அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அமெரிக்காவின் பிரபல எழுத்தாளர் (E Jean Carroll) இ.ஜீன் கரோல், நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார். இ.ஜீன் கரோல் இந்த விவகாரம் தொடர்பாக, டொனால்ட் ட்ரம்ப்புக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை ஃபெடரல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இ.ஜீன் கரோல், "1990-களின் நடுப்பகுதியில் மன்ஹாட்டனில் உள்ள பெர்க்டார்ஃப் குட்மேன் டிபார்ட்மென்ட் ஸ்டோரில் முன்னாள் அதிபர் டொனால் ட்ரம்ப்பை சந்தித்தேன்.
அப்போது பெண்களுக்கான உள்ளாடைகளைப் பரிசாக வாங்குவது குறித்து ட்ரம்ப் விளையாட்டுத்தனமாக என்னிடம் ஆலோசனைக் கேட்டார். அதையடுத்து, டிரஸ்ஸிங் அறையில் என்னைத் தள்ளிவிட்டு, பாலியல் வன்கொடுமை செய்தார். 2019-ல் நியூயார்க் இதழால் வெளியிடப்பட்ட எனது புத்தகத்தின் ஒரு பகுதியிலேயே இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தேன். அவரைப் பார்த்துப் பயந்துதான், கிட்டதட்ட இருபது ஆண்டுகளாக இது குறித்து வெளியே தெரிவிக்காமல் இருந்தேன்.
ஆனால் இதை வெளியே கூறாமல் இருப்பதை நினைத்து வெட்கப்பட்டேன். அதற்காகதான் தற்போது உண்மையை வெளிப்படுத்தியிருக்கிறேன். அவர் என்னைப் பற்றி அவதூறு பரப்பினார். அதனால் எனக்கென ஒரு காதல் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியாமல் போய்விட்டது" எனச் சாட்சியம் அளித்திருக்கிறார். ஆனால், ட்ரம்ப் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் ஜோ டகோபினா , "ட்ரம்ப் மீதான இந்த குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை.
இ. ஜீன் கரோல் பணத்திற்காகவும், அரசியல் காரணங்களுக்காகவும், அந்தஸ்துக்காகவும் அரசியலமைப்பைத் தவறாகப் பயன்படுத்துகிறார்" எனத் தெரிவித்திருக்கிறார். முன்னாள் அதிபர் டொரால்ட் டிரம்ப் மீது சுமார் 12 பெண்கள் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கின்றனர். ஆனால் அவர் அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
from India News https://ift.tt/LpIAS7X
0 Comments