`இது எடப்பாடி பாலிடிக்ஸ்’ - கர்நாடகா தேர்தலில் இருந்து வாபஸ் பெற்றதன் பின்னணி என்ன?

கர்நாடக சட்டமன்றத்துக்கான பொதுத் தேர்தல் வரும் மே 10-ம் தேதி நடைபெறவிருக்கிறது. அதன்படி, புலிகேசி நகருக்கு கர்நாடக மாநில அவைத்தலைவர் அன்பரசனை களமிறக்கி இருந்தார் அ.தி.மு.க பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அதேபோல, பன்னீர்செல்வமும் தனது தரப்பில் இருந்து வேட்பாளரை நிறுத்தியிருந்தார்.

அன்பரசன்

முன்னதாக, பொதுச் செயலாளர் தேர்தல், பொதுக்குழு மற்றும் அதில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்காக தேர்தல் ஆணையத்திடம் ஆவணங்களை தாக்கல் செய்திருந்தார் எடப்பாடி. அதனை பரிசீலனை செய்த தேர்தல் ஆணையம், ஒப்புதல் அளித்தது. அதன்படி, அன்பரசனுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டது. கூட்டணி கட்சியான பா.ஜ.க-வுக்கு எதிராக போட்டி வேட்பாளர்களை எடப்பாடி, பன்னீரும் நிறுத்தியது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், பா.ஜ.க எதிராக நிலைப்பாட்டில் எடப்பாடி உறுதியாக இருக்கிறார் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், பா.ஜ.க-வின் கோரிக்கையை ஏற்று அன்பரசனை திரும்ப பெறுவதாக அ.தி.மு.க தலைமை அறிவித்து இருக்கிறது.

இதுதொடர்பாக அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஒருவரிடம் பேசினோம். ``கர்நாடக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஏப்ரல் 16-ம் தேதி நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, புலிகேசி நகரில் அன்பரசன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அந்த தொகுதியில் கூட்டணி கட்சியான பா.ஜ.க வேட்பாளரை நிறுத்தியிருந்ததால், கூட்டணிக்குள் தேவையில்லாத குழப்பம் ஏற்படும் என்று பா.ஜ.க டெல்லி நிர்வாகிகள் பேசியிருந்தனர். ஆனால், கர்நாடகா தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதின் பின்னணியே வேறு.

எடப்பாடி பழனிசாமி

ஒற்றைத் தலைமை விவகாரத்துக்கு பின்னர் நடைபெற்ற ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி, இரட்டை இலைச் சின்னம் எங்களுக்குக் கிடைத்தது. அதுவும் அந்தத் தேர்தலுக்கு மட்டும்தான் என நீதிமன்றம் தெளிவாக கூறியிருந்தது. எடப்பாடி பொதுச்செயலாளர் ஆனபின்னர், சின்னத்துக்கு கையெழுத்திடும் உரிமையை பெற்றாக வேண்டும். அதற்குதான் கர்நாடக தேர்தலில் போட்டியிட்டு சின்னத்தை பெற முடிவு செய்தார் எடப்பாடி. ஏனென்றால், தமிழ்நாட்டில், 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு தான் சின்னத்துக்கான வேலை இருக்கும். அதுவரை, சின்னத்துக்கான இறுதி முடிவு, பொதுச் செயலாளருக்கான அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் இழுத்தடிக்க வாய்ப்பு இருக்கிறது.

அ.தி.மு.க - பா.ஜ.க இடையே கூட்டணி தொடருவதாக மத்திய அமைச்சர் அமித் ஷாவும், எங்கள் பொதுச் செயலாளர் எடப்பாடியும் தெளிவாக கூறினாலும், தேர்தல் சமயத்தில் பா.ஜ.க-வுடனான கூட்டணி நிலைப்பாடு எப்படி வேண்டுமானாலும் மாறலாம். அதனால்தான், கர்நாடகா தேர்தலில் வேட்பாளரை நிறுத்த முடிவெடுத்தார். முன்னதாக கூட்டணியில் சீட் கேட்டபோது, அதற்கு சில காரணங்களை முன்வைத்து டெல்லி நிராகரித்துவிட்டது. எனவேதான், பா.ஜ.க-வுக்கு எதிராக புலிகேசி நகரில் வேட்பாளரை நிறுத்தப்பட்டார். அதன் பின்னர், கர்நாடக தேர்தலை காரணம் காட்டி தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் மூலமாக அழுத்தம் கொடுத்து சின்னத்தை பெற்றார் எடப்பாடி.

அமித் ஷா - எடப்பாடி பழனிசாமி

இந்நிலையில்தான், புலிகேசி நகரில் இருந்து வேட்பாளரை வாபஸ் பெற பா.ஜ.க மேலிடத்தில் இருந்து பேசிக் கொண்டே இருந்தார்கள். பலமுறை கோரிக்கை வைத்தும், அதை நிராகரித்தால், கூட்டணிக்குள் தேவையில்லாத சலசலப்பு ஏற்படும். அதேபோல, சின்னத்துக்கான அங்கீகாரம் கையில் கிடைத்துவிட்டதால், தேர்தலில் நிற்க வேண்டிய அவசியமில்லை என தலைமை கருதியது. மேலும், கர்நாடகா தேர்தல் களம் என்பது காங்கிரஸ் பா.ஜ.க-வுக்கு கடுமையான போட்டியை கொண்டிருக்கிறது.  அங்கு போய் அ.தி.மு.க நின்று டெபாசிட் போனால், தேவையில்லாத விமர்சனங்களுக்கு வழிவகை செய்யும். இவை எல்லாவற்றையும் கவனத்தில் கொண்டுதான், வேட்பாளரை வாபஸ் பெற்றியிருக்கிறார் எடப்பாடி” என்றனர் விரிவாக.



from India News https://ift.tt/v7CYwz1

Post a Comment

0 Comments