``கலவரம் வேண்டாம்; என் உயிரை விடவும் நான் தயார்... ஆனால் நாட்டை பிளவுபட விடமாட்டேன்" - மம்தா ஆவேசம்!

திரிணாமுல் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்றுவரும் மேற்குவங்கத்தில், ராம நவமி, அனுமன் ஜெயந்தி ஆகிய இந்து பண்டிகைகளின்போது பல இடங்களில் கலவரங்கள் அரங்கேறின. இதில் பெரும்பாலான இடங்களில் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டனர். பா.ஜ.க-வும், சில வலதுசாரி அமைப்புகளும் தான் இதனைத் திட்டமிட்டு நடத்தியாக முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார். அதோடு, முஸ்லிம் சிறுபான்மையினரை நாம் தான் பாதுகாக்கவேண்டும் எனவும் மம்தா கோரிக்கை விடுத்தார்.

மம்தா பானர்ஜி

இந்த நிலையில், நாட்டை பிளவுபட விடமாட்டேன் என்றும், அதற்காகத் தன் உயிரையும் விடத் தயாராக இருப்பதாகவும் மம்தா தெரிவித்திருக்கிறார்.

ஈகைத் திருநாளான இன்று கொல்கத்தாவில் நடைபெற்ற நமாஸ் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மம்தா, ``எங்களுக்கு கலவரம் வேண்டாம், அமைதியே வேண்டும். மேற்குவங்கத்தில் அமைதியையே நாங்கள் விரும்புகிறோம். நாட்டில் பிளவுகள் ஏற்படுவதை நாங்கள் விரும்பவில்லை.

அப்படி நாட்டை பிளவுபடுத்த நினைப்பவர்களுக்கு ஒன்றை மட்டும் நான் உறுதியாகக் கூறுகிறேன், `என் உயிரை விடவும் நான் தயார். ஆனால் நாட்டை பிளவுபட விடமாட்டேன்.' யாரோ ஒருவர் பா.ஜ.க-விடம் பணத்தை வாங்கிக்கொண்டு முஸ்லிம்களின் வாக்குகளைப் பிரிக்கப்போவதாகக் கூறுகிறார். ஆனால், பா.ஜ.க-வுக்காக முஸ்லிம் வாக்குகளைப் பிரிக்க அவர்களுக்குத் தைரியம் இல்லை என்பதை இங்கு நான் அவர்களுக்குச் சொல்கிறேன். இதுவே உங்களுக்கு நான் இன்று தரும் வாக்குறுதி.

மம்தா பானர்ஜி

தேர்தல் நடைபெற இன்னும் ஒருவருடம் இருக்கிறது. யார் தேர்ந்தெடுக்கப்படுவார்கள், யார் தேர்ந்தெடுக்கப்பட மாட்டார்கள் என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள். ஜனநாயகம் அழித்துவிட்டால் நாட்டில் எல்லாமே போய்விடும். அரசியல் சாசனம், வரலாறு போன்றவை இன்று மாற்றப்பட்டுவருகிறது. அப்படித்தான் மேற்கு வங்கத்தில் என்.ஆர்.சி-யை (National Register of Citizens) கொண்டுவந்தார்கள். ஆனால் என்.ஆர்.சி-யை இங்கு அனுமதிக்க மாட்டேன் என்று கூறிவிட்டேன்" என்றார்.



from India News https://ift.tt/edT3la1

Post a Comment

0 Comments