஆறு வகையான ஆவணங்களுக்குச் சிறிது அதிக விகிதமும் முன்மொழியப்பட்டிருக்கிறது. இந்த உயர்வு அ.தி.மு.க ஆட்சியில் முன்மொழியப்பட்டதுதான். எனவே, தி.மு.க ஆட்சிதான் கொண்டுவந்திருக்கிறது எனச் சொல்வது தவறான கருத்து” என்றார்.
`எதற்கெல்லாம் விலை மாற்றம்?’
சொத்துப் பரிமாற்றம் செய்தல், ஒப்பந்தத்தை ரத்துசெய்தல், நிறுவனங்கள் பதிவுச் சட்டத்தின்கீழான ஒப்பந்தங்கள் ஆகியவற்றுக்கான முத்திரைத்தாள் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டிருக்கின்றன. இறந்த குடும்ப உறுப்பினருக்கான சட்டபூர்வ வாரிசுகளுக்கான சொத்துக்குரிய முத்திரைத்தாள் ரூ.100 லிருந்து 1,000 ரூபாயாகவும், உறுதிமொழிக்கான முத்திரைத்தாள் கட்டணம் ரூ.20-லிருந்து ரூ.200 ஆகவும், ஆவணங்களின் நகல் பிரதியைப் பெறுவதற்கான முத்திரைத்தாள் கட்டணம் ரூ.20-லிருந்து ரூ.500, அடமானப் பத்திரத்துக்கு ரூ.100-ரூபாயிலிருந்து 500 மற்றும் 1,000 ரூபாய், அறக்கட்டளை ஆவணங்களுக்கு ரூ.200-லிருந்து ரூ.1,000-ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது.
வணிகரீதியிலான பரிவர்த்தனைகளுக்கான தீர்வுக் கட்டணங்களும் உயர்த்தப்பட்டிருக்கின்றன. அதாவது, தனிநபர்கள், கம்பெனிகளுக்கிடையிலான கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டிருக்கின்றன. பிரமாணங்கள், குத்தகை, கடன்கள், காப்பீட்டு பாலீசி உள்ளிட்ட அம்சங்களுக்கும் முத்திரைத்தாள் கட்டணம் அதிகரிக்கப்பட்டிருக்கிறது.
இது குறித்து பதிவுத்துறைத் தலைவர் சிவன்அருள் பேசியதாவது, “ஆண்டொன்றுக்கு 50,000 கோடி வரை முத்திரைத்தாள் அச்சிடுவதற்குச் செலவாகிறது. ரூ.10 முத்திரைத்தாளுக்கும், ரூ.5,000 மதிப்பிலான முத்திரைத்தாளுக்கும் அச்சிடும் செலவு ஒன்றுதான். எனவே, கடந்த 20 ஆண்டுகளாக விலை மாற்றப்பட்டாமல் இ்ருந்ததைக் காலத்தின் தேவை கருதி மாற்றியிருக்கிறோம். குறிப்பாக, மக்கள் தினமும் பயன்படுத்தப்படும் ஆவணங்களுக்கு எந்த விலை ஏற்றமும் இல்லை. அன்றாடம் பயன்பாட்டில் இருக்கும் சான்றிதழ் நகல் மட்டுமே விலை ஏற்றம் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், இது பெரிய பாதிப்பைத் தராது.
மற்ற மாநிலங்களில் ஆராய்ந்துதான் இந்த விலை மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இதற்கான ஆய்வுகளைக் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டோம். அதுதான் தற்போது நிறைவேறியிருக்கிறது. விலை ஏற்றமிருந்தாலும் ரூ.20, ரூ.50 முத்திரைத்தாளும் சார்பதிவாளர் அலுவலகத்தில் கிடைக்கும். இன்னும் இதை எளிமையாக்கவும் அச்சிடும் செலவைக் குறைக்கவும் இ-ஸ்டாம்ப் பயன்பாட்டை அதிகரிக்கும் திட்டமும் இருக்கிறது” என்றார்.
இந்த மசோதவுக்கு ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்பு தெரிவித்த சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த நாகை மாலியிடம் பேசினோம். அவர், “இதில் சாதாரண மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்கிறார்கள். ஆனால், வாரிசு மற்றும் உறுதிமொழி முத்திரைத்தாள் எல்லா தரப்பினர்களாலும் பயன்படுத்தப்படுகிறது. 20 ஆண்டுகளாக மாற்றியமைக்கப்படாத விலையை மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பதில் சி.பி.எம் கட்சிக்கு மாற்றுக் கருத்தில்லை. ஆனால், படிப்படியாக உயர்த்துவதற்கு பதிலாக, திடீரென உயர்த்துவதை நாங்கள் எதிர்க்கிறோம்” என்றார்.
இது குறித்துப் பேசிய வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலா, ``நிறைவேற்றப்பட்ட மசோதா ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுத்தான் நடைமுறைக்கு வரும். ஏற்கெனவே, இரண்டு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு திரும்பப் பெறப்பட்டிருக்கின்றன. குடியரசுத் தலைவர் சட்டமசோதாவுக்கு ஒப்புதல் வழங்க வேண்டும். எனவே, இதை இப்போது பெரிதுபடுத்தத் தேவையில்லை” என்றார்.
from India News https://ift.tt/Hz9qCRe
0 Comments